logo

02

E   |   සි   |  

2023-04-27

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத்தில் காணப்படும் சிக்கல் நிறைந்த தன்மையைப் போக்குவதற்குப் புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார 2023.04.25ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்குப் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மே 02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2023.04.25ஆம் திகதி நடைபெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள சிக்கல் நிறைந்த தொழிலாளர் சட்டத்தை ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டமூலமாகத் தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய புதிய ஒருங்கிணைந்த சட்டத்தின் மூலம் தொழில்தருணர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை இலகுவில் தீர்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்கள் வியாபார செயற்பாடுகளை ஆரம்பிப்பதை இலகுபடுத்துவது மற்றும் அவற்றை நடத்திச் செல்லும் நடைமுறைகளை இலகுபடுத்துவதற்கு இந்தப் புதிய சட்டம் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யப்படாமல் உள்ள வணிகங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் இதுவரை 80 ஆயிரம் வியாபார நிறுவனங்கள் மாத்திரமே ஊழியர் சேமலாப நிதியத்தில் புதிவு செய்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனப்  பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிகங்கள் குறித்த தகவல்களை தொழில் அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவும் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டமொன்றை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கும், ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

வெளிநாட்டுப் பணியாளர்களை அனுப்பும் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதமான கோட்டாக்களும் வழங்கப்படவில்லையென்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அண்மைய காலப் பகுதியில் 90,000 பேரை வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், இதில் 26,000 பேர் குறைந்த உழைப்புக்காகவும், 60,000ற்கும் அதிகமானவர்கள் திறமையான தொழில்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குழு முன்னிலையில் தெரிவித்தார்.

ரொமேனியா நாட்டில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அந்நாட்டில் இலங்கைத் தூதரகமொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார,  கௌரவ டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வடிவேல் சுரேஷ், கௌரவ அகில எல்லாவல, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ மதுர விதானகே, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ வேலு குமார், கௌரவ மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

2 5

6



தொடர்புடைய செய்திகள்

2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021–2024 கணக்காய்வாளர் தலைமையதிபதியின் யகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து “கோபா” குழுவில் விரிவாக ஆராயப்பட்டது

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

தேசிய இளைஞர் கொள்கை வரைபு தொடர்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம்

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது மற்றும் நிர்வாக மறுசீரமைப்புகளை துரிதப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks