E   |   සි   |  

2023-10-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரசு நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை - பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவிப்பு

  • போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் - பாராளுமன்ற விசேட குழுவினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை
  • பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார் மத்தியில் காணப்படும் மன உலைச்சல் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றது - பாராளுமன்ற விசேட குழு தெரிவிப்பு

 

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரசு நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மையான போசாக்கின்மை நிலைமை புலப்படுவதில்லை என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, சிறுவர் போசாக்கின்மை தொடர்பிலான உண்மையான தகவல்களை வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் மூலம் சிறுவர் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான பொதுவான பிரேரணையொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுவதாகவும்  அதிகாரிகளுக்குக் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இலங்கையில் போசாக்கின்மை போன்று அதி போசாக்கு நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களின் தேவையையும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுவதில்லை என்றும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே திரிபோஷ வழங்கப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 06 மாதங்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ வழங்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவித்த நிறுவன அதிகாரிகள், அந்த வயதினருக்கான திரிபோஷ உற்பத்தியில் உரிய அளவுகோல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக திரிபோஷ  தயாரிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சுகாதார அமைச்சினால்  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வயதினருக்கும் திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், விநியோகிக்கப்படும் திரிபோஷா, கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கமைய, போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை உரிய முறையில் இனங்கண்டு, தேவையுடைய பிள்ளைகளுக்கு திரிபோஷா விநியோகிக்கப்படுவது தொடர்பில் மேற்பார்வை செய்யப்படவேண்டும் எனத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பெருந்தோட்டத்துடன் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. மேலும், தோட்டங்களின் சில பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் (MOH) மூடப்படுவதால், தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தலைவர் சுட்டிக்காட்டினார். குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் தோட்டத்திலுள்ள சுமார் 3000 குடும்பங்களை மேற்பார்வை செய்யவேண்டியுள்ளதால், நடைமுறை ரீதியாக எழும் சிரமங்கள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 80% பேர் பெண்கள் எனவும், அவர்கள் காலை வேலைகளுக்குச் சென்ற பின்னரே பெரும்பாலும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் அந்தந்த வீடுகளுக்கு வருவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். அதனால், அவர்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகள் கிடைக்காமல் போகும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக, அதிகபட்சமாக 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்ப சுகாதார சேவை அதிகாரியை ஏற்பாடு செய்வதன் மூலம் பயனுள்ள சேவையைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல், புதிதாகப் பிறக்கும்  குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்று அதிகாரிகளிடம் குழு சுட்டிக்காட்டியது.

இந்த நாட்டில் சிறுவர் போசாக்கின்மை சரியான உணவு கிடைக்காமை காரணமாக மாத்திரம் ஏற்பட்டுள்ள நிலைமை மட்டுமல்லாது, தவறான உணவுப் பழக்கங்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்பொழுது முன்பள்ளிச் சிறுவர்களுக்கு போசாக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் 60 ரூபாவை அதிகரிக்க முடிந்தால் வழங்கப்படும் போசாக்கு உணவை மேலும் மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பெருந்தோட்டங்களுக்குத் தனியான துணை ஊட்டச்சத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு பிரதேசங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் அமுல்படுத்துவதுடன் அவை அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்  குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர்களின் போசாக்கின்மையை தடுக்கும் வகையில், பல அரச நிறுவனங்கள் அதிகளவு பணம் செலவழித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய குழு, தேவையான ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒரு அரசு நிறுவனம் மூலம் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ உபுல் கலப்பத்தி மற்றும் குழுவின் தலைவரின் அனுமதியதுடன் கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

6 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks