2021-11-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பத்துலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட 214 பணியாளர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டபோதும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இங்கு புலப்பட்டது.
குறிப்பிட்ட திட்டமொன்றுக்காகப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி இவ்வாறு சேவையில் நிரந்தரமாக்குவதில் பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைகிறது என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் அமைச்சின் மட்டத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிலைமையைத் திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களுக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்றிறன் அறிக்கை குறித்து கடந்த 17ஆம் திகதி பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு ஆராய்ந்திருந்தது. இதன்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.
1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு அமைய அமைக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணிகளைக் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் அந்தந்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதுவரை ஏறழத்தாழ 17 இலட்சம் ஏக்கர் காணிகள் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும், இவற்றின் மதிப்பு துல்லியமானதாக இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது. காணிகளைக் கையகப்படுத்தும்போதும், பல்வேறு அரசுகளின் கீழ் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சரியான முறையில் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்படாமை இந்நிலைமைக்குக் காரணம் என காணி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பிரதான சொத்துக்களான இந்தக் காணிகள் தொடர்பில் சரியான தகவல்களும், மதிப்பீடுகளும் ஆணைக்குழுவிடம் இருப்பது அவசியமானது என்றும், காணிகளை சரியான முறையில் அளவீடு செய்து, அதுபற்றிய திட்டவட்டமான அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவான வேலைத்திட்டத்தை தயாரித்து கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய குழு, செயலாளரிடம் உடனடியாக தலையிடுமாறு பணிப்புரை விடுத்தது.
காணி கையகப்படுத்தல் தொடர்பான சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இது போன்று கிட்டத்தட்ட 200 கோப்புகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை தனிநபர்களுக்கு வழங்குவது பாரிய பிரச்சினையென்றும், இதனைச் சீர் செய்வது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் 1972-1974ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குத் திட்டங்கள் மற்றும் சாற்றுதல் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக 50 ஏக்கர் காணிகளை வழங்காத 260 காணிகள் காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இதனால் 50 வருடங்களாக காலதாமதமடைந்திருக்கும் இந்தச் செயற்பாடு வரலாற்றுப் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட வழியொன்றை ஏற்படுத்த உரிய தலையீட்டை வழங்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஆணைக் குழுவின் வசம் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் காணிகள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய அவற்றின் பெறுமதி 676 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தற்போதைய காலத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கரின் பெறுமதி சுமார் 500 ரூபாவாக உள்ளதால், இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.
அத்துடன், ஆணைக்குழுவினால் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தக் காணிகளை வங்கிகளில் அடகுவைத்து கடன் பெறுவது சிக்கலானது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், சில காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஆணைக்குழுவின் வசமுள்ள பெறுமதியான காணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயனுள்ள விதத்தில் அபிவிருத்தி செய்வதற்கான மாதிரியைத் தயாரிப்பதே தற்போதைய அவசர தேவை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தேசிய முக்கியத்துவம் மிக்கது என்பதால் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மீண்டும் ஒருமுறை குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-23
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
2026-07-22
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு, பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
2026-07-22
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.
2026-07-22
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.