பார்க்க

E   |   සි   |  

2021-12-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செய்தி வெளியீடு: மனித இயக்கத்தின் திறனைப் பயன்படுத்துதல்

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடும் வகையில்,

அதிக நெகிழ்திறன் மிக்க சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்காக அறிவு, திறன்கள் மற்றும் வலையமைப்புக்கள் போன்றவற்றில் தொடங்கி  பல்வேறு பங்களிப்புக்களின் ஊடாக நாடுகளின் நிலப்பரப்புகளை வடிவமைப்பதிலும் மற்றும் மாற்றியமைப்பதிலும்  புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த ஆண்டு, டிசம்பர் 18, 2021 அன்று, ‘மனித நடமாட்டத்தின் திறனைப் பயன்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இரண்டாம் உலகப் போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கான உண்மையான நோக்கத்துடன் நிறுவப்பட்ட இடம்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்பின் (1989 ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டது) 70 வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கின்றது. ஆனால் இலக்கு நாடுகளில் மாத்திரம் மனிதாபிமான மற்றும் முறையான குடியேற்ற நிர்வாகத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், ஆரம்ப மற்றும் இடம்பெயர் நாடுகளிலும் ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது. இது கொண்டாட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு மைல்கல் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், இயற்கை பேரழிவுகள், பொருளாதார சவால்கள், வறுமை மற்றும் மோதல்களின் அதிகரித்த அளவின்; விளைவாக ஏற்படும் பல்வேறு காரணிகளால், அதிகமான மக்கள் தானாக முன்வந்து, அல்லது சர்வதேச புலம்பெயர்ந்தவர்களாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டு மாத்திரம், உலக மக்கள்தொகையில் 3.6 வீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 281 மில்லியன் மக்கள்  சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்தார்கள்.

“எனவே, குடியேற்றத்தின் அதிகரித்து வரும் போக்குகளைக் கவனத்திற் கொள்வதும், மற்றும் புலம்பெயர்பவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்திற்கு குடியேற்றத்தின் அதிகபட்ச பங்களிப்பைப் பயன்படுத்தும் முகமான கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும்.”  என கோவிட் 19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

குறிப்பாக இலங்கையில் மிகவும் பொதுவான இடம்பெயர்வின் வடிவம் கடந்த மூன்று தசாப்தங்களாக அதிகரித்து வரும் சர்வதேச தொழிலாளர் இடம்பெயர்வு ஆகும். சராசரியாக 1.5 மில்லியன் இலங்கையின் புலம்பெயர்ந்தோர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை ஆண்டிற்கு சராசரியாக 200,000 நபர்கள் வெளியேறுகின்றனர்.

“இந்த நாள் குறிப்பாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு சிறப்பு ஆர்வமாக உள்ளது, ஏனெனில் பொதுவாக இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சுமார் 47.7% பெண்கள் ஆவர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே மேலும் கூறினார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகப் பொருளாதாரம் மற்றும் மனித இயக்கம் ஆகியவற்றைப் பாதித்த கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இடம்பெயர்வு, குறிப்பாக தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான புள்ளிவிவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறியுள்ளன.

“ஆகஸ்ட் மாதம், குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன், குவைத்தில் இருந்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவை திருப்பி வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

மக்கள் நடமாட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மற்றும் அதிகளவான புலம்பெயர்ந்த தொழிலாளர்;கள் தமது இலக்கு நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவதால், இலங்கையானது, வெளிநாட்டில் பணிபுரியும் நபர்களால் பெறப்பட்ட திறன்களை நாட்டின் பொருளாதார நலனுக்காக, குறிப்பாக அடையாளம் காணப்பட்ட சில துறைகளில், குறிப்பாக சுற்றுலா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார மீட்சிக்காக மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் சமூகமயமாக்குவதற்கான உத்திகளை உருவாக்கி வருகின்றது.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் இடம்பெயர்வு திட்டங்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அடிப்படையிலான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மையங்களும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் கவனத்திற் கொள்கின்றோம்.” எனத் தெரிவித்தார். மேலும், புலம்பெயர்வுச் செயற்பாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் ஒன்றில் கவனம் செலுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் செயல்படுத்தும் முகவர் நிறுவனங்களுக்கான சிறந்த முன் புறப்பாட்டுப் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு வரும் ஆண்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
2018 ஆம் ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தில் (SLBFE) இலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகளில் 55.2% ஆனவை குறைந்த திறமையுடைய மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பிரிவுகளாகும்.

“இந்த உண்மையை சிறப்பாகக் கருத்திற் கொண்டு, இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்யும், குறிப்பாக வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மூலம், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சிறந்த முறையில்; பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்காகவும், ILO உடன்படிக்கை எண். 189 இனை அங்கீகரிப்பதற்காக, பெண்களின் ஒன்றியமானது அரசாங்கத்துடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளது.” என டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

2026-11-18

விவசாயத் திணைக்களத்தின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நான்கு முற்பணக் கணக்குகளின் செயற்பாட்டு நட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அனுமதி

விவசாயத் திணைக்களத்துடன் தொடர்புடைய நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நான்கு முற்பணக் கணக்குகளில் காணப்படும் செயற்பாட்டு நட்டங்களை நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 17) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, 1996ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை விரிவாக்கத் திட்டத்திற்குரிய முற்பணக் கணக்கில் காணப்படும் 23.97 மில்லியன் ரூபா நட்டம், வெலிசர விவசாயப் பணிமனையை நடத்துவதற்கான முற்பணக் கணக்கில் காணப்படும் 5 மில்லியன் ரூபா நட்டம், விவசாயப் பழுதுபார்ப்புப் பணிமனை முற்பணக் கணக்கில் காணப்படும் 35.7 மில்லியன் ரூபா நட்டம் மற்றும் நாரஹேன்பிட்டிய விவசாய மத்திய களஞ்சியசாலை தொடர்பான முற்பணக் கணக்கில் காணப்படும் 421,884 ரூபா நட்டம் ஆகியவற்றைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.இந்தக் கணக்குகளில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்டங்கள் மற்றும் கணக்குகளின் இருப்புத் தொகைகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த குழு, குறித்த கணக்குகளில் காணப்படும் நட்டங்களை நீக்குவதற்கும் இருப்புத் தொகைகளில் காணப்படும் வேறுபாடுகளைத் திருத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தது.மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான கணக்கியல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையான கணக்குகளைப் பேணுதல், உரிய கணக்காய்வு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நிதி முகாமைத்துவத்தைக் கட்டுப்பாட்டுடன் வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, லால் பிரேமநாத், ஓஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கவீந்திரன் கோடீஸ்வரன், சுனில் ரத்னசிறி மற்றும் ருவன்திலக ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-11-18

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பது தொடர்பில் கோபா உபகுழுவில் அவதானம்

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பல முக்கிய நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks