02

E   |   සි   |  

2022-11-23

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஊழல் எதிர்ப்பு உத்தேச சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் இலஞ்ச, ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு

  • ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை

 

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (நவ. 21) கவனம் செலுத்தியது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியைத் தடுப்பதற்கு உரிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி அதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்கும் பொறிமுறையை உருவாக்கத் தவறியமையாலேயே, நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து இலஞ்ச, ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குழு முன்னிலையில் விளக்கமளித்தார். இந்த சட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடியதாக இருப்பதுடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை ஆணைக்குழு தனது முன்னேற்றம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதி, தடயவியல் கணக்காய்வு, பொறியியல், சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர சேவைகள், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 20 வருடத்துக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டவர்களை நியமிப்பதற்கும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆணையாளர்கள் அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அத்துடன், இந்த ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீடு என்பன நேரடியாகப் பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான விடயங்களைக் கையாழ்வதற்கும் தனியானதொரு இயக்குனரகமொன்றை அமைப்பதற்கும் இந்த வரைபில் முன்மொழியப்பட்டிருப்பதுடன், அரசாங்கத் துறையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கு அப்பால் ஊழல், இலஞ்சம் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படும் துறைகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியை வெளியிட முடியும்.  அரசாங்கத்தின் முக்கியமான திணைக்களங்கள் இந்த அலுவலகத்துடன் ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விசாரணைகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மாத்திரமன்றி தனியார் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மற்றும் விளையாட்டுத் துறையில் இடம்பெறுகின்ற இலஞ்ச, ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

 இதேவேளை, குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் பற்றியும் இக்குழுவில் அமைச்சர் விளக்கமளித்தார். முறையான நடவடிக்கையின் கீழ் சாதாரண வாடகை மற்றும் வெளியேற்றும் வழக்கு நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற சட்ட தாமதத்தைக் கட்டுப்படுத்தி குறுகிய காலத்திற்குள் குத்தகை கொடையாளருக்கு நிவாரணம் வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குத்தகை கால எல்லையைத் தாண்டி குத்தகை வளவுகளில் தங்கியிருக்கும் குத்தகை குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முறையான நடவடிக்கையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மேற்படி வளவுகள் வாடகை சட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்ளாது வழக்குகளை நிறைவுசெய்ய பல வருடங்கள் செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் குத்தகை கால எல்லையின் இறுதியில் குத்தகைக்குப் பெற்றுள்ளவர் குறித்த வளவிலிருந்து வெளியேறுவதை நிராகரித்துள்ள போதிலும், யாராயினுமொரு குத்தகை கொடையாளி ஆதனத்தைக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உத்தேச சட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 12ஆம் திகதிய 2301/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையும் இங்கு ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷனயாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எம்.எம்.அதாவுல்லா, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, நீதி அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் சமூகமளித்திருந்தனர்.

 

1 3

9

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-01

குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆராய்வு

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டத்தை மேலும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்துகொள்ளாத காரணத்தினால், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.குடும்ப வன்முறையைத் தடுப்பதும், அதன் காரணமாகப் பாதிக்கப்படும் நபர்களுக்கு துரிதமான சட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதும் இச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் பல்வேறு முன்மொழிவுகளை இதன்போது முன்வைத்தது.வன்முறைக்கு உள்ளாகும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் வரம்பை விரிவுபடுத்துதல், விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், இடைக்காலப் பாதுகாப்புக் கட்டளைகளை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புக் கட்டளைகள் தொடர்பான பின்தொடர் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.அத்துடன், சட்டவாக்கத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களின் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.மேலும், கிரிசாலிஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடத்தப்பட்டது. பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அப்பால் சென்று, கொள்கை வகுத்தல் உள்ளிட்ட தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.உள்நாட்டு வன்முறைக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பெண்களின் உரிமைகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-30

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான புதிய சட்டமூலம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.புதிய கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பில் சுயாதீன பணிப்பாளர்களை உள்ளடக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நேரடியாக முடிவுகளை மேற்கொள்ளாது எனவும், குறித்த சங்கங்கள் மாகாண கிரிக்கெட் சங்கங்கள் ஊடாக செயற்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பாடசாலை கிரிக்கெட்டுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வருடாந்தம் 900 மில்லியன் ரூபா நிதியும் உபகரணங்களும் வழங்கப்படுவதாகவும், பயிற்றுநர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வீரர்களைத் தெரிவுசெய்யும் நடைமுறையை முறையாக முன்னெடுப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குழுவில் தெரியவந்தது.அத்துடன், விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 33 விளையாட்டுச் சங்கங்கள் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகவும், மேலும் 33 சங்கங்கள் தொடர்பில் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் நடைபாதைகள் மற்றும் விளையாட்டு வளாகங்களிலிருந்து கட்டணம் அறவிடுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், விளையாட்டுத்துறையை இலாபம் ஈட்டும் வணிகமாகக் கருதாது, தேசிய சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கான அரசாங்கத்தின் பொறுப்பாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அமைச்சின் கொள்கையாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது.ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு செயற்கை ஓடுபாதையை (Synthetic Track) வழங்கும் திட்டத்தின் கீழ் அடுத்த செயற்கை ஓடுபாதை அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடளாவிய ரீதியில் இரண்டு செயற்கை ஓடுபாதைகள் மாத்திரமே காணப்படுவதாகவும் குழுவில் குறிப்பிடப்பட்டது.அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மட்டக்களப்பில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கம் மற்றும் ஹிங்குராங்கொட விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்தல், பதுளை – ஹாலிஎல பகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் களுத்துறை – பண்டாரகம பொது விளையாட்டரங்கில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் போட்டிகளுக்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போது, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ தேசிய அணிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கும் மாத்திரமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தேசிய அணிகளைத் தெரிவுசெய்தல் மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு அணிகளை அனுப்புதல் ஆகியவற்றின்போது எந்தவொரு இனத்தையோ அல்லது பிரதேசத்தையோ அடிப்படையாகக் கொண்டு எவ்வித பாகுபாடும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றுக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-30

பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உபகுழுவில் ஆராய்வு

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அவர்கள் தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியதுடன், இத்திட்டத்தின் முன்னேற்றங்கள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. பாடசாலைகளில் காணப்படும் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளுக்கான தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், பாடசாலைகளுக்கான தொலைத்தொடர்புகளை வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாதிரி முன்பள்ளிகளை அமைப்பதற்கான திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு விரிவாகக் கேட்டறிந்துகொண்டது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.சமந்த ரணசிங்ஹ, பத்மசிறி பண்டார ஆகியோரும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


2026-09-30

வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறித்த ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், வெளிநாட்டு முதலீடுகள், புலம்பெயர்ந்தவர்கள் தமது நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் அதன் வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இங்கு, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கையில் வசிப்பவர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள தகுதியுடைய நபர்கள், முதலீடு செய்யக்கூடிய துறைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு மூலதனத்தை மாற்றும்போது பொருந்தும் வரம்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்குத் தேவையான நிதி வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் தொடர்பில், புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் உள்ள தமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதற்குப் பொருந்தும் வரம்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவு ஊடாக மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வாடகை வருமானம், வட்டி மற்றும் இலாபப் பங்குகள் போன்ற நடப்பு வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்தும் குழுவில் விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக வரம்புகள் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், குறித்த வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் குழுவிடம் மேலும் தெரிவித்தனர்.ஏற்றுமதியாளர்கள் முந்தைய ஆண்டில் நாட்டிற்கு கொண்டுவந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு வர்த்தகர்களுக்கு சர்வதேச சந்தையில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.மேலும், வெளிநாட்டு செலாவணி சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் அதற்காக நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வங்கித் தரவுகள் மற்றும் சுங்கத் தரவுகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அத்துடன் வெளிநாட்டு செலாவணி முறைகேடுகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும்போது தேவையான வங்கி உத்தரவாதங்கள் மற்றும் ஏனைய நிதி வசதிகள் தொடர்பில் நிலவும் வரம்புகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலின்போது, விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் வகையில் தேவையற்ற ஒழுங்குவிதிகளை விதிப்பதன் மூலம் வர்த்தகர்களை ஊக்கமிழக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு செலாவணியின் அளவும் குறையக்கூடும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.ஒழுங்குவிதிகளில் அமெரிக்க டொலர் 2 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கட்டளையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக அந்தத் தொகை அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளிநாட்டு செலாவணித் திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என்ற வரம்பு சுமார் 6 மாத காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் எனவும், 2027 ஆம் ஆண்டில் அதனைத் தளர்த்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதேபோன்று, பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு இந்த வரம்பு அமெரிக்க டொலர் 0.2 மில்லியனாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இந்த வரம்புகளை விட அதிகளவிலான வெளிநாட்டு செலாவணியை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது, குறித்த அங்கீகாரம் வணிகத்தின் நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகளவான சொத்துக்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks