E   |   සි   |  

2023-08-17

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வி தொடர்பில் தென்கொரிய பல்கலைக்கழக மாணவர்கள் வியப்படைந்ததாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வி பற்றிக் கேள்வியுற்றதும் தாம் வியப்படைந்ததாகவும், இவ்வாறு வழங்கப்படும் இலவசக் கல்வி மூலம் உருவாக்கப்படும் மாணவர் தலைமுறை இலங்கையைக் கட்டியெழுப்புவதில் சிறப்பான பங்களிப்பை ஆற்றுவார்கள் என நம்புவதாகவும் தென் கொரிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் குழு தெரிவித்தது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் கொரிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (ஆக. 17) பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களைப் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தனர்.

வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கே தென்கொரியாவில் முற்றிலும் இலவசமான கல்வி வழங்கப்படுவதாகவும், இருந்தபோதும் இலங்கையில் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் இலவசமாகக் கல்வியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் பிரதி சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

நுவரெலியா சாந்திபுர கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சிறுவர்களுக்கான தன்னார்வ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்கொரியாவின் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி குறித்து அவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், அது தொடர்பில் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ பதில்வழங்கினார்.

தென்கொரியாவில் உள்ள ஜொன்ஹாம், தேகு, சொம்முங் போன்ற பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவ பிரதிநிதிகளே இவ்வாறு தெரிவித்தனர்.

நுவரெலியா சாந்திபுர பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருக்கும் இந்த மாணவர்கள் கலாசார நிகழ்ச்சிகளை நடாத்துதல், சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான சில பயிற்சிகளை வழங்குதல், பாடசாலை கட்டடங்களைச் சீர்செய்தல், உடல் ஆரோக்கிய நிகழ்ச்சிகளை நடத்துதல், விளையாட்டு போட்டிகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்குத் தென்கொரிய பல்கலைக்கழக மாணவர் சமூகம் பல்வேறு செயற்பாடுகள் மூலம் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்வேறு துறைகளில் இலங்கைக்குத் தென்கொரியாவிடமிருந்து உதவிகள் கிடைப்பதாகவும், தென்கொரிய பல்லைக்கழகங்களின் மாணவர்கள் தன்னார்வமாக முன்வந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். இவ்வாறு முன்வந்துள்ள தென்கொரிய மாணவர்களுக்கு இலங்கை சார்பில் பிரதி சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தத் தென்கொரிய மாணவர்கள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவை சந்திப்பதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த போது அவர்களுடன் செமால் பவுண்டேஷன் இலங்கையின் வதிவிட இயக்குனர் Choi Sung Woo மற்றும் தென் கொரியாவில் உள்ள செமால் அறக்கட்டளையின் பிரதான அலுவலக அதிகாரி Min Sung Ho ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென்கொரியாவின் சாமுவேல் அறக்கட்டளையினால் (Saemaul Fundation) இந்த தன்னார்வ நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

 

2 11

13 16



தொடர்புடைய செய்திகள்

2026-09-14

எம்.எஸ் அப்துல் வாசித் அவர்கள் இராஜினாமா செய்தமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததாகச்  சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்களின் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


2026-09-11

புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.


2026-09-11

செப்டெம்பர் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை கௌரவ சபாநாயகர் அவர்கள் சபையில் அறிவிப்பார் என்பதற்கு உட்பட்டதாக, குறித்த இரண்டு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks