பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இன்று சர்வதேச பாராளுமன்ற தினமாகும். ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் திகதி சர்வதேச பாராளுமன்ற தினத்தை கொண்டாடுவதற்கு ஏனைய நாடுகளை போன்று உலகின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கை இவ்வருடமும் அபிமானத்துடன் ஒன்றிணைகின்றது. அதுமட்டுமல்லாமல், 1931 இல் சர்வசன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற நாடாக உலக வரலாற்றில் பதியப்பட்டுள்ள இலங்கை அந்த வாக்குரிமையை பயன்படுத்தி 1960 ஜூலை 21 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவந்து மற்றுமொரு முற்போக்கான வரலாற்றை பதிவு செய்தது.
இலங்கை உள்ளிட்ட 179 நாடுகளை உள்ளடக்கிய 1889 இல் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து இவ்வருடமும் ஜூன் 30 ஆம் திகதி சர்வதேச பாராளுமன்ற தினத்தை இலங்கை கொண்டாடுகிறது. தமது உறுப்பினர்களிடையே ஜனநாயக ஆட்சிமுறை, பொறுப்பு கூறுதல், ஒத்துழைப்பு, சட்டவாக்கத்தில் ஆண் பெண் சமநிலையை பேணுதல், இளைஞர் பங்கேற்பை வலுப்படுத்துதல் போன்ற நிலைபேறான விடயங்களை பேணுவதற்கு பங்களிப்பு செய்வது அந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும்.
பொதுமக்களின் வாக்குகளால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றமாகிய வலுவான நிறுவனம் இந்நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நிலையான அடித்தளமாகும். மக்கள் பிரதிநிதிகளாக இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம். அதேபோன்று இலங்கை பாராளுமன்றம் இந்நாட்டின் சட்டமியற்றல், நிதி முகாமைத்துவம், மேற்பார்வை மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான நிறுவனமாகும்.
நீங்கள் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டில் சட்டம் இயற்றுதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற அடிப்படை அதிகாரங்கள் சட்டவாக்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தற்போதைய கொவிட் 19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புதிய சட்டங்கள் தேவை என்று சுகாதார அமைச்சு கூறுகிறது, எனினும் அதன் வரைவு, செயல்முறை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து அனுமதியளிப்பது சட்டமன்றத்தின் பணியாகும்.
அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரைக்கு அமைய, அரச நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே காணப்படுகின்றது. இதில் வரவு செலவுத்திட்டத்துக்கான அனுமதி வழங்குதல் பிரதான விடயமாகும். இந்நாட்டின் எதிர்கால திட்டங்களுடன் தொடர்புடைய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் அரசின் பொருளாதார முன்மொழிவுகள் என்பன பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படுகின்றன.
விசாரணைகள் மற்றும் மேற்பார்வை என்பன தொடர்பில் பாராளுமன்றத்தில் அதிகளவு பணியாற்றுவது குழு முறைமை எனும் சிறிய பாராளுமன்றத்தை குறிப்பிடலாம். இது உலகம் முழுவதிலுமுள்ள பாராளுமன்றங்ககளால் பின்பற்றப்படும் வெற்றிகரமான முறையாகும். சட்டவாக்கத்துக்கு நீங்கள் தெரிவு செய்து அனுப்பும் பிரதிநிதிகள் இங்கு கட்சி பேதமின்றி கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் மாத்திரமல்லாமல் உரிய துறைசார் நிபுணர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, எமது பாராளுமன்றம் 225 மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளதுடன், அவர்கள் பொதுமக்களின் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இலங்கை பாராளுமன்றம் சபா மண்டபத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்காகவே குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை ஒதுக்குகிறது. பிரதமர் அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அந்த கேள்வியை முன்வைத்து விடைகளை பெற்றுக்கொள்ளும் முறைமை எமது பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது.
அதேபோன்று, எமது பாராளுமன்றமும், ஏனைய நாடுகளைப் போலவே, உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது.
உதாரணமாக, 2030 ஆம் ஆண்டு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் நாங்களும் ஒன்றிணைந்து இதனை அணுகுவதை குறிப்பிட முடியும்.
சமூகத்துடனான நெருங்கிய தன்மை காரணமாக இலங்கை பாராளுமன்றம் உலகின் ஏனைய பாராளுமன்றங்களை விட தனித்துவமானதாக காணப்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவால் வடிவமைக்கப்பட்ட எமது பாராளுமன்றம், கொவிட் காலத்திற்கு முன்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களால் நிரம்பியிருக்காத நாளொன்று எனது அரசியல் வரலாற்றில் நினைவில் இல்லை. எனினும், எதிர்பாராத விதமாக முகங்கொத்துவரும் இந்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு, சுகாதார ஒழுங்குமுறைகளை கட்டாயம் பேண வேண்டிய இக்காலகட்டத்தில் ஏனைய நிறுவனங்களை போன்றே எமக்கும் சமூக இடைவெளியை பேணி செயற்படுவதற்கு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கத்தில் தூர பகுதியிலுள்ள பாடசாலை அல்லது கிராமமொன்றிலிருந்து வரும் மாணவர்கள் அல்லது மக்கள் எம்மை சந்திக்க முடியாமல் போவது ஒரு குறையாகும். எனினும், ஏனைய நாட்களை போன்றல்லாமல் இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்தி பாராளுமன்ற பணிகளை தொடர்ந்தும் தடைகள் இன்றி மேற்கொள்ள முடிந்தமை வெற்றியாகும்.
இவ்வாறான நிலையில், நவீன விஞ்ஞானத்தினால் கூட இதுவரை அறியப்படாத ஒரு தோற்று நோய்க்கு மத்தியில் அவசரகால சூழ்நிலைகளிலும் எமது பாராளுமன்றத்தின் பங்கு மிக முக்கியமானது மற்றும் தீர்க்கமானது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்று மாத்திரமல்லாமல் கொவிட் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியிலும் நாட்டை ஒட்டுமொத்தமாக வடிவமைக்க சட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலம் சரியான திசையை காண்பிப்பது பாராளுமன்றமாகும்.
அதன் பயணம் இலகுவான ஒன்றல்ல என்பது சபாநாயகர் என்ற வகையில் என் பார்வையாகும். எனினும், நான் பின்பற்றும் பௌத்த மதத்துக்கு அமைய சமூகத்தை ஒடுக்காமல், இந்த பயணத்தை ஒற்றுமையாகவும் தாமதமில்லாமலும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறானால், சரியான நேரத்தில் மழை வரும், அறுவடை வளமாக இருக்கும், கட்சி, குல பேதமின்றி நாம் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கும் நல்ல தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய நாள் விரைவில் வரும்.
2026-11-20
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு பி.ப 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-20
குளங்களின் நீர்த்தேக்கப் பாதுகாப்பு எல்லையின் அடிப்பகுதியிலோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில், 1,417 கட்டடங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும், ஏனைய 779 கட்டடங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும் அமைந்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 102 சட்டவிரோதக் கட்டடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 779 கட்டடங்கள் இன்னும் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 700 குளங்களும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் 483 குளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றி, குளங்களின் பாதுகாப்பு வலயங்களைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களமும் இலங்கை மகாவலி அதிகாரசபையும் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
2026-11-20
தொல்பொருள் திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக ஐந்து இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.அதன்படி, புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ மற்றும் கலபெத்த ஆகிய தொல்பொருள் இடங்களும், தெமடமல் விகாரையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்களினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மொனராகலை மாவட்டத்தில் இதுவரை 137 தொல்பொருள் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கலபெத்த, மாளிகாவில, புத்துருவகல மற்றும் பிபில ஆகிய நான்கு தொல்பொருள் வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் வலயங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகள் குறித்து விளக்கிய அமைச்சர், கலபெத்த வலயத்தில் 2,000.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், மாளிகாவில வலயத்தில் 1,199.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், புத்துருவகல வலயத்தில் 1,426.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், பிபில வலயத்தில் 713.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், புத்துருவகல தொல்பொருள் இடத்தில் மத்திய கலாசார நிதியத்தினாலும், யுதகனாவ தொல்பொருள் இடத்தில் விகாரை நிர்வாகத்தினாலும், தெமடமல் விகாரையில் விகாரை நிர்வாகத்தினாலும் போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், மாளிகாவில மற்றும் கலபெத்த தொல்பொருள் இடங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2026-11-20
சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில் வன அடர்த்தியைப் பேணுவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வன அடர்த்தி 29.47 சதவீதமாகக் காணப்படுவதுடன், பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைய 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் வன அடர்த்தியை 32 சதவீதமாக அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காகக் கொண்டு சுற்றாடல் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் மாவட்டங்களில் அதிகூடிய வன அடர்த்தியைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதுடன், அதன் வன அடர்த்தி 62.20 சதவீதமாகும். அதேவேளை, குறைந்தபட்ச வன அடர்த்தியான 2.05 சதவீதம் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 113 வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த நிலப்பரப்பு 71,990.26 ஹெக்டேயர்களாகும்.இதற்கு மேலதிகமாக, நாட்டில் இடம்பெறும் காடழிப்பு உள்ளிட்ட வனக் குற்றங்களைத் தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் 2025 நவம்பர் மாதம் முதல் ‘வன சுரகும’ எனும் பெயரில் விசேட செயற்பாட்டு மையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 2025 நவம்பர் 03ஆம் திகதி முதல் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 701 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 216 சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வனப் பரப்பைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஏனைய நடவடிக்கைகளில், வனப்பகுதிகளில் வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவதாலும் மரங்களின் இலைகள் மற்றும் தழைகளை உண்பதாலும் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துதல், வனத் தீ அபாயங்களைக் கட்டுப்படுத்தி இயற்கையான மீளுருவாக்கத்திற்கு வாய்ப்பளித்தல், உள்நாட்டுத் தாவர இனங்களை நடுகை செய்தல் மற்றும் ஆக்கிரமிப்புத் தாவர இனங்களை அகற்றிக் கட்டுப்படுத்துதல் ஆகியன உள்ளடங்குகின்றன.தேசிய வனப் பரப்பு வரைபடத்தைப் புதுப்பிப்பதன் மூலம் வனப் பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து கண்காணித்தல், காடழிப்பு மற்றும் சட்டவிரோதமாக வனப்பகுதிகளைத் துப்புரவு செய்வதைக் கண்டறிவதற்குப் புவியியல் தகவல் முறைமை (GIS) மற்றும் தொலைநிலை உணர்தல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் காடழிப்பைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வனப் பரப்பில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், வனப் பரப்பு குறைவடையும் பிரதேசங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல், வன நிலங்களை வனப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தி அவற்றின் உரிமையைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.சீரழிவுக்கு உள்ளான வனப் பகுதிகளை மீளமைத்தல் மற்றும் மீண்டும் காடுகளை வளர்த்தல், வனப் பரப்பு தொடர்பான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் வனப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியனவும் இந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.மேலும், வன நிலங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதுடன், வனப் பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் வன விரிவாக்கப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.இதற்கு மேலதிகமாக, சமூகங்களுடன் இணைந்து கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் விவசாயக் காடு வளர்ப்பு மற்றும் சமூக அடிப்படையிலான காடு வளர்ப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், தனியார் துறையினரின் பங்களிப்புடனும் காடு வளர்ப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks