E   |   සි   |  

2022-11-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மத்திய கலாசார நிதியத்தின் செயலாற்றுகை குறித்து விசேட கணக்காய்வு அறிக்கை கோப் குழுவின் விசாரணைக்கு

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இன்று (நவ. 24) நடைபெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2015-2017 காலத்தில் பணியாற்றிய மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகங்கள் அனைவரும் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் மத்திய கலாசார நிதி சட்டம், செயலாற்றுகை, நோக்கம் போன்றவை கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன், மத்திய கலாசார நிதியத்தின் ஆட்சிக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டமை தொடர்பிலும், நிதியத்தின் பணம் உரிய முறையில் செலவுசெய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக குழுவின் 209 வது கூட்டம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தி, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

 மத்திய கலாசார நிதியத்தின் செயல்பாடுகள் குறித்த கணக்காய்வு அறிக்கையின் படி கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் வருமாறு,

  1.  நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபை அமைப்பானது அனைத்து மதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். மேலும் சபையானது நடப்புக் காலத்திற்கு ஏற்ற வகையில் கூட்டம் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களை உடனடியாக எடுப்பதற்காக செயற்பட வேண்டிய வகையில் நிதியச் சட்டத்தினை பொருத்தமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
  2. நிதியத்தின் அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் சபையின் வருடாந்த செயலாற்றுகைத் திட்டங்கள் யதார்த்தமான முறையில் தயாரிக்கப்படல் வேண்டும் மற்றும் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் நோக்கினை அடைவதற்கு செயற்படல் வேண்டும்.
  3. நிதியத்தின் செயற்பாட்டுன் தொடர்புடைய அனைத்துக் காரணங்களும் விதிகளைத் தயாரித்தல் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  4. நிதியத்தின் மொத்த செலவுகளில் அதிக சதவீதத்தினை ஊழியர்களுக்கான கிரயம் பிரதித்திததுவப்படுத்தியிருத்தமை தொடர்பில் மற்றும் பாதுகாப்பு போன்ற செயலாற்றல் பணிகளுக்காக அதிக பங்களிப்பு செய்யப்பட்டிராமை தொடர்பில் கவனம் செலுத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கலாச்சார உரித்துக்களை உடைய இடங்களை பாதுகாப்பதற்காக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியமை.
  5. நிதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய நுழைவுச் சீட்டு கட்டணம் அறவிடுதல், பணத்தை முதலீடு செய்தல் மற்றும் முதலீட்டுத் தொகையினை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகியன இயலுமான அளவில் முன் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டியமை.
  6. கொடுப்பனவு செய்கையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணத்திற்கும் மற்றும் பதவியணிக்காக ஆட்சேர்ப்பு செய்கையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவை மற்றும் அரச நிர்வாக, முகாமைத்துவத் சேவைகள் சுற்றறிக்கைகளுக்குப் இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டியமை.
  7. முகாமைத்துவ சேவைகளின் திணைக்களத்தின் அனுமதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியமை மற்றும் நிதியத்துடன் பதவியணியை இணைப்புச் செய்யும் போது சரியான தேவை இனங்காணப்பட்டு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் நிதியத்தின் சிரேஷ்ட மட்டத்திற்காக நிரந்தர அடிப்படையில் தகைமை வாய்ந்த பதவியணியை ஆட்சேர்ப்பு செய்தல் தொடரபில் கவனம் செலுத்த வேண்டியமை.
  8. நிதியத்தின் ஆட்சேர்ப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக் கட்டமைப்புக்கு முரணாக கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின் அடிப்படையில் முறையற்ற வகையில் பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதைத் தவிர்த்தல் மற்றும் வேறு நிறுவனத்திற்காக சேவைகளை வழங்குவதற்கு நிதியத்திற்கு பதவியணியினை ஆட்சேர்ப்பு செய்வதினைத் தவிர்த்தல் வேண்டும்.
  9. செலவினத் தேவைப்பாட்டினை விஞ்சும் வகையில் முதலீடுகளை மீளப் பெறுவதை தடுத்தல் மற்றும் அதன் பிரகாரம் செயற்பட்டிருத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை.
  10. இணையத்தின் மூலம் இலத்திரனியல் நுழைவுச்சீட்டு வழங்குதல் போன்ற பதிய செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் வேண்டும்.
  11. கலாசார மற்றும் சமயத்தலங்களில் இருந்து வருமானம் ஈட்டுகையில் இலத்திரனியல் நுழைவுச்சீட்டு ஒழங்கமைப்பை நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்துத் தலங்களும் உள்ளடங்கும் வகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதற்காக தகைமை உடையவர்களை பதவியணியில் ஈடுபடுத்தல்.
  12. காலத்திற்கு ஏற்ற மற்றும் உண்மையான தேவைப்பாடுகளையும் கருத்திற்கொண்டு உரிய மதிப்பீட்டுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் நிதி வெகுமதிகள் / நிதியேற்பாடு வழங்கப்பட வேண்டியமை மற்றும் அதன் நிதிப் பெறுமதியை தீர்மானித்தல் உரிய அதிகாரத்துடனான தரப்பினரால் மேற்கொள்ளப்பட வேண்டியமை.
  13. உரிய நிர்மாணச் செயற்திட்டங்களின் செயன்முன்னேற்றம் தொடர்பில் பின்தொடர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியமையும். உரிய நலன்பெறும் நிறுவனங்களையும் கிட்டிய மேற்பார்வையுடன் மேவுகை செய்ய வேண்டியமை.
  14. அனைத்து பெறுகை நடவடிக்கைகளையும் அந்த வழிகாட்டிகளுக்கழைய மேற்கொள்ளப்பட வேண்டியமையும், தொல்பொருள் ஆணையாளரின் மற்றும் பிற தகுதிச் சான்றிதழ்களின் ஒப்புதலுடன் மட்டுமே பாதுகாப்பு / கட்டுமானம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியமை.
  15. அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டின் பிராகரம் செலவினம் மேற்கொள்ளல் மற்றும் திருத்தப்பட்ட பாதீடுகளை சமர்ப்பித்து அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்,
  16. உரிய காசோலைகளை கையளிக்கும் போது நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் உரிய முறையில் பெறுநருக்கு காசோலையை ஒப்படைத்தலும், நிறுவனத்திற்கு வழங்கிய முற்பணங்களை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்தல்.
  17. தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனத்தை பலப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையினால் அரச செயற்திட்ட பெறுகைகள் நடைமுறையிலிருந்து விலகி நேரடி ஒப்பந்த நடைமுறையின் கீழ், தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை கையளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு இந்த ஒப்பந்தங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டமையால் அமைச்சரவையின் நோக்கங்கள் நிறைவேறாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன், கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேற்கொண்ட உள்ளக விசாரணை அறிக்கையை உடடியாகக் கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார அறிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணை செய்வதற்காக மத்திய கலாச்சார நிதியத்தை 2023 ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் கோப் குழுவின் முன் அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.  

அத்துடன், 2015ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிய, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படவுள்ளதாக குழுத் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ லொஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ நளீன் பண்டார, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கெளரவ ரஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.சோமரத்ன விதானபத்திரன, மத்திய கலாசார நிதியத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

34

 



தொடர்புடைய செய்திகள்

2026-11-18

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பது தொடர்பில் கோபா உபகுழுவில் அவதானம்

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பல முக்கிய நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-16

யானை – மனித மோதலைக் குறைத்தல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பது தொடர்பில் புதிய தொழில்நுட்ப, நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிவது குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks