பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-10-25
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப் புமுயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரைவிடுத்தது.
இதற்கமைய ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (ஒக். 21) கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதில் கோப் குழுவினால் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு காணி சீரமைப்பு ஆணைக்குழுவை மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு காணிகளைக் கையகப்படுத்தும்போது காணப்படும் பிரச்சினைகள் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கமைய கடந்த 20 வருடங்களில் காணி கையகப்படுத்தல் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாதத்துக்குள் கோப் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.
அத்துடன், காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் பெறுமதியை மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்காக விசேட செயலணியொன்றை உருவாக்குமாறு கோப் குழு பரிந்துரைத்ததுடன், குறித்த செயலணியின் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விபரங்கள் அமைச்சின் செயலாளரினால் இரண்டு வாரங்களுக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டது. இந்த செயலணிக்கு நில அளவையாளர் நாயகம் அல்லது அவரின் பிரதிநிதி, அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர் அல்லது அவரின் பிரதிநிதி ஆகியோரை நியமிக்குமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.
மேலும், 2018 பத்துலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விரிவான அறிக்கையை கோப் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார அறிவுறுத்தினார். விசேடமாக இந்த வேலைத்திட்டத்துக்காகத் தற்காலிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 214 பேர் தொடர்பில் நிர்வாகத் திணைக்களத்துடன் கலந்துரையாடி அனுமதியளிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை உள்ளீர்த்துக்கொள்ளஉரிய தீர்வு எடுப்பது அவசியமாயின் அதனை அமைச்சரவைக்கு ஆற்றுப்படுத்துமாறும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், காணி பகிர்ந்தளிப்பு தொடர்பான தேசிய கொள்கைக்குள் காணி சீரமைப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உள்ளடக்கி தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.
மேலும், 50 ஆண்டுகள் பழமையான இந்தக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்தது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 350 மில்லியன் ரூபா செலவு செய்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் வேலைத்திட்டம் உர உற்பத்தி தொடர்பில் அனுபவம் வாய்ந்த அரசாங்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு இரண்டு வாரகாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணாமல் போன கோப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், காணாமல் போன கோப்புக்கள் பற்றிய பட்டியல் உடனடியாக கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவித்தது.
நியதிச்சட்ட முறையின் கீழ் முன்னர் அடையாளம் காணப்பட்ட பயனாளிகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றி உடனயடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு பணிப்புரை விடுத்தது.
அத்துடன், இந்த ஆணைக்குழுவின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்து சுமார் 10 வருடங்களாக மறுக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கைகளை சரியாக தயாரித்து வருடாந்த அறிக்கையை 3 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டது.
மேலும், முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட கணினிக் கட்டமைப்பை உருவாக்கி மேம்படுத்துவதற்காக தனியார் கணினி நிறுவனமொன்றுக்கு செலுத்தப்பட்ட 17 மில்லியன் ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
ஹோமாகம பிரதேசத்தில் வரிப்பத்திரம் இன்றி தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் காணிக்காக அறிவிடப்படவேண்டிய சுமார் 12 மில்லியன் ரூபாவை மீள அறவிட்டுக் கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது. இதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாமை மற்றும் மதிப்பீட்டின் பெறுமதியில் 6 வீதத்துக்குப் பதிலாக 4 வீதம் அறிவிடப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இங்கு உத்தரவிடப்பட்டது.
அமைச்சரவைத் தீர்மானத்துக்கு எதிராக குத்தகைக்கான ஒப்பந்தம் இன்றி 2016ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் மதிப்பீட்டையும் மீறி இந்தக் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் இயங்கிவந்த கட்டடத்தைக் குத்தகைக்குப் பெற்றமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அலுவலகத்தை அரசாங்கத்தின் கட்டடமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட சட்டத்தரணியான விசாரணை அதிகாரி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரித்து 1.7 மில்லியன் ரூபா சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியுள்ள வரி நிலுவைத் தொகையான 2 பில்லியன் ரூபா தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் திறைசேரியுடன் கலந்துரையாடி உடனடியாகத் தீர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ டி. வி. சானக, கெளரவ சாந்த பண்டார, கௌரவ ஜனக வக்கம்புர பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நளீன் பண்டார, கௌரவ நிமல் லான்சா. எம். மரிக்கார், கௌரவ ரோஹினி கவிரத்ன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ மதுர விதானகே, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த, கெளரவ ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-18
கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-16
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


