2022-12-13
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து தெரிவித்தார். அண்மையில் (டிச. 05) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறந்த சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இதன்படி, திறந்த சந்தையில் ஜூலை மாதம் ஒரு கிலோகிராம் பருப்பு 595 ரூபாவாகவும், டிசம்பரில் லங்கா சதொச நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் பருப்பு 389 ரூபாவாகக் குறைந்திருப்பதுடன், திறந்த சந்தையில் 410 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் 1ஆம் திகதியாகும் போது லங்கா சதொச நிறுவனத்தின் விலை 265 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், 280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவில் இருந்து 198 ரூபாவாகவும் குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக சந்தைகளைக் கண்காணிக்குமாறும், சோதனைகளை நடத்துமாறும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தர்.
அதற்கு மேலதிகமாக, நியாயமான சந்தை முறைமையை நிறுவும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாகவும் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட முழுநேர உறுப்பினர்களின் தகுதிகளை இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிரான பாவனையாளர்களின் முறைப்பாடுளை விசாரிக்கும் முறையை வினைத்திறனாக்கும் பிரேரணைகள் இதில் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மற்றும் வலுவான முறையில். புதிய சரத்துக்கள் உள்ளிட்ட திருத்தச்சட்டமூலத்தை அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டு இளைஞர்களை கூட்டுறவுத் துறைக்கு ஈர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இளம் தொழில்முயற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தும் வகையில் நிவாரணத் திட்டங்களை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.கூட்டுறவுச் சங்கங்களின் வலுவூட்டல் மூலம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தைத் தற்பொழுது இலாபமீட்டும் நிறுவனமாக நடத்திச்செல்ல முடிந்திருப்பதாகவும், நாட்டுக்குத் தேவையான அமோனியம் நைட்ரஜனை இறக்குமதிசெய்து விநியோகிக்கும் உரிமை எஸ்.ரி.சி நிறுவனத்திடம் காணப்படுகின்றபோதும், இந்தியாவில் அமோனியம் நைட்ரஜன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டமையால் நாட்டில் வெடிபொருட்களை நம்பியுள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்நிறுவனத்தின் ஊடாக அமோனியம் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது பிரதேச செயலக மட்டத்தில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், உரிய அடையாளப்படுத்தலின் பின்னர் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மஹாபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிறை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வியாழேந்திரன், கௌரவ காதர் மஸ்தான், கௌரவ. ரோஹன திஸாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.
2026-07-13
பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுப் பட்டியல்களில் மட்டுமன்றி, தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களிடையேயும் குறைந்தபட்சம் 33 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.இந்த முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.மேலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக வேட்புமனுப் பட்டியல் மட்டத்தில் அல்லது கட்டாய ஆசன ஒதுக்கீட்டின் மூலம் அல்லது கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் போது காணப்படும் சமூக மனப்பாங்குகள், தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு போன்ற சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாமிந்திராணி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினீ குமாரி விஜேரத்ன, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுத, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி ஹசாரா லியனகே, தீப்தி வாசலகே, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி கீதா ஹேரத் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-13
நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து, கௌரவ அமைச்சர் கே. டி. லால் காந்த அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் கூடிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை திறம்பட மேற்கொள்வது, மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வது ஆகியவற்றிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.வியாபாரிகள் விவசாயிகள் போன்று காண்பித்து அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவதன் மூலம், மோசடியான முறையில் அதிகளவு நெல்லை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.நெல் கொள்வனவின்போது எடையை அடிப்படையாகக் கொண்ட தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், கூட்டுறவு மற்றும் தனியார் களஞ்சியங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.கூட்டுறவுச் சங்கங்களும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இணைந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்வதன் மூலமும், சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளுக்கு மேலும் திறம்பட்ட மற்றும் நியாயமான சேவையை வழங்க முடியும் எனவும் குழு வலியுறுத்தியது.அத்துடன், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பழமையான கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்தல், அவற்றை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள், மேலும் வனவிலங்கு மற்றும் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிகளை அண்டியுள்ள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது நிலவும் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-10
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக டி.பி.விக்ரமசிங்க அவர்களை நியமிப்பதற்கு அண்மையில் (ஜுலை 08) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய இந்தக் குழுவில் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, ரிஷாத் பதியுதீன், கே. காதர் மஸ்தான், குமார ஜயக்கொடி, கதிரவேலு சண்முகம் குகதாசன் மற்றும் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-08
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய, (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.