logo

02

E   |   සි   |  

2021-03-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒன்லைனில் அனுமதி

உள்ளூராட்சி சபைகளினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒன்லைன் ஊடாக அனுமதி வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பி.கே.ரணவீர நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே முன்வைத்த யோசனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர்நாயகம் கோட்டே மாநகரசபை, கம்பஹா மற்றும் களுத்துறை பிரதேச சபைகளில் இந்தப் பரீட்சார்த்தத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாயத் தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பரீட்சார்த்தத் திட்டத்துக்கான சகல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் அறிந்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டங்களை அங்கீகரிக்கும்போது ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் வெவ்வேறு விதமான விண்ணப்பப்படிவங்களை வழங்குவதாகவும், சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பப்படிவங்களை அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குக் கிடைக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது விண்ணப்பதாரர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகாத வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் போன்ற 17 நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான முதலீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் பரீட்சார்த்த திட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இவ்வருடத்துக்குள் 20 நடைபாதைகள், கிராமிய மற்றும் நகர வீடமைப்புத் திட்டங்களை அமைத்தல் உள்ளிட்ட இலக்குவைக்கப்பட்ட பணிகள் பெருமளவு முன்னெடுக்கப்படும் என்றும், இது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் பாரிய பகுதியாக அமையும் என்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்த தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, முஜிபுர் ரஹ்மான், ஜகத் குமார, சுதத் மஞ்சுள, யாதாமினி குணவர்த்தன, நசீர் அஹமட், உபுல் மகேந்திர ராஜபக்ஷ , அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-20

அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து

நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு  ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021–2024 கணக்காய்வாளர் தலைமையதிபதியின் யகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து “கோபா” குழுவில் விரிவாக ஆராயப்பட்டது

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

தேசிய இளைஞர் கொள்கை வரைபு தொடர்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம்

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks