2022-10-05
சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் (ஒக். 04) அழைக்கப்பட்டிருந்தார்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் (04) பாராளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தான்னால் மீறப்பட்டுள்ளது என்பதைக் குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரி பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்திலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுவாகப் பாராளுமன்றம் தொடர்பில் அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டால் பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் உரிமை பாராளுமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் காணப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் எச்சரிப்பதற்கு அல்லது ஆறு மாதங்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் உள் நுழைவதைத் தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும், ஏதாவது தவறு இழைக்கப்பட்டிருப்பதாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டால் அதனை உயர் நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தலைவரினால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பிரபல சிங்கள பத்திரிகையொன்றின் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு முன்னிலையில் அண்மையில் அழைக்கப்பட்டனர். “பாராளுமன்றத்தில் திரவப்பாலுக்குத் தட்டுப்பாடு உறுப்பினர்கள் குழப்பம்” (மத்திசபே கன்டிமே தியர கிரி ஹிங்கவீ மந்திரிவருன் யக்கா நடதீ) என்ற தலைப்பின் கீழ் 2022 மார்ச் 09ஆம் திகதி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த கட்டகொட முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய போலியான செய்தியின் ஊடாக ஒட்டுமொத்த பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்குப் பொது மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கட்டகொட தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீடு பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்துத் தான் ஆராய்ந்து பார்த்தபோது அதற்கான தகவல்கள் எதுவும் இல்லையென்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கமைய போலியான தகவல்களை வெளியிட்டமையின் ஊடாக ஒட்டுமொத்தப் பாராளுமன்றத்தின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருவதாகவும், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் மிகவும் பொறுப்பான முறையில் செய்திகளை அறிக்கையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதில், நீதிமன்ற செயற்பாட்டிற்குச் செல்லாமல் இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கினர். இதற்கமைய போலியான தகவல்களை அறிக்கையிட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை முன்னைய செய்திக்குக் கொடுத்த அதேயளவு முன்னுரிமையை வழங்கி செய்தியொன்றை வெளியிட வேண்டும் என்றும், அதன் பிரதி ஒரு வாரத்துக்குள் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பாராளுமன்றம் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளை வெளியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு இணங்குவது என்ற நிபந்தனையின் அடிப்படையில் இவ்விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு எழுத்துமூலமாகத் தெரிவிக்கவும் குழுவின் தலைவர் உத்தரவிட்டார்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பட்டாலி சம்பிக்க ரணவக்கவின் ‘வட்ஸ்அப்’ அழைப்புக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சட்ட அனுமதியின்றி பெற்றுக் கொண்டமையினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையுடன் தொடர்புபட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் மேலும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை எதிர்வரும் 18ஆம் திகதி குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல, கௌரவ கோகிலா குணவர்த்தன மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட் டகுழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-01
கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
2026-08-28
பாராளுமன்றம் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஆக. 20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, .ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்த்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறும்.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைநலீன் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுக்ள ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவருதல்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இலங்கை பைத்துல்மால் நிதியம் என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்அஜித் பி.பெரேராஇலங்கை குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்ஹர்ஷ.த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்சுஜீவ திசாநாயக்கபிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்ததல்நந்த பண்டாரமலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்ரீ.கே.ஜயசுந்தரகித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-08-28
இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.