பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-09
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் இன்று (09) இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும்.
இந்த சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, வடிவேல் சுரேஷ், அசோக்க பிரியந்த, வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-30
இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயலாற்றுகை, அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலைமை, இதற்கு முன்னர் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிரிவாகக் கலந்துரையாடப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைலமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் பதிவுசெய்யப்பட்டுள்ள நிதி முன்னேற்றம் மற்றும் இலாபத்தன்மை தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், அடைந்துள்ள முன்னேற்றத்தை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக, கொழும்பு துறைமுகம் எதிர்கொண்டுள்ள பிராந்திய மற்றும் உள்நாட்டு போட்டித்தன்மை தொடர்பில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தின் வளர்ச்சி, உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான MSC (Mediterranean Shipping Company) நிறுவனம் அத்துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளமை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் எதிர்கொள்ளக்கூடிய போட்டித் தாக்கங்கள் தொடர்பில் குழு அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அவை தாமதமடைவதற்கான காரணங்கள், கொள்முதல் மற்றும் கேள்விப்பத்திர நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அந்தத் தாமதங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித் தாக்கங்கள் தொடர்பிலும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.இதன்போது, தாமதங்களுக்கான காரணங்கள் தொடர்பில் முறையான கணக்காய்வொன்றை மேற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. எதிர்காலத்தில் இவ்வாறான தாமதங்களைத் தவிர்ப்பதற்காக வினைத்திறன்மிக்க கொள்முதல் மற்றும் திட்ட முகாமைத்துவ நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியது.ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் காங்கேசன்துறை உள்ளிட்ட பிராந்திய துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், அவற்றைச் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு நிர்மாண நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு ஆற்றலை மேம்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இறுதியாக, துறைமுக அதிகாரசபையின் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்தல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், அரச நிறுவனமொன்றாக அதன் வினைத்திறன் மற்றும் இலாபத்தன்மையை மேலும் அதிகரித்தல் ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என குழு வலியுறுத்தியது.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுல சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத் மற்றும் சாந்த பத்ம குமார ஆகியோரும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-07-30
கடந்த காலங்களிலும், முந்தைய அரசாங்கங்களின் கீழும் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த வீட்டுத் திட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன்களும் மானியங்களும் முழுமையாக வழங்கப்படாததால், அந்த வீட்டுவசதித் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவ்வாறு முடிங்கிய 5,000 வீட்டுத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவற்றில் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது குறித்து அடையாளம் கண்டு பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சுக்களின் இரண்டு முன்னாள் செயலாளர்கள் இணைத் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய பாதியில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பாதியில் கட்டப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.குறித்த அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் நீர்வழங்கல் குறித்த பல்வேறு பிரச்சினைகளை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வீட்டுப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.
2026-07-30
2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் கீழ் நிறுவப்பட்ட பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது வருடாந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியதுடன் இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2025 ஆம் ஆண்டில் அரசாங்கக் கடன் அளவு அதிகரித்தமை, வட்டி வீதங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகியவற்றால் அரசாங்கக் கடன் சேவையாற்றலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவத்தில் இலங்கை மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் ஊடாக பொதுக் கடன் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடன் முகாமைத்துவம், கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், நடுத்தர காலக் கடன் முகாமைத்துவ உத்திகளைத் தயாரித்தல் மற்றும் வருடாந்த அரசாங்கக் கடன் முகாமைத்துவ அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் போன்ற பிரதான பொறுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச நிதிச் சந்தைகள் மற்றும் நவீன கடன் முகாமைத்துவ முறைகள் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்காக தயாரிக்கப்படும் பயிற்சித் தேவைகள் மதிப்பீட்டு அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இந்த அறிக்கையின் மூலம் நிறுவனத்தின் அதிகாரிகளிடையே காணப்படும் அறிவு மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளம் காணுதல், முறையான வருடாந்த பயிற்சித் திட்டத்தைத் தயாரித்தல், சர்வதேச நிதிச் சந்தை நடவடிக்கைகள், கடன் முகாமைத்துவம் மற்றும் இடர் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான பயிற்சித் தேவைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட எதிர்கால பயிற்சித் திட்டங்களுக்குத் தேவையான வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான அடிப்படையை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், அரச தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க உத்தரவாதங்கள், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் அரசாங்கக் கடன் முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
2026-07-23
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


