logo

E   |   සි   |  

2023-03-14

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உயர்கல்வித் துறையை விஸ்தரிப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல்

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ (காலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கடந்த மார்ச் 08, 09 மற்றும் 10ஆம் திகதிகளில்  பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் பிரதானிகள் உள்ளிட்ட உயர் கல்வித் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

உயர்கல்வித் துறையின் விடயங்களைக் கையாழ்வதற்குத் தனியான மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை குறித்து இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

உயர்கல்விக்கான வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அடிப்படைக் கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  உயர்கல்வி தொடர்பான அனைத்து விடயங்கைளையும் கையாழ்வதற்கும் தனியான மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இவ்வாறு அமைக்கப்படக் கூடிய அமைப்பின் ஒரு பிரிவு அரசாங்கப் பல்கலைக்கழக விடயங்களைக் கையாள முடியும் என்றும், மற்றைய பிரிவு பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் குறித்த விடயங்களைக் கையாள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும் இது குழுவின் இறுதி முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது, மற்றும் அரசு அல்லாத உயர்கல்வித் துறைக்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தேவையான அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும்போது மேலதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். உயர்கல்வியை விஸ்தரிப்பதற்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்குத் தனியான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் இங்கு வலியுறுத்தினார். உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அவர் இக்குழு முன்னிலையில் முன்வைத்தார்.  

இது தவிரவும், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சின் அரசு அல்லாத உயர்கல்வித் துறைப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் விசேட ஆலோசகர் உள்ளிட்ட பலரும் குழு முன்னிலையில் தமது பரிந்துரைகளை முன்வைத்தனர்.

இந்நாட்டில் இயங்கிவரும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குழு தீர்மானித்தது.

இந்தக் குழுவின் அமர்வுகளில் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கௌரவ சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


2026-08-18

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகள் “Voice to Policy“ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாகக் கையளிப்பு

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த செயலமர்வுக்கு CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணை வழங்கியது.


2026-08-11

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-08-11

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக, நிதி மற்றும் டிஜிட்டல் முகாமைத்துவ செயற்பாடுகள் குறித்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் அவதானம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது  குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks