பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-06-01
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.05.25 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் மீளாய்வு இடம்பெற்றது.
இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டுத் திட்டம் இல்லாமை
நிறுவனம் தொடர்பான திட்டவட்டமான கூட்டுத் திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் இல்லாமை குறித்து குழுவின் தலைவர் மிகவும் அதிருப்தியை வெளியிட்டார். வைத்தியசாலையின் மாதிரியின் தன்மை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வைத்தியசாலை எந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் சபை மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு தெளிவான கருத்து இல்லை என்பது இதன்போது அவதானிக்கப்பட்டது. வர்த்தகப் பிரிவு, மனிதவளப் பிரிவு, சந்தைப்படுத்தல் அல்லது வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இல்லாமை குறித்து குழுவின் தலைவர் வினவினார். இது அரசாங்க வைத்தியசாலையா, இலாபம் அரச வர்த்தக நிறுவனமா அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஹைபிரிட் நிறுவனமா என்பது தொடர்பில் அவர் மீண்டும் மீண்டும் வினவினார். வருகைதந்த அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை வைத்தியசாலை சபை ஏற்றுக்கொண்டது.
மேலும், சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு தொடர்பில் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் ஆலோசனையோ அல்லது அறிவித்தலோ அறிவிக்கப்படாமை காரணமாக, ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறைந்தபட்சம் ஆட்சேர்ப்பை நியாயப்படுத்தக்கூடிய சரியான ஆட்சேர்ப்பு நடைமுறை (SOR) இல்லை என்பதுடன் அது வைத்தியசாலையை கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவதாகவும் காணப்படுகின்றது.
கோப் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட மற்றும் விரிவான விசாரணையின் பின்னர், வைத்தியசாலைக்குப் பொருத்தமான மாதிரியை விரைவாகத் தீர்மானிக்க கோப் குழுவின் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தலைவரினால் தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து, கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, முறையான கூட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஒரு தொழில்முறை அமைப்பிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் மேலும் ஆலோசனை வழங்கினார்.
கடந்த கோப் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை
கடந்த கோப் குழு கூட்டத்தை அடுத்து வைத்தியசாலையின் சபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனம் கடந்த காலத்தில் நட்டமடைந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாகத் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களை பணிப்பாளர் சபைக்கு நியமிப்பது தொடர்பிலும் நியமிக்கும் நடைமுறை தொடர்பிலும் அறிக்கை கோரப்பட்டிருந்தது. எனினும், இது தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.
வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணியின் அளவை திட்டவட்டமாகக் கண்டறியாமை
நில அளவைத் திணைக்களத்தினால் சரியான கணக்கெடுப்பு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர், சட்டவிரோத குடியிருப்பாளர்கள் காணியின் பகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் புதிய கட்டடம் அமைப்பதற்குக் காணியின் சரியான திட்டமொன்று தேவைப்பட்டது. அதனையடுத்து காணியை அளப்பதற்கு தனியார் அளவையாளர் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில காலம் சென்று உண்மையான திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளமை புலப்பட்டது.
எனினும், பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் சபையின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அளவைத் திட்டத்தில் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலைமையை கண்டறிந்து, அதற்கு அதிக முன்னுரிமை அளித்து நியாயமான தீர்வை முன்வைக்குமாறு மேலே குறிப்பிடப்பட்ட கோப் குழுவின் தலைவர் உப குழுவுக்கு ஆலோசனை வழங்கினார்.
செயற்பாட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 2023.05.20 ஆம் திகதி மீண்டும் கோப் குழுவே முன்னிலையில் ஆஜராகுமாறு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், கோப் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் 2023.07.20 ஆம் திகதி வைத்தியசாலையின் சபையை மீண்டும் அழைத்து காணி மற்றும் கோரப்பட்ட அறிக்கைகள் தாமதமடைவது தொடர்பில் கண்டறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெறுமதி தொடர்பில் இதன்போது குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தற்பொழுதும் ஒரு மில்லியனுக்கும் குறைந்த பெறுமதியின் இருதய சத்திர சிகிச்சையை இந்த வைத்தியசாலையில் செய்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், நிறுவனத்தை முறையாகக் கட்டமைத்து நோக்கம் மற்றும் சரியான நிறுவன வழிகாட்டலுக்கு விரைவாக முன்னுரிமை வழங்குமாறு பணிப்பாளரிடம் வேண்டிக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-16
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-14
ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமானச் சேவையின் விமானத் தொகுதி போதுமானதாக இல்லாமை மற்றும் அந்த விமானங்கள் சுமார் 12 வருடங்கள் பழைமையானவையாக இருப்பதால் விமானப் பயணங்களைப் பாதிக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணங்களால் தாமதம் ஏற்படும்போது, மாற்று விமானங்களைப் பயன்படுத்துவதில் காணப்படும் மட்டுப்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து வலையமைப்பும் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வழமையான கொள்வனவு நடைமுறைகள் தோல்வியடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகாலத் தாமதங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலைக்குத் தீர்வாக விமானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொள்வனவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கொள்வனவு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காக அமைச்சு மட்டத்தில் விசேட கொள்வனவுப் பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.புதிய கொள்வனவு வழிகாட்டுதல்களின் கீழ் விமானத் தொகுதியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதமளவில் புதிய குறுகிய உடற்பகுதியைக் கொண்ட (Narrow-body) விமானமொன்றையும், அகன்ற உடற்பகுதியைக் கொண்ட (Wide-body) இரண்டு விமானங்களையும் விமானத் தொகுதியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டது. 2029ஆம் ஆண்டளவில் விமானத் தொகுதியை ஆகக்குறைந்தது 29 விமானங்களாக அதிகரிப்பது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிடப்பட்டது.ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக, பழைய வங்கிக் கடன்கள் மற்றும் பிணைமுறிக் கடன்கள் உள்ளிட்டவற்றைப் பொறுப்பேற்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை திறைசேரி முன்னெடுத்துள்ளதாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், விமானங்களுக்கான குத்தகைக் கட்டணங்களைக் குறைத்தல், எரிபொருள் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விமான சேவையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வர்த்தக உபாயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலைமை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச விமான சேவைகளுடனான போட்டித்தன்மை ஆகியனவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகள் மற்றும் வருமானத்தில் தாக்கம் செலுத்துவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, புதிய முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்ளுதல், அரச-தனியார் பங்காண்மையை ஏற்படுத்துதல் அல்லது அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து நிர்வகித்து, அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதற்கமைய, அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவையை அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கும் அமைச்சுக்கும் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, நளின் பண்டார ஜயமஹ, ரவீந்திர பண்டார, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, தனுஷ்க ரங்கநாத், ஜகத் விதான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-14
இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் கூடிய வழி வகைகள் பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.வணிகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) சோமசேன மகாதிவுல்வேவ அவர்கள் இது பற்றிய விரிவான விளக்கத்தைக் குழுவுக்கு வழங்கினார். இலங்கையின் இரு தரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் நிலைமைகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து சாத்தியக் கூற்று ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு வலியுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, எரங்க வீரரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக சபுமல் ரண்வல, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சதுர கலப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-11-13
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

