பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-09-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் பணியிடத் தெரிவு தொடர்பான வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றார். கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க மொழிகள் வீழ்ச்சியுறும் நிலைக்குச் சென்றிருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்துத் தெரிவித்தார். அத்துடன், தற்பொழுது ஆங்கிலம் கல்வி மொழியாகிவருவது தொடர்பிலும் அவர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இலங்கை சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை 02 வாரங்களுக்குள் உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. சட்டத்தை தனியானதொரு பாடமாக அல்லாது குடியியல் கல்வியில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலும் அதில் விடயங்கள் உள்ளடக்கப்படுவது முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்தார். சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் காணப்படும் உறவு இதில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்குவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 60,000 பட்டதாரிகளில் 18,000 பேர் ஏற்கனவே பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள நடைமுறை குழப்பம் நிறைந்தது என பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்குழுவில் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே, பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள சில பட்டதாரிகள் இது தொடர்பில் விருப்பம் தெரிவிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இங்கு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வேலைத்திட்ட நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் செயற்றிட்டத்துக்கு பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் ஒழுங்கீனம் காணப்படுகிறது என்பது குழுவில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இந்தத் திட்டத்தை மீளாய்வுசெய்யுமாறு குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்குத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுப பஸ்குவல், யதாமினி குணவர்த்தன, பிரேம்நாத்.சி.தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்குழுவில் இணைந்துகொண்டனர்.கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆறு மாதங்களின் பின்னர் கூடிய இந்தக் குழு சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இதுவாகும்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



