பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-08-18
செய்தி வகைகள் : குழு செய்திகள்
விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நெல் கொள்வனவுக்கு சந்தைப்படுத்தல் சபைக்குப் போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை. திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியைக் கொண்டு ஓரளவுக்கு நெல் கொள்வனவை மேற்கொண்டுள்ளோம். இருந்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் (ஆக. 09) நடைபெற்ற கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நெல் கொள்வனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் கௌரவ அமரவீர இதனைத் தெரிவித்தார்.
நெல்லைக் கொள்வனவுக்காக விதிக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டாலும் அதனை விடக் குறைந்த விலையிலேயே அரிசியை விற்பனை செய்யும்நிலை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பின்னணியில் நெல் கொள்வனவு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் முற்கூட்டியே விதைப்பினை ஆரம்பிப்பதால் உரங்களைக் கூடிய விலையில் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைய போகம் குறித்து தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் போகங்கள் ஆரம்பிக்கப்படும் காலத்தைப் பொதுவானதாகத் தீர்மானித்து அதனை அறிவிப்பது பற்றிக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
அத்துடன், முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்ததாகவும், படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் முட்டை விலையைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் (வைத்தியகலாநிதி) கௌரவ ரமேஷ் பத்திரண, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டி.பி.ஹேரத், கௌரவ விஜித பேருகொட, கௌரவ மொஹான் பிரியதர்ஷன. சில்வா, கௌரவ கே.காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எச்.எம்.பௌசி, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எல்.எம். அதா உல்லா, கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ எஸ்.சிறிதரன், கௌரவ சாரள்ஸ் நிர்மலநாதன், கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங் நெல்சன், கௌரவ கலையரசன், கௌரவ ஜகத்குமார சுமித்திராரச்சி, கௌரவ குலசிங்கம் திலீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



