E   |   සි   |  

2023-09-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் பல கோப் குழுவில் புலப்பட்டன

  • இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருமானத்தை அதிகரிப்பது, செலவீனத்தை முகாமைத்துவம் செய்வது மற்றும் செயல்திறனை அதிகரிப்பது தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் முன்மொழிவுகளை கோப் குழுவிடம் வழங்கப் பணிப்புரை
  • ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவுவைக்க வேண்டிய தொகை 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை செலுத்தப்படாமை குறித்து அவதானம்
  • கிழக்கு முனையத்தின் செயல்திறனை அதிகரிக்க பாரிய அளவிலான 12 பாரம்தூக்கிகள் மற்றும் 40 தானியங்கி கென்ரி பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தக்காரருடன் மேற்கொள்ளப்பட்ட 282.56 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து அவதானம்
  • கொழும்பு துறைமுகம் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொள்கலன்களைக் கையாளும் கேந்திர நிலையமாக 2001ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் 81% இலிருந்து 28% வரை குறைந்துள்ளமை தொடர்பில் அவதானம்
  • 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் கொழும்பு, காலி, திருகோணமலை துறைமுகங்களில் கடற்படைக் கப்பல் பயணங்கள் குறைந்தமை குறித்துக் கலந்துரையாடல்
  • காலி துறைமுகத்தில் பல்நோக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்காக யுனெஸ்கோவிடமிருந்து அனுமதி பெறுவதில் 3 வருட கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், இத்திட்டத்தை இடைநிறுத்துவது குறித்து அவதானம்
  • துறைமுக அதிகாரசபையின் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 914 ஆக இருக்கும் போது குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் அவதானம்
  • அதிகாரசபையின் சகல நுழைவாயில்கள் மற்றும் களஞ்சியங்களில் CCTV கமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கமை குறித்தும் ஆராய்வு
  • 2022 ஆம் ஆண்டில் உணவுக்காக 1.2 பில்லியன் ரூபா செலவீனம்
  • இலங்கை துறைமுக அதிகாரசபை 2023.12.08ஆம் திகதி மீண்டும் கோப் குழுவுக்கு அழைக்கப்படும்
  • தற்போதுள்ள நிர்வாகக் குறைபாடுகளை மீண்டும் கூடும் திகதிக்கு முன்னர் தீர்க்குமாறு குழு பணிப்புரை
  • பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ ரஞ்சித் பண்டார தலைமையில் 05.09.2023ஆம் திகதி கூடிய அரசாங்கப் பெறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை அழைக்கப்பட்டிருந்தது.

 

இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2021ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதிகார சபையின் தற்போதைய செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னாட் உள்ளிட்ட அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

2022 ஜூன் 22ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, துறைமுக அதிகாரசபைக்கு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இங்கு பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன,

இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருமானத்தை அதிகரிப்பது, செலவீனத்தை முகாமைத்துவம் செய்வது மற்றும் செயல்திறனை அதிகரிப்பது தொடர்பில் 3 மாதங்களுக்குள் முன்மொழிவுகளை கோப் குழுவிடம் வழங்கப் பணிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருவாயை அதிகரிப்பது, செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் 3 முன்மொழிவுகளை கோப் குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் கௌரவ ரஞ்சித் பண்டா பரிந்துரைத்தார். துறைமுக அதிகாரசபையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்கவுள்ளதாகவும் அதற்கு முன்னர் இந்த 3 அறிக்கைகளையும் கோப் குழுவிடம் வழங்குமாறும் அவர் பரிந்துரைத்தார். அதன்படி, மூன்று முன்மொழிவுகளையும் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவுவைக்க வேண்டிய தொகை 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை செலுத்தப்படாமை

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கடந்த சில வருடங்களுக்கான நிதி ரீதியான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இலங்கை துறைமுக அதிகாரசபையினால் ஈட்டப்பட வேண்டிய இலாபத்தில் ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டிய 4.975 மில்லியன் ரூபா செலுத்தப்படாமை குறித்து கோப் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகளிடம் கோரப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் இந்த நிதியை இடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

கிழக்கு முனையத்தின் செயல்திறனை அதிகரிக்க பாரிய அளவிலான 12 பாரம்தூக்கிகள் மற்றும் 40 தானியங்கி கென்ரி பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம்

கிழக்கு முனையத்தின் செயல்திறனை அதிகரிக்க பாரிய அளவிலான 12 பாரம்தூக்கிகள் மற்றும் 40 தானியங்கி கென்ரி பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தக்காரருடன் மேற்கொள்ளப்பட்ட 282.56 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து கோப் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. 2022 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகாரசபை கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது இது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக குழுவிற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 2021 ஆம் ஆண்டு இது தொடர்பான உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் இலங்கை வங்கியினால் கடன் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்தக் கொடுப்பனவுகளைச் செய்ய முடியவில்லை என அதிகாரிகள் பதில் வழங்கினர்.   இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாமையால் எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். மேலும், இதற்கான செயல்பாட்டுச் செலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து அறிக்கை அளிக்க கோப் குழு பரிந்துரைத்தது.

கொழும்பு துறைமுகத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் கையாளும் திறன் 2001ஆம் ஆண்டு 81% இலிருந்து 2022ஆம் ஆண்டு 28% வரை குறைந்துள்ளது

கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களைக் கையாளும் துறைமுக அதிகாரசபையின் திறன் 2001ஆம் ஆண்டு 81% ஆகக் காணப்பட்டதுடன் இது 2022ஆம் ஆண்டு 28% ஆகக் குறைவடைந்திருப்பது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. மேற்கு முனையமானது தனியார் முதலீட்டாளர்களின் செயற்பாடுகளின் ஊடாக வருமானத்தைப் பெருக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாகத் தனியார் துறையுடன் போட்டியிடும் திறன் உருவாக்கப்பட வேண்டுமென கோப் குழு சுட்டிக்காட்டியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான விரிவான திட்டத்தை தயாரிப்பது குறித்தும் குழு வினவியது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தயாரிக்கப்பட்ட விரிவான திட்டங்களில் 50% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை மீண்டும் குழு முன்னிலையில் அழைக்கப்படும் போது இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர்.

2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு கடற்படைக் கப்பல்களின் வருகை குறைவு குறித்து அவதானம்

2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு கடற்படைக் கப்பல்களின் வருகை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது. 2020ஆம் ஆண்டு முதல் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஒரு கப்பல் கூடப் பயணிக்காமை குறித்து கோப் குழு கேள்வியெழுப்பியது.  2022ம் ஆண்டு பற்றாக்குறை இருந்ததாகவும், தற்போது சீராகி வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக கொழும்பு துறைமுகம் தவிர்ந்த ஏனைய துறைமுகங்கள் சீமெந்து போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும் கடந்த காலங்களில் இந்த மூலப்பொருட்களின் இறக்குமதி குறைந்தமையே இதற்கு காரணம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனால் மாகாண மட்டத்தில் தற்போதுள்ள துறைமுகங்களை மேலும் செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோப் குழு ஆலோசனை வழங்கியது.

காலி துறைமுகத்தில் பல்நோக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அது இடைநிறுத்தப்பட்டமை

காலி துறைமுகத்தில் பல்நோக்கு முனையத்தை நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும், யுனெஸ்கோவின் அனுமதியை பெறுவதில் 3 வருட கால தாமதம் ஏற்பட்டதால் அந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2006 மார்ச் 28ஆம் திகதி சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கியும் இலங்கை அரசாங்கமும் இது தொடர்பான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் காலி கோட்டையை நிர்மாணிக்க யுனெஸ்கோவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக இந்த அனுமதி பெறப்படவில்லை.எனவே, இத்திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செலவிடப்பட்ட 418 மில்லியன் ரூபா ஆலோசனைக் கட்டணமே நிகர செலவாக அவதானிக்கப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் காலி துறைமுகத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.  ஆனால் எதிர்காலத்தில் காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதால் இந்தப் பணம் வீண் செலவாகாது என அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்புபட்டில்லை எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

துறைமுக அதிகாரசபையின் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 914 ஆக இருக்கும் போது குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் கவனம்

துறைமுக அதிகாரசபையில் 914 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரும் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது, 2021 ஆம் ஆண்டிலும் மேலதிக நேர கொடுப்பனவுகளாக பணம் வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்படுவதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியது. இதன்படி, அதிகளவிலான ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு கோப் குழு, முகாமைத்துவத் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்தது. மூன்று மாதங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தப்பட்டது.

அதிகாரசபையின் சகல நுழைவாயில்கள் மற்றும் களஞ்சியங்களில் CCTV கமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்காமை குறித்தும் ஆராய்வு

இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் களஞ்சியங்களை உள்ளடக்கும் CCTV கமராக்கள் பொருத்தப்படாமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. தேவையான இடங்களுக்கு படிப்படியாக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 538 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சுமார் 400 கமராக்கள் பொருத்தப்படும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 6 மாதங்களுக்குள் இந்த சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருகோணமலை துறைமுகத்தில் காணப்படும் Night Navigation அமைப்பு அதிகபட்சமாக செயற்படவில்லை

திருகோணமலை துறைமுகத்தில் காணப்படும் Night Navigation அமைப்பு பொறிமுறை அதிகபட்சம் செயற்படுத்தப்படாமை குறித்தும் கோப் குழு கேள்வியெழுப்பியது.

2022 ஆம் ஆண்டில் உணவுக்காக 1.2 பில்லியன் ரூபா செலவு

2022ஆம் ஆண்டில் உணவுக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. இதன்படி, சிற்றுண்டிகளுக்காக 498 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2023 டிசம்பர் 8 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகார சபையை மீண்டும் கோப் குழுவில் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரன் விக்கிரமரத்ன, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத்குமார சுமித்திராரச்சி, (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

12

34

5



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks