பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-06-22
இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராய கோப் குழுவை எதிர்காலத்தில் விசேடமாகக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மின்சார சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் (கோப் குழு) கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 10ஆம் திகதி இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு மின்சார சபை அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று போதிய நேரம் இன்மையால் பல விடயங்கள் குறித்தக் கலந்துரையாட முடியாமல் போயிருந்தது.
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கொள்வனவு, விநியோகம் மற்றும் அவற்றின் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களில் முரண்பாடுகள் இருப்பதாக இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதனால், உற்பத்திக்கான திட்டங்கள் உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கு தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்றத்தையும், சபாநாயகரையும் அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் ஆராய கோப் குழுவின் விசேட கூட்டத்தைக் கூட்ட முடியும் எனவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம், இந்த விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்குக் குழுவின் உறுப்பினர்கள் இணங்கியதுடன், கோப் குழுவின் விசேட கூட்டத்தைக் கூட்டி இது பற்றி ஆராய்வதற்குத் தீர்மானித்தனர்.
அத்துடன், 2008 நவம்பர் 14ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் 2009 மே 26ஆம் திகதிய 39ஆம் இலக்க நிர்வாக சேவைச் சுற்றுநிருப ஏற்பாடுகளுக்கு எதிராக பணிப்பாளர் சபையின் அனுமதிக்கு அமைய மின்சாரசபைக்கு அவ்வப்போது வெவ்வேறு பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய 2021ஆம் ஆண்டில் 2,134.9 மில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டில் 1,544.4 மில்லியன் ரூபாவும் இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்தப் பணம் பொது மக்களின் பணம் என்பதால் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் சில பிரிவுகள் நகைப்புக்குரியவை எனவும் அவர் தெரிவித்தார். உதாரணமாக மின் மானி வாசிப்புக்கு மேலதிகமாக மின்மானி வாசிப்பை சரியாக மேற்கொள்வதற்கும் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இறைவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற வருமானத்தைவிட இலங்கை மின்சார சபையின் வருடாந்த செலவீனம் காணப்படுவதாக கோப் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், சம்பளத்தை மறுசீரமைக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் 2007 டிசம்பர் மாத அமைச்சரவையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் 2015 மே மாதம் கூட்டு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டபோது உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax), தனியாள் முற்பண வருமான வரி (APIT) போன்றவற்றுக்கான பொறுப்பை பணியாளர்களுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டபோதும், இதற்கு மாறாக 2020 முதல் 2021 வருடம் வரை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து அந்தத் தொகையை அறவிடாமல் இலங்கை மின்சார சபையின் நிதியிலிருந்து 4.8 பில்லியன் (PAYE/APIT) வரி செலுத்தப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. இந்த வரி செலுத்தும் நடைமுறை தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இங்கு வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது என கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். இறுதியில் இந்த பணம் நாட்டு மக்களின் பணத்தில் இருந்து செலுத்தப்பட்டது என்பது தெளிவாவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டு ஒப்பந்த வரைபின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் 2021 ஆம் ஆண்டில் 25% அதிகரித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வரைபில் கையொப்பமிடாமையால் இது முடிவுக்குக் கொண்டுவரப்படாத கூட்டு ஒப்பந்த வரைபு என்பதால் சட்டபூர்வத் தன்மை கொண்ட ஆவணம் இல்லையென்பதும் தெரியவந்தது. இதன்படி, இந்த அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவு காரணமாக சபைக்கு ஏற்பட்ட பாதகமான விளைவு ஏறத்தாழ 9.6 பில்லியன் ரூபா என கோப் குழு விளக்கியது. இதனைப் பார்க்கும்போது இந்த நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் அல்ல என்பது போலத் தோன்றுவதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 2018-2034 நீண்டகால மின்சார உற்பத்தித் திட்டத்துக்கு அமைய சீதாவாக்க கங்கை நீர் மின்னுற்பத்தித் திட்டம் 2022ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருந்தபோதும் 2020ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்துக்கு 301.19 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இது இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 301.19 மில்லியன் ரூபா செலவில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோதும், சரியான முறையில் சாத்தியக் கூறுகள் மேற்கொள்ளப்படவில்லையென்பது புலனாவதாகக் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இலங்கை நிலக்கரி நிறுவனம் (LCC) ஊடாக வரையறுக்கப்பட்ட டொரியன் அயன் ஸ்டீல் கம்பனி லிமிடட் (TISCL) நிறுவனத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியை பருவமழை காரணமாக அவற்றை இறக்க முடியாமல் போனமை, நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி திட்டமிடப்பட்ட பல்வேறு மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு வலுசக்தி மூலங்களிலிருந்து வருடாந்தம் புதிய மின் உற்பத்தியைப் பெறுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-18
கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-16
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



