02

E   |   සි   |  

2021-09-23

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பது பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடாகும் – குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று (22) தெரிவித்தார்.

இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ பாராளுமன்ற விசேட குழுவில் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன்,  இந்தக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்புவாக்கு முறையை முழுமையாக நீக்குவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதிக்குப் பொறுப்பான உறுப்பினர் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் இங்கு குறிப்பிட்டார்.

தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்தக் குழு முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறைவேற்று அதிகாரியுமான அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இது பிரயோக ரீதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார். இதேபோல, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தல்கள் தொடர்பான அனைத்து மறுசீரமைப்புக்களின் போதும் வாக்களிக்கும் அதிகாரம் மக்களின் இறைமையின் ஒரு அங்கமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்தின் கோட்பாடு இதன் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்தப்படுவது அவசியமானதாகும். பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் யாவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அஜித்.பி.பெரேரா விசேட குழு முன்னிலையில் வலியுறுத்தினார்.

தேர்தல் பிரசாரங்களுக்கான செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்குப் புதிய சட்டதிட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், இளையோர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இரட்டைப் பிரஜாவுரிமை தகுதியற்ற விடயமாக்கப்பட வேண்டும் என்றும், தகுதியுடைய சகல வாக்காளர்களையும் பதிவு செய்வதற்கு உரிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அஜித்.பி.பெரேரா இங்கு தெரிவித்தார்.

தேர்தல்களில் போட்டியிடும் தரப்புக்களுக்கு  அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வழங்கப்படும் ஒளிபரப்புக் காலம் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.

தேர்தல்கள் குறித்த கால அட்டவணையொன்று நாட்டில் காணப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, அலி சப்ரி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக, ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எல்லை நிர்ணய ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் 29ஆம் திகதி நடைபெறும் என இதன் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-08

NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விசாரணை

NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அலககட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டிஆராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு, இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியக கணக்காய்வாளர்கள்  தவறியமை தொடர்பிலும் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கான முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மட்டத்தில் மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்படி, NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:1)    இந்தக் கணக்காய்வு 2016.04.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரூ. 13,639,664,684/- (ரூ. 13.6 பில்லியன்) பெறுமதியான மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.2)    2026.09.29 அன்று மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் பின்வருமாறு:2025.01.01க்கு முன்னைய காலப்பகுதிக்கு – ரூ. 1.5 பில்லியன்2025ஆம் ஆண்டில் – ரூ. 9.6 பில்லியன்2026.03.31இல் முடிவடைந்த காலாண்டுக்கு – ரூ. 2.5 பில்லியன்3)    2026.04.06 அன்று NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ. 13.2 பில்லியனிலிருந்து ரூ. 13.6 பில்லியனாக ரூ. 0.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2026.06.22 திகதியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 2026.06.26 அன்று NDB வங்கியினால் வெளிப்படுத்தப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த மேலதிக மோசடி தொகை ரூ. 60 மில்லியனாகும்.4)    இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5)    CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், அடிப்படை வங்கியியல் முறைமையில் (Core Banking System) பயனர் மட்டத்திலான செயற்பாடுகள் (User Activities) மற்றும் பயனர் அணுகல் தகவல்களை (User Credentials) நிர்வகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய NDB வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு (Transaction Monitoring), நாளாந்த கணக்கிணக்கம் (Reconciliation), நிதி இணக்கப்பாடு (Compliance), உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் (Operational Risk Management) உள்ளிட்ட பல செயற்பாட்டுத் துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.6) வங்கியின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.


2026-10-05

இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதில், குறித்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வருகை தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தேர்தல்களுக்குப் பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இளைஞர் தலைமைத்துவத்தையும் அவர்களின் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


2026-10-05

இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடல்

1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை இயற்றுவது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அர்களின் தலைமையில் அண்மைபில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், 1996 ஆம் ஆண்டு மேற்குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 30 வருட காலப்பகுதியில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை இயற்றுவதன் அவசியம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை (UN CRPD) இலங்கை 2016 ஆம் ஆண்டு அங்கீகரித்திருந்த போதிலும், அந்த சமவாயத்துக்கு அமைவான உள்நாட்டு சட்டமொன்றை இதுவரை உருவாக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவைத் தீர்மானங்களை மேற்கொண்டு இச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனைத் தயாரிக்கும் போது ஆரம்பகால நோக்கங்களுக்கும் தற்போதைய சட்டமூலத்திற்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானது எனவும் மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுவினால் தமது அவதானிப்புகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட மாதிரி சட்டமூலம், சட்டவரைவு தயாரிப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அத்திணைக்களத்தினால் மீளத் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தேசிய பேரவையின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.இதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளையும் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்திற்கு (UN CRPD) அமைவாக சுயாதீன கண்காணிப்பு பொறிமுறையொன்றை நிறுவுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.புதிய சட்டங்களை இயற்றும் போதும் கொள்கைகளை வகுக்கும் போதும் “எங்களைப் பற்றிய முடிவுகளை எங்களைத் தவிர்த்து எடுக்க வேண்டாம்” என்ற அடிப்படையில், ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கான தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புகளை வழங்குதல், சமமான தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊதியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துதல், பணியிடங்களில் நியாயமான வசதிகளை ஏற்படுத்துதல், அரச சேவையில் ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கும் சர்வதேச தரநிலைகளுக்கும் ஏற்ப, ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலையான சட்டக் கட்டமைப்பொன்றை துரிதமாக உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.மேலும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் சட்டமூலத் தயாரிப்பு உபகுழுவின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-10-02

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 29) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.குறிந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும், நிதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.ஆணைக்குழுவின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை அங்கீகரித்தல், நிதி மற்றும் செயற்பாட்டு சுயாதீனம், நிதியக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி, ஆணைக்குழுவின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சின் ஊடாக அல்லாமல் நேரடியாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளைப் பெற்றுக்கொண்டு சபாநாயகர், 10 நாட்களுக்குள் அதனைப் பாராளுமன்றத்திற்கு (அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், பாராளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் திருத்தங்களுடன், தேசிய வரவு செலவுத் திட்ட ஆவணத்தில்/ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்காக நிதி அமைச்சரிடம் அது அனுப்பி வைக்கப்படும்.2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சரின் அவதானிப்புகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு செப்டெம்பர் மாதம் வரை காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனால் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், எதிர்வரும் ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டச் செயன்முறையை உரிய காலத்திற்குள் முன்னெடுப்பதற்காக, ஆணைக்குழுவின் மதிப்பீடுகளை மே 30ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டின் திறைசேரி சுற்றறிக்கையொன்றினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வாகனங்களை கொள்வனவு செய்தல்/குத்தகைக்கு எடுத்தல், பிராந்திய அலுவலகங்களுக்காக கட்டடங்களை வாடகைக்கு எடுத்தல் மற்றும் கடமைத் தேவைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.குறித்த நடவடிக்கைகளுக்காக நிதி அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.ஆணைக்குழுவின் நிதியத்தின் தன்மை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கென தனியான நிதியம் நிறுவப்பட்டுள்ளமை மற்றும் ஒருங்கிணைந்த நிதியம் மற்றும் ஆணைக்குழுவின் பொதுநிதியத்தின் ஊடாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என குழுவின் தவிசாளர் இந்தக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் குழுவினால் விசாரிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடப்பாடுகள் மற்றும் நாட்டின் ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.இதற்கமைய, ஆணைக்குழுவிற்காக 971 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2026 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 23 பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக தற்போது காணப்படும் அரசாங்கக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அவற்றில் சில கட்டடங்களைப் புனரமைத்து பயன்படுத்துவதற்கும், ஏனைய கட்டடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.மேலும், ஜப்பான் அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ், பிராந்திய அலுவலகங்களுக்குத் தேவையான கணினிகள் மற்றும் நிழற்படப் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திசாநாயக்க தெரிவித்தார்.அத்துடன், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்களில் சுமார் 34,000 பேர் தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயன்முறையின் மூலம் பெறப்படும் அபராதத் தொகைகள் ஆணைக்குழுவின் நிதியத்திற்கு வரவு வைக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.ஆணைக்குழுவின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாக குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, ஆணைக்குழுவின் தவிசாளரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளரின் (President of the Court of Appeal) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.குழு உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோர் இணையவழித் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks