01

E   |   සි   |  

2023-06-16

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை இராணுவத்தினன் உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடை மற்றும் கனேடியப் பிரதமரின் இனப்படுகொலை தொடர்பான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டுக்கு துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தல்

  • பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுவது இராணுவத்தினரை சரியான அளவாகப் பேணுவதே அன்றி ஆட்குறைப்புச் செய்வது அல்ல என்றும், இதன் ஊடாக இராணுவ முகாம்களை அகற்றுவது பிராந்தியத்தின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களில் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிப்பு

 

இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையானது இராணுவத்தினரின் மன உறுதியைப் பாதிப்பதால், அதற்கு எதிராக நிற்க வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் முக்கியத்துவத்தையும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) கௌரவ சரத் வீரசேகர வலியுறத்தினார். பாராளுமன்றத்தில் அண்மையில் (07) கூடிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவுக்கு தலைமைதாங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு தூதுவர்கள் ஊடாகவும் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் ஊடாகவும் வலுவாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நாட்டின் இராணுவ உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்ப்பதற்கு தேவையான அனைத்து உண்மைகளையும் சேகரித்து உரிய தூதுவர்களிடம் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், தருஸ்மன் மற்றும் OICL ஆகிய இரண்டு அறிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, இலங்கை ஒரு சர்வதேச இராணுவ மோதலைக் கொண்டிராத நாடு என்பதால் இவ்வாறு பயணத்தடை விதிப்பது ஜெனீவா உடன்படிக்கைக்கு எதிரானது என்ற விடயத்தை வலியுறுத்துமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக கனேடியப் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் இவ்வாறான கருத்துக்களுக்கு இலங்கை பொறுப்பல்ல என்பதை மற்ற நாடுகளுக்கு அறிவித்தமை குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறும் குழு வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கோரியது.

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அளவில் பேணுவது, சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களைத் திரும்பப் பெறுவது மற்றும் அது தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் குழு கேட்டறிந்தது. இராணுவத்தினரை முறைப்படுத்துவது ஆட்குறைப்புச் செய்வது அல்ல என்றும், முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்பு, பிராந்தியத்தின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களில் பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், தீவிரவாதத்தை தோற்கடிக்க செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ நிமல் பியதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-06-03

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.


2026-06-03

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-02

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 1000 மில்லியன்

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-29

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன

அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks