பார்க்க

04

E   |   සි   |  

2021-11-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறையைத் தடுக்க விரைவில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகளைத் தடுக்கும் புதிய சட்டம் விரைவில் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஆகியோரின் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் மீன்வளம் விரைவில் குறைந்துவிடும் என இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார். மீன் குஞ்சுகள் மாத்திரமன்றி மீன்களின் முட்டைகளும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி முறைகள் அச்சுறுத்தலானவை என்றும், இவற்றைத் தடுத்து நிறுத்தும் வகையில் விரைவில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடியில் ஈடுபட்டுள்ள படகுகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில் பல்வேறு வர்ணங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். இத்திட்டத்துக்கு நிதி உதவியளிக்கவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி தனது உதவியை நிறுத்தியிருப்பதால், வேறு தரப்பினரின் உதவியைப் பெற்றுக் கொள்ளவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கில் பருத்தித்துறை உட்பட ஐந்து மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், தேவைப்படின் பருத்தித்துறை துறைமுகத்தை அரச தனியார் கூட்டாண்மையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மீன்பிடிக் கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், மீன்பிடிக் கிராமங்களில் புதிதாக வீடுகளை அமைப்பது தொடர்பில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறினார்.

அதேநேரம், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அமல் சிந்தக, கருணாதாச கொடித்துவக்கு, அஜித் ராஜபக்ஷ, அசங்க நவரட்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், கலாநிதி சுரேன் ராகவன், சுதத் மஞ்சுள ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

3 4

 

5 6

 



தொடர்புடைய செய்திகள்

2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.


2026-02-13

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால்  அங்கீகரிக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks