E   |   සි   |  

2021-03-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

புதிய கல்விக் கொள்கையின் தற்போதைய நிலைமை குறித்து மே மாதம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவிக்கப்படும்

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்படும் வரைபு தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் மே மாதம் அறிக்கையொன்றை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சமர்ப்பிக்குமாறு அக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இக்கொள்கைத் தயாரிப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சுக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கல்வி ஆணைக்குழுவுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை இல்லாமல் செய்வது தொடர்பில் புதிய தேசிய கல்வி கொள்கையைத் தயாரிப்பின்போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக உபவேந்தர்கள் இங்கு வலியுறுத்தியிருந்தனர்.

அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் தேசிய அபிவிருத்தி செயல்முறையில் பொதுக் கல்வி முறை இன்றியமையாத பகுதியாக இருப்பதால், பாடசாலைக் கல்வி தொடர்பான தேசிய கொள்கைகள் திருத்தப்பட்டு விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 50 வீதமாக அதிகரித்திருப்பது பிரச்சினைக்குரியது என்றும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கலைப்பிரிவின் கீழ் கல்வி பயிலும் எண்ணிக்கை மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலையின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் நேற்றுமுன்தினம் (23) ஆராயப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டன.

இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடிய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, தயாசிறி ஜயசேகர, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பிரசன்ன ரணவீர ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக, அஷோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், நிரோஷன் பெரேரா, வைத்தியலாநிதி உபுல் கலப்பதி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய, சிவஞானம் சிறிதரன், பீ.வை.ஜீ.ரத்னசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்கு மாகாண மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இரண்டாம் நிலை பாடசாலைகளில் கல்வி கற்கும்போதே மாணவர்கள் தமக்கான பாடநெறிகளைத் தெரிவுசெய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். இதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தகவல் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துவதற்கான வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக ஆங்கிலம் கற்பிப்பதை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் கல்வி தொடர்பான அதிகாரிகள் வலியுறுத்தினர்.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் பௌதீக மற்றும் மனிதவளங்களை உயர்ந்த அளவில் பயன்படுத்த பட்டப்படிப்பைத் தொடர்வதில் காணப்படும் பாரம்பரிய முறையை மாற்றி, அதிகமாக மாணவர்கள் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையில் பாடநெறிகளை மாற்றியமைக்குமாறும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியது. இதற்கு தொலைதூரக் கல்வி, ஒன்லைன் கல்விமுறையைப் பயன்படுத்த முடியும் என்றும், இதனூடாக புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி அதிகமான மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளை வடிவமைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு சுட்டிக்காட்டியது.

அரச நிறுவனங்கள், பகுதியளவு அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் மனிதவளத் தேவை தொடர்பில் முழுமையாக அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அநுராத விஜயகோன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

12



தொடர்புடைய செய்திகள்

2026-09-02

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த தேசிய கொள்கையொன்று துரிதமாக வகுக்கப்பட வேண்டும் – சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய கொள்கையொன்றை துரிதமாக வகுப்பதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், Coalition for Inclusive Impact (CII), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA) ஆகியன இணைந்து முன்னெடுத்த திட்டமொன்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள் தொடர்புடைய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.இதன்போது, மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தல், காட்டு யானைகளின் உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாத்தல், முறைசாரா மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் உணவு வளங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 06 யானை வழித்தடங்களைத் துரிதமாக வர்த்தமானியில் அறிவித்தல், வனவிலங்கு சரணாலயங்களில் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதனிடையே, முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாப்பதற்காக, அங்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை முறையாக அளவீடு செய்து எல்லைகளை அடையாளப்படுத்துவதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறு அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மனித–யானை மோதல் உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்குப் பொருத்தமான வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றின் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கிங்ஸ் நெல்சன், சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோருடன் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.


2026-09-02

தியவன்னா ஓயா நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமான தேசிய வேலைத்திட்டம் அவசியம் – துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தல்

தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks