பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-06-22
நாட்டில் அண்மைக்காலமாக மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் பொது மக்களின் வருமானம் குறைந்தமை காரணமாக மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் (20) கூடியபோதே இவ்விடயங்கள் வெளிப்பட்டன.
விசேடமாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒன்லைன் முறையின் கீழ் சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதற்கமைய, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இவ்வாறு கலந்துகொண்டனர்.
மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை அடைவதில் சிக்கல்கள் சில காணப்பட்டதாகவும், மதுபான உற்பத்திக்கான எதனோல் குறைந்தமை, டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் இதற்குக் காரணமாக அமைந்தது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மதுபானத்தின் விலை அதிகரிப்பு, பொது மக்களுக்குக் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சட்டவிரோத மதுபானத் தயாரிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச கலந்து கொண்டதுடன், வரிக் கொள்கைகளை எவ்வாறு மாற்றுவது மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஒன்லைன் மூலம் கலந்துகொண்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், இந்த ஆண்டு இலங்கை கலால் திணைக்களம் பெற எதிர்பார்க்கும் வருமானம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ (வைத்தியலாநிதி) காவிந்த ஜயவர்தன ஆகியோரும் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
2026-11-05
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (நவ. 05) இரண்டாவது மதிப்பீடுக்கு உள்ளாக்கப்படும் நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் நேற்று (04) கூடியபோதே இச்சட்டமூலம் குறித்து கலந்துரையாடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.(87வது அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார அவர்கள் 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி முதலாவது மதிப்பீடுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.குறித்த சட்டமூலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு எடுத்துக் கூறினர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, ஜனாதிபதி பைஸர் முஸ்தபா, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் தர்மப்பிரிய விஜேசிங்ஹ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-11-04
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் அது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள பல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை நிகழ்நிகழ்ச்சிகளில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியயத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இலங்கையில் நாளொன்றுக்கு 17 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதுடன், ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர். மேலும், வருடாந்தம் 1,000 இற்கும் அதிகமானோர் இந்நோயினால் உயிரிழப்பதுடன், இது நாளொன்றுக்கு சுமார் மூன்று உயிரிழப்புகளுக்குச் சமமாகும். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் இங்கு முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.ஒவ்வொரு பெண்ணும் தமது மார்பகங்களின் இயல்பான தன்மையைப் பற்றி அறிந்திருப்பதுடன், வழக்கமாக சுய பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியமாகும். ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்தால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமாகும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அரசாங்க சுகாதார நிறுவனங்களின் ஊடாக இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சுகாதார சேவைகளும் வழங்கப்படுகின்றன.அத்துடன், ஒவ்வொரு பெண்ணும் சுவனாரீ (Well Woman) சிகிச்சை நிலையங்களில் கலந்துகொண்டு, கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் பரிந்துரைக்கப்பட்ட பாப் பரிசோதனையை, தனது 35 மற்றும் 45 வயதுகளில் மேற்கொள்வதும் அவசியமாகும்.
2026-11-03
திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) உள்ளிட்ட கல்வித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் கலந்துகொண்டனர்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஏப்ரல் மாதமளவில் கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பாடத்துறை நிபுணர்களைக் கொண்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான உபகுழுக்கள் ஊடாக இதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டில் தரம் 1 இற்கும், 2027 ஆம் ஆண்டில் தரம் 6 மற்றும் தரம் 2 இற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கற்றல் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களை அச்சிடுதல், பாடசாலைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன மற்றும் கல்வித்துறை அதிகாரிகளினால் புதிய கல்வி மறுசீரமைப்புக்களின் அடிப்படை, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, மதிப்பீட்டு முறைமைகள் மற்றும் எதிர்காலச் செயற்திட்டம் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.2019 ஆம் ஆண்டில் இந்தச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய கொள்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தினால் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டதாகவும், இது பல நிறுவனங்களின் கூட்டான முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் மிகவும் முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையான சீர்திருத்தங்கள் இதன் மூலம் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.பொதுக் கல்வியின் அடிப்படை நோக்கம் சந்தைக்குத் தேவையான எதிர்காலத் தொழிலாளர்களை உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் விழுமியங்கள் நிறைந்த முழுமையான ஆளுமையைக் கொண்ட பிரஜைகளையும், நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்காலச் சந்ததியினரையும் உருவாக்குவதே அதன் நோக்கம் என்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.தற்போது நடைமுறையிலுள்ள பாட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட (Content-based) கல்வி முறைக்குப் பதிலாக, கற்றல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட (Outcome-based) மற்றும் மாணவர் மையக் கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மனப்பாடம் செய்து பரீட்சைகளுக்குத் தோற்றும் அழுத்தத்தையும், பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விச் சுமையையும் குறைக்கும் வகையில், கற்றல் அலகுகளுக்கான புள்ளி (Credit) அடிப்படையிலான முறைமையும், ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான மதிப்பீடுகள் (Continuous Assessments) மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான புதிய மதிப்பீட்டுக் கட்டமைப்பும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தரம் 6 முதல் தொழில் துறைகள் தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்கும், தரம் 12 மற்றும் 13 இல் NVQ Level 4 வரையிலான தொழில் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அல்லது உயர்கல்விக்குச் செல்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நெகிழ்வான மாற்றுக் கல்விப் பாதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் 'RIES' இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பல கட்டங்களாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.கல்வியின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளை எதிர்காலத் தொழிலாளர்களாக உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், அவர்களை முழுமையான மனிதர்களாகவும் பொறுப்புமிக்க நாட்டைக் கட்டியெழுப்புபவர்களாகவும் உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தனிப்பட்ட மனப்பாங்குகள் அல்லது கருத்துக்களின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானங்களை எடுக்காமல், விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஆதாரங்களை (Evidence) ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கலந்துரையாடலில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இந்தத் தேசியப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் கௌரவ நளின் ஹேவகே, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-11-03
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்காக சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் கடந்த ஒக். 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்து இக்குழுவினால் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மற்றுமொரு கட்டமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், திறந்த சிறைச்சாலைகள் மற்றும் வேலை முகாம்கள் தொடர்பான நடைமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்தல் மற்றும் நன்னடத்தையைக் கொண்ட கைதிகளை வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணியாளர் எண்ணிக்கை, போக்குவரத்து வசதிகள் மற்றும் மேலதிக நேரப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் தேங்கிக் கிடக்கும் அறிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்கான உரிய சட்ட மற்றும் நிர்வாகத் திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்புடன் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து குழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks





