logo

02

E   |   සි   |  

2021-03-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

காணி அளவீடுகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்கத் தீர்மானம் - காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுடத்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
விசேடமாக காணிகளை அளவிடும் செயற்பாடுகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்பதுடன், இதனால் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றை நாடு முழுவதும் முன்னெடுக்க முன்னெடுப்பது பொருத்தமானது என இக்குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணி அமைச்சின் அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையொன்று பரீட்சார்த்தமாக திரப்பணே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினர்.

அத்துடன், ‘பிம் சவிய’ காணிகளை பிழையற்ற முறையில் அளவீடு செய்து விரைவில் அவற்றக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறான காணிகளில் உள்ள பொது மக்கள் வங்கிகளில் கடன்களைப்பெறும்போது கூட பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும், 15-20 வருடங்களாக இந்தப் பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி, காணிகளை அளவிடுவதற்கு விரும்பும் காணி உரிமையாளர்களின் காணிகளை விரைவில் அளவீடு செய்து அவர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், காணி உரிமைப் பத்திரங்களைக் கொண்டிருக்காத விகாரைகள் போன்ற மதஸ்தலங்களுக்காக அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். விசேடமாக உரிமைப் பத்திரங்களைக் கொண்டிராத சுமார் 325 விகாரைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு விகாராதிபதி எனும் பதவியின் பெயரில் உரிமைப் பாத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

மேலும், கிளிநொச்சி பிரதேசத்தில் காணப்படும் சில காணிகள் தொடர்பான சிக்கல்கள், காணிகளை அளக்கும் பணிகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை குறைத்தல், அதிகாரம்பெற்ற நில அளவையாளர்களின் பணிகளை அரச தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படாமை தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஏனைய பிரதேச ரீதியாக காணப்படும் காணி தொடர்பான சிக்கல்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பது.
இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான மாயாதுன்ன சிந்தக அமல், சார்ள்ஸ் நிர்மலநாதன், சுதத் மஞ்சுள, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, ரோஹன திசாநாயக்க, அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஷாரப், மஞ்சுளா திசாநாயக்க, காதர் மஸ்தான், முதிதா டி. சொய்ஸா, குணாதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-07-10

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரின் நியயமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக டி.பி.விக்ரமசிங்க அவர்களை நியமிப்பதற்கு அண்மையில் (ஜுலை 08) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய இந்தக் குழுவில் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, ரிஷாத் பதியுதீன், கே. காதர் மஸ்தான், குமார ஜயக்கொடி, கதிரவேலு சண்முகம் குகதாசன் மற்றும் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-07-08

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானமொன்றுக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு விதிமுறைகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய,  (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும்  இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-07-08

சிறந்த பொதுப் போக்குவரத்து சேவைக்காக கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படும் – கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் கிடைத்துள்ளதாகவும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜுலை 07) கௌரவ அமைச்சர தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதற்கு அமைய, 177, 170 மற்றும் 190 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பஸ்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னோடி திட்டமாக இந்த கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.முன்னர் நடைமுறையில் இருந்த சாதாரண சேவை, அரை சொகுசு சேவை, சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய நான்கு வகைப்பாடுகளில், அரை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய இரண்டு வகைப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அதற்கான விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு விலைச் சூத்திரத்தை பயன்படுத்துவது நியாயமானதல்ல எனத் தெரிவித்த அமைச்சர், நீண்ட தூர சேவைகளில் ஏற்படும் அதிக செலவுகளை கருத்தில் கொண்டு, அதற்கான பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு தனியான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.பஸ் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும், பயணிகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.எரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குழுத் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். இதன்போது, எரிபொருள் விலை குறைவடைந்தாலும், ஏனைய செலவுகள் தொடர்ந்தும் உயர்ந்த நிலையில் காணப்படுவது சவாலாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.வீதி விபத்துக்களை குறைத்தல், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான பாதைகளை அமைத்தல், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அத்துடன், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளுக்கு தொடர்புடையதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு தலையீடு செய்யுமாறும் குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் வெளியிடப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதியிடப்பட்ட 2480/22 இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குழுவில் ஆராயப்பட்டு, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உற்பத்தியாளர்களால் பாதுகாப்புப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களுக்கு பாதுகாப்புப் பட்டிகளை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த சலுகைக் காலத்தை 2026.03.20 முதல் ஆரம்பித்து 2026.06.19 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக குறித்த  ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.கௌரவ நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-07-07

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

சுற்றுலாத் துறையை மேம்படுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பற்றியும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இலங்கை வெளிநாடுகளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவை பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்படக் கூடிய திட்டங்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இக்கூட்டத்தில்     வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்  அருண் ஹேமச்சந்திரா,  கௌரவ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் (பேராசிரியர்) ருவன் சமிந்த ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks