பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-09-16
இந்தியாவின் லோக் சபாவினால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நேற்று (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டியதாகவும் “பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள ஜனநாயகத்திற்கு சட்டவாக்தக்தின் பங்கு“ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய லோக் சபாவின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கிய இந்த மெய்நிகர் மாநாட்டில் அனைத்துப் பாராளுமன்றங்களின் சங்கத்தின் தலைவர் திரு.டியுரெட் பச்செக்கோ மற்றும் ஒஸ்ரியா, கயானா, மாலைதீவு, சிம்பாபே, மொங்கோலியா மற்றும் நபீபியா ஆகிய நாடுகளின் சபாநாயகர்களும் உரையாற்றியிருந்தனர். இந்திய பிராந்தியங்களின் சட்டமன்ற சபாநாயகர்கள் பலரும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இம்மாநாட்டில் இணைந்திருந்தனர். இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திரு.தம்மிக தசநாயக்க அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
நவீன யுகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை கௌரவ சபாநாயகர் தனது உரையின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
“இலங்கைப் பாராளுமன்றம் ஆசியாவில் வயது வந்தவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் பழமையான பாராளுமன்றமாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற வகையில் இந்தியாவின் சட்டப்பேரவை பல்வேறு மத, பல்லின சமூகத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பது அயல்நாடான எமக்கு மாத்திரமன்றி ஜனநாயக ஆட்சியின் விற்பனர்களுக்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது” என சபாநாயகர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தியது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பொது மக்களின் ஈடுபாடுகளை அதிகரிக்கும் நோக்கில் திறந்த பாராளுமன்றம் என்ற கொள்கையை இலங்கை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் சபநாயகர் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
“புதிதாக உருவாக்கப்பட்ட தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களைச் சென்றடைவதற்கு பாராளுமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற செயற்பாடுகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கும், ஜனநாயகத்தை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும் குறிப்பாக ஜனநாயகத்தின் கொடியை ஏந்தக்கூடிய எதிர்கால சந்ததியினரான பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இவற்றை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம் ” என்றார்.
“தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் குழுக்களின் செயற்பாடுகளை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்க இலங்கை பாராளுமன்றம் தீர்மானித்ததுடன், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தும் முறையை நோக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது” எனவும் சபாநாயகர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில், “சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடிய துடிப்பான குழு முறைமையை இலங்கைப் பாராளுமன்றம் கொண்டுள்ளது” என்றார்.
கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு நாட்கள் குறைக்கப்பட்டாலும் வளமையான பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2026-11-20
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு பி.ப 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-20
குளங்களின் நீர்த்தேக்கப் பாதுகாப்பு எல்லையின் அடிப்பகுதியிலோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில், 1,417 கட்டடங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும், ஏனைய 779 கட்டடங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும் அமைந்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 102 சட்டவிரோதக் கட்டடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 779 கட்டடங்கள் இன்னும் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 700 குளங்களும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் 483 குளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றி, குளங்களின் பாதுகாப்பு வலயங்களைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களமும் இலங்கை மகாவலி அதிகாரசபையும் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
2026-11-20
தொல்பொருள் திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக ஐந்து இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.அதன்படி, புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ மற்றும் கலபெத்த ஆகிய தொல்பொருள் இடங்களும், தெமடமல் விகாரையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்களினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மொனராகலை மாவட்டத்தில் இதுவரை 137 தொல்பொருள் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கலபெத்த, மாளிகாவில, புத்துருவகல மற்றும் பிபில ஆகிய நான்கு தொல்பொருள் வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் வலயங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகள் குறித்து விளக்கிய அமைச்சர், கலபெத்த வலயத்தில் 2,000.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், மாளிகாவில வலயத்தில் 1,199.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், புத்துருவகல வலயத்தில் 1,426.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், பிபில வலயத்தில் 713.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், புத்துருவகல தொல்பொருள் இடத்தில் மத்திய கலாசார நிதியத்தினாலும், யுதகனாவ தொல்பொருள் இடத்தில் விகாரை நிர்வாகத்தினாலும், தெமடமல் விகாரையில் விகாரை நிர்வாகத்தினாலும் போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், மாளிகாவில மற்றும் கலபெத்த தொல்பொருள் இடங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2026-11-20
சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில் வன அடர்த்தியைப் பேணுவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வன அடர்த்தி 29.47 சதவீதமாகக் காணப்படுவதுடன், பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைய 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் வன அடர்த்தியை 32 சதவீதமாக அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காகக் கொண்டு சுற்றாடல் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் மாவட்டங்களில் அதிகூடிய வன அடர்த்தியைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதுடன், அதன் வன அடர்த்தி 62.20 சதவீதமாகும். அதேவேளை, குறைந்தபட்ச வன அடர்த்தியான 2.05 சதவீதம் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 113 வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த நிலப்பரப்பு 71,990.26 ஹெக்டேயர்களாகும்.இதற்கு மேலதிகமாக, நாட்டில் இடம்பெறும் காடழிப்பு உள்ளிட்ட வனக் குற்றங்களைத் தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் 2025 நவம்பர் மாதம் முதல் ‘வன சுரகும’ எனும் பெயரில் விசேட செயற்பாட்டு மையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 2025 நவம்பர் 03ஆம் திகதி முதல் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 701 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 216 சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வனப் பரப்பைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஏனைய நடவடிக்கைகளில், வனப்பகுதிகளில் வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவதாலும் மரங்களின் இலைகள் மற்றும் தழைகளை உண்பதாலும் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துதல், வனத் தீ அபாயங்களைக் கட்டுப்படுத்தி இயற்கையான மீளுருவாக்கத்திற்கு வாய்ப்பளித்தல், உள்நாட்டுத் தாவர இனங்களை நடுகை செய்தல் மற்றும் ஆக்கிரமிப்புத் தாவர இனங்களை அகற்றிக் கட்டுப்படுத்துதல் ஆகியன உள்ளடங்குகின்றன.தேசிய வனப் பரப்பு வரைபடத்தைப் புதுப்பிப்பதன் மூலம் வனப் பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து கண்காணித்தல், காடழிப்பு மற்றும் சட்டவிரோதமாக வனப்பகுதிகளைத் துப்புரவு செய்வதைக் கண்டறிவதற்குப் புவியியல் தகவல் முறைமை (GIS) மற்றும் தொலைநிலை உணர்தல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் காடழிப்பைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வனப் பரப்பில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், வனப் பரப்பு குறைவடையும் பிரதேசங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல், வன நிலங்களை வனப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தி அவற்றின் உரிமையைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.சீரழிவுக்கு உள்ளான வனப் பகுதிகளை மீளமைத்தல் மற்றும் மீண்டும் காடுகளை வளர்த்தல், வனப் பரப்பு தொடர்பான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் வனப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியனவும் இந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.மேலும், வன நிலங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதுடன், வனப் பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் வன விரிவாக்கப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.இதற்கு மேலதிகமாக, சமூகங்களுடன் இணைந்து கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் விவசாயக் காடு வளர்ப்பு மற்றும் சமூக அடிப்படையிலான காடு வளர்ப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், தனியார் துறையினரின் பங்களிப்புடனும் காடு வளர்ப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



