பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-02-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று (13) நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் இன்று (14) பாராளுமன்றத்தில் தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கூடிக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு நேற்று (13) முற்பகல் கூடிய தேசிய பேரவை அறிவித்திருந்தது. அதற்கமைய, நேற்று பிற்பகல் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் இதன்போது தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.
இன்று ஆணைக்குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்ப்பதாக இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தேசிய பேரவை, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (14) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக இதற்கு முன்னர் தேசிய பேரவை கூடிய போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேரவைக்கு அறிவித்ததாகவும், அதனால் நாளை (15) இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான கௌரவ காஞ்சன விஜேசேகர, கௌரவ டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, கௌரவ இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீரவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் இக்குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நிதிக் கொள்கைகளை உருவாக்குதல் உட்பட அதன் பணிகளை நிறைவேற்றும்போது இலங்கை மத்திய வங்கிக்கு வெளித் தரப்பினரிடமிருந்து புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் திரட்டிக்கொள்வது அவசியமாகிறது. இப்புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை அறிக்கையிடுதல் தேவைப்பாடுகளுக்கு அமைந்தோராகவுள்ள ஆட்கள், அத்தேவைப்பாடுகளை மீறும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நிருவாக வழிமுறைகளை விதித்துரைப்பதற்காக, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.இவ்விதிகளின் மூலம், புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களைக் கோருவதற்கான அறிவித்தல்களை வழங்கும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளான பிரதி ஆளுநர்கள், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதானி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரதானி ஆகியோருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழங்கப்படும் தகவல்கள் அதற்கே உரிய நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இவ்விதிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கியினால் சில பொதுக் கடன் தரவுகள் வெளியிடப்படாமை குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய தகவல்கள் தற்போது பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வசமுள்ளதாகவும், இதன் காரணமாக இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மாதிரிக்கு அமைவாக கடன் புள்ளிவிபரங்களை மீண்டும் தயாரிப்பதில் வரம்புகள் காணப்படுவதாகவும் குழுவினால் இங்கு அவதானிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளினூடாக பொதுக் கடன் தகவல்களை அணுகுவதற்கான இயலுமையைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குழு சுட்டிக்காட்டியதுடன், அரச பிணையங்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கவனம் செலுத்தியது.மேலும், சுற்றுலாப் பயணிகளினால் பயன்படுத்தப்படும் பல்வேறு கட்டணச் செலுத்துகை முறைகள் காரணமாக, சுற்றுலா வருமானத்தை துல்லியமாகக் கணிப்பிடுவது சவாலாக அமைந்துள்ளதெனவும், இத்தகைய மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை உயர்த்துவதற்காக தரவு சேகரிப்பு ஆய்வுகளை மேம்படுத்துவது அவசியமெனவும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் தொடர்பாகவும் இக்குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதிகள்” என அழைக்கப்படும் இவ்விதிகள் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதி மேலும் திருத்தப்படுகின்றது.அதற்கமைய, ஏதேனும் ஒரு மாதத்தினுள் ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற ஒவ்வொரு பொருள் ஏற்றுமதியாளரும், அவ்வருமானத்தை அனுமதிக்கப்பட்ட செலுத்தல்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி, எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும். இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம் வழங்கப்பட்டிருந்த 3 மாதக் கால அவகாசம், இவ்வாறு அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை குறைக்கப்பட்டுள்ளது.அந்நியச் செலாவணி வீதத்திலும் அந்நியச் செலாவணிச் சந்தையிலும் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அந்நியச் செலாவணி திரவத்தன்மையின் பற்றாக்குறை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தைக் குறைப்பது அவசியமென இலங்கை மத்திய வங்கி இங்கு சுட்டிக்காட்டியது.இந்நடவடிக்கையானது சந்தை நம்பிக்கையைக் குறைவடையச் செய்தல், அந்நியச் செலாவணிச் சந்தையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துதல் போன்ற நிலைமைகளை உருவாக்கக்கூடுமென குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அந்நியச் செலாவணி வீதத்தின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் தற்போதைய அந்நியச் செலாவணி விநியோகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கானதொரு குறுகிய காலக் கொள்கைக் கருவியாகவே இந்நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரங்கள் ஸ்திரமடைந்தவுடன் இது தளர்த்தப்படும் எனவும் மத்திய வங்கி அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.மேலும், NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் பணிப்பொறுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது குறித்து மேற்கொள்ளப்படும் தடயவியல் கணக்காய்வின் பின்னர் அது தொடர்பில் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன, கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரஊப் ஹகீம், ரவி கருணாநாயக்க, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் றாஜபக்ஷ, திலிண சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், “பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார மதிப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தலைப்பின் கீழ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிக் குழுவினரும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
2026-06-16
பொது மனுக்கள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.காமினி ரத்னாயக்க அவர்களினால் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பொது மக்களுக்கள் பற்றிய குழுவில் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொது மனுக்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் குழுவின் கண்காணிப்புக்களை உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 125 (5) இற்கு அமைவாக இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த காலப் பகுதியில் பொது மனுக்கள் பற்றிய குழு 15 அமர்வுகளை நடத்தியிருப்பதுடன், 89 பொது மனுக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இவற்றில் 43 பொது மனுக்கள் பற்றிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், 33 மனுக்களுக்கான நிவாரணங்கள் இதில் பரிந்துரைக்கப்படவில்லையென்பதுடன், 13 மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குழுவினால் கவனத்தில் எடுக்கப்பட்ட 89 மனுக்கள் தொடர்பான விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழு பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 (5) ற்கு அமைவாக அதன் முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகளை முறையே (பாராளுமன்ற வெளியீடு இலக்கம் 250 மற்றும் 390) 2025 ஓகஸ்ட் 7ஆம் திகதி மற்றும் 2025 டிசம்பர் 5ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


