E   |   සි   |  

2023-09-21

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை தேயிலை சபை கோப் குழுவின் உப குழு முன்னிலையில்

  • தேயிலை சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கோப் குழு கவலை
  • தேயிலை தொழிலுடன் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றிணைக்க முன்மொழிவு
  • தேயிலை ஆணையாளராக பதவி வகிப்பவர் பதில் பணிப்பளார் நாயகமாக செயற்படுகின்றமை குறித்து கோப் குழு கவனம்
  • அமைச்சரவை அனுமதி இருக்கும் போது பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்) பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து கோப் குழு கவனம்
  • ஒப்பந்த அடிப்படையில் தேயிலை சந்தைப்படுத்தல் சபைக்கு தகவல் தொழிநுட்ப கட்டமைப்பொன்று அமைப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் அதனை இன்னும் செயற்படுத்தாமை குறித்து குழு அதிருப்தி
  • இலங்கை தேயிலை சபையின் சந்தைப்படுத்தல் பிரச்சார நிதியத்தின் நிலுவை 9 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நிதியை செலவு செய்கின்றமை தொடர்பில் கோப் குழு அறிக்கை கோரல்
  • 2020 இல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு மாறாக செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரை நியமித்தமை தொடர்பில் கவனம்

 

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.09.19 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் இலங்கை தேயிலை சபை அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதுடன், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி. மெல் உள்ளிட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 2018 செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை தேயிலை சபை கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த போது வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது வினவப்பட்டது.

இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது

தேயிலை கைத்தொழில் துறை உள்வாங்கப்படும் வகையில் கோப் உப குழு நியமனம்

தேயிலை கைத்தொழில் துறை உள்வாங்கப்படும் வகையில் கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு இதன்போது கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். அதற்கமைய எதிர்காலத்தில் இந்த உப குழுவுக்குத் தலைவர் ஒருவரை நியமிப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். விசேடமாக இலங்கை தேயிலை சபைக்கு முன்வைத்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள் போதாது எனவும் இதனால் இந்தக் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உப குழுவை நியமித்த பின்னர் விரிவாக விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகக் குழு தெரிவித்தது.

தேயிலை ஆணையாளராகப் பதவி வகிப்பவர் பதில் பணிப்பளார் நாயகமாகச் செயற்படுகின்றமை குறித்து கோப் குழு கவனம்

தேயிலை ஆணையாளராகப் பதவி வகிப்பவர் பதில் பணிப்பளார் நாயகமாக செயற்படுகின்றமை குறித்து கோப் குழு அதிருப்தியை வெளியிட்டது. இதனால் அக்கறைகளின் முறண்பாடு நிலை புலப்படுவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்றதால் பதில் பதவிக்காக இந்த அதிகாரியை நியமித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பான நேர்முகப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, விரைவாக வெற்றிடத்தை நிரப்புவதற்கு குழு ஆலோசனை வழங்கியது.   

அமைச்சரவை அனுமதி இருக்கும் போது பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்) பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து கோப் குழு கவனம்

அமைச்சரவை அனுமதி இருக்கும் போது பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்) பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, இந்தப் பதவி உள்ளிட்ட 4 நிறைவேற்றுப் பதவிகள் மற்றும் 81 ஏனைய பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குழு வினவியது. 2018 இல் இலங்கை தேயிலை சபை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்தப் பதிவுகள் தேவையில்லை எனக் குறிப்பிட்டதாகவும் அதனால் ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, 2016 இல் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள இந்தப் பதவியில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை அமைச்சரவையை தட்டிக்கழித்து செயற்படுவதாகும் என கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறு அமைச்சரவையின் தீர்மானத்தை தட்டிக்கழித்து செயற்படுவதற்கு இந்த நிறுவனத்துக்கு முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். கோப் குழுவின் அறிவிப்பு இதன்போது போதுமானதாக இல்லை என்றும், இந்தப் பதவிகள் தேவையில்லை எனின் தேவையான சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் அதிகாரிகள் வழங்கும் பதில்கள் தொடர்பில் கோப் குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டார்.

