பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-07-24
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.07.20 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள 'உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி சபை' அழைக்கப்பட்டிருந்தது. சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களில் பொதுமக்கள் பயன்பாடு சேவைகளை நடாத்திச் செல்வதற்கு சலுகை வட்டியில் நிதி வசதிகளை வழங்கும் நோக்கில் 1916 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க கட்டளைச் சட்டம் மூலம் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த சட்டம் பலமுறை திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 1993 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க சட்டத்துக்கு அமைய உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்போது நிறுவனத்தின் 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையுடன் சம்பந்தப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டத்தைத் திருத்துவதன் அவசியம்
இது வங்கியொன்றுக்கு ஒப்பான நிதி நிறுவனம் என்பதால் காலத்துக்கு ஏற்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சட்டத்தை திருத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சட்டத்துக்கு அமைய அமைச்சின் செயலாளரே தலைவராக செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதால் அந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி திருத்தம் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
2018 இல் ஆசிய மன்றத்தினால் நிறுவனத்தை மீள்கட்டமைப்பு செய்வது தொடர்பில் அறிக்கையொன்று வழங்கியிருந்ததாகவும், அதற்கமைய செயற்பட்டிருந்தால் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்க வாய்ப்பிருந்ததாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொடுள்ள பின்னணியில் இது தொடர்பான உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.
பணிப்பாளர் நாயகம் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளை முழுநேர நிரந்தரப் பதவிகளாக மாற்றுவதன் தேவை
பல வருடங்களாகப் பணிப்பாளர் நாயகம் பதவி பதில் பதவியாகக் காணப்படுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், நிரந்தரத்தமான உள்ளகக் கணக்காய்வு அதிகாரி இல்லாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் மற்றும் முழு நேர நிரந்தர உள்ளகக் கணக்காய்வு அதிகாரியை நியமிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை இரண்டு வாரங்களில் அறிவிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டது.
கடன் வழங்குதல், வேலைத்திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் கடன்களை அறவிடுதல் என்பவற்றுக்கு முறையான வழிமுறை இல்லாமை
2023 ஆம் ஆண்டில் 249 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9 வேலைத்திட்டங்கள் நிதியத்துக்குக் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இதுவரை பணிப்பாளர் சபை கூடி அது தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை என்பது புலப்பட்டது.
அதற்கமைய, கடன் வழங்குதல் மற்றும் மீள அறவிடுதல் தொடர்பான அளவுகோல்கள், கடன்களை மீள அறவிடுவதன் இயலுமை, கடன்களை பயன்படுத்தும் வேலைத்திட்டங்கள் மற்றும் வினைத்திறன் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி முறையான வழிமுறை மற்றும் வழிகாட்டலை தயாரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வழிமுறைக்கு அமைய கடன் வழங்கும் குழு செயற்படுவதன் அவசியம் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாகாணங்களுக்கும் கடன்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறைமையை சீராக்குவதன் அவசியம்
2021 இல் கடன் வழங்கப்பட்டுள்ள 847.7 மில்லியன் ரூபாயில் 691 மில்லியன் ரூபாய் வடமேல் மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் வெளிப்படுத்தினர். வேலைத்திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் போது ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் முறைமையை சீரமைக்குமாறு குழு பரிந்துரைத்தது.
உள்ளகக் கணக்காய்வை சீரமைத்தல்
உள்ளகக் கணக்காய்வை முறையாக மேற்கொள்ள உள்ளகக் கணக்காய்வு அதிகாரி ஒருவர் இல்லாமை காரணமாக கடந்த ஆண்டுகளில் சரியாகக் கணக்காய்வு இடம்பெறாமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நிரந்தர உள்ளகக் கணக்காய்வு அதிகாரியொருவரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகளை ஒரு மாத காலத்துக்குள் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், தேசியக் கணக்காய்வு ஆணைக்குழுவின் பரிந்துரையை செயற்படுத்தடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
2019-2023 ஐந்தாண்டு காலத்துக்கான கூட்டுத்திட்டத்தை தயாரித்திருந்தாலும் அதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமை சிக்கலுக்குரியது என இதன்போது இணங்காணப்பட்டது. அதற்கமைய, 2023-2028 வரையான கொட்டுத்திட்டத்துக்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
1995 இல் பல் பயிர் அபிவிருத்தித் திட்டத்தின் தம்புள்ளை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் நிதி, கண்டி மாநகர சபைக்கு வழங்கப்பட்ட 60.9 மில்லியன் ரூபாய் நிதியை மீள அறவிடாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக அந்தப் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கும் ஒரே நிறுவனமான நிதியத்தின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறன் அடைய வேண்டும் என கோப் குழுவின் தலைவரினால் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இன்னும் ஆறு மாதங்களில் இந்த நிறுவனத்தை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ்.எம். மரிக்கார், கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-08
திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-07
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் விடயங்கள் கேட்டறிந்தது.குறித்த குழு கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு அமைய தித்வா சூறாவளியின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியத்திஸ்ஸ அவர்களும் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். தித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