அத்துடன், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தேயிலை ஊக்குவிப்புக்கு முறையின்றி பாரியளவு நிதி செலவு செய்வது தொடர்பில் குழுவின் அதிருப்தி வெளியிடப்பட்டது. வர்த்தக விளம்பரங்களுக்கு சந்தைப் பெறுமதியை விடக் கூடிய அளவில் விளம்பர நிறுவனங்களுக்கு நிதி செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், முற்பணத்துக்குப் பதிலாக குறித்த விளம்பரங்களுக்குக்கான முழுத் தொகையையும் வழங்கியமை குறித்து குழு வினவியது. அதற்கமைய, இது தொடர்பில் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு கோப் குழு பரிந்துரை வழங்கியது.

ஒப்பந்த அடிப்படையில் தேயிலை  சந்தைப்படுத்தல் சபைக்குத் தகவல் தொழிநுட்பக் கட்டமைப்பொன்று அமைப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் அதனை இன்னும் செயற்படுத்தாமை குறித்து குழு அதிருப்தி

தனியார் நிறுவனமொன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தேயிலை சந்தைப்படுத்தல் சபைக்குத் தகவல் தொழிநுட்பக் கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் அதனை இன்னும் செயற்படுத்தாமை குறித்து குழு அதிருப்தியை வெளியிட்டது. இதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனை சேவைக்கமைய கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 53,964,995  ரூபாய்க்கு தனியார் நிறுவனமொன்றை தெரிவு செய்தமை தொடர்பில் இதன்போது வினவப்பட்டது. அதற்கமைய, 18 மாதங்களில் இந்தக் கட்டமைப்பைத் தயாரிக்க வேண்டியிருந்தாலும் 3 வருடங்கள் கடந்தும் இந்த தகவல் தொழிநுட்ப கட்டமைப்பைத் தயாரிக்காமை குறித்து குழு அதிருப்தியை வெளியிட்டது. இந்த முழு செயற்பாட்டுக்கு தற்பொழுது 7 வருடங்கள் சென்றுள்ளதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியது. இதனால் 3 மாதங்களில் இந்த நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைப்பதாகவும் அதன்போது இந்த விடயம் தொடர்பில் பதில் தேவையெனவும் குழு தெரிவித்தது.

இலங்கை தேயிலை சபையின் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு நிதியத்தின் நிலுவை 9 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நிதியை செலவு செய்கின்றமை தொடர்பில் கோப் குழு அறிக்கை கோரல்

இலங்கை தேயிலை சபையின் தேயிலை ஊக்குவிப்பு பிரச்சாரத்துக்கு நிதி செலவு செய்கின்றமை தொடர்பில் திருப்தியில்லை என்றும் தேயிலை சபையின் சந்தைப்படுத்தல் பிரச்சார நிதியத்தின் நிலுவையாகக் காணப்படும் 9,869,442,652 ரூபாய் நிதியை செலவு செய்வதற்கு திட்டமிட்டுள்ள முறையை இரண்டு வாரங்களுக்குள் கோப் குழுவுக்கு அறிக்கை வழங்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது.

2020 இல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு மாறாக செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரை நியமித்தமை தொடர்பில் கவனம்

2020 இல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு மாறாக செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரை நியமித்தமை தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சட்டத்துக்கு அமைய இதற்கான அதிகாரம் காணப்படும்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய, இது தொடர்பில் இரண்டு கருத்துக்கள் காணப்படுவதாகவும், அதனால் இரண்டு வாரங்களில் அறிக்கை வழங்குமாறும் கோப் குழு பரிந்துரை வழங்கியது.

அத்துடன், உலக சந்தையில் 'சிலோன் டீ' இற்கான கேள்வி குறைந்துள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார், கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ எஸ்.எம். மரிக்கார், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

8 7

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks