பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 10ஆம் திகதி ஆரம்பமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதி ஆகிய தினங்களில் தொடர்வதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.
மார்ச் 23ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பின்னர் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எழுப்பப்படும் 10 கேள்விகளுக்காக இந்நேரம் ஒதுக்கப்படும்.
அதன் பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10வது சரத்தின் கீழ் இறக்குமதி வரி குறித்த பிரேரணை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள், மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதமும் இடம்பெறும் என தம்மிக்க தஸநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
மார்ச் 24ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதன் பின்னர் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மீண்டும் நடைபெறும்.
மார்ச் 25ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளபோதும், மார்ச் 26ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் 27(2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்படாது முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முழு நேரமும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்கு ஒதுக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அன்றையதினத்துக்காக ஒத்திவைக்கப்படும் வாய்மூல கேள்விகள் குறித்து எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல கேள்வியெழுப்பியதற்குப் பதிலளித்த சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்குப் பதில் வழங்குவதற்காக எதிர்வரும் தினம் ஒன்றை அல்லது இரண்டு தினங்களை ஒதுக்குவதாகவும் கூறினார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, அமைச்சர்களான கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ நிமல் சிறிபால டி.சில்வா, கௌரவ மஹிந்த அமவீர, கௌரவ பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கயந்த கருணாதில, கௌரவ அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இக்குழுவின் உறுப்பினரல்லாத பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-21
வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (நவ. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 பி.ப 6.00 மணி வரை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கும், பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், டிசம்பர் 05ஆம் திகதி சனிக்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணிவரை இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 9.00 மணிவரை இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படவுள்ளது.டிசம்பர் 07ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் மற்றும் மூன்றாவது மதிப்பீட்டை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. (இச்சட்டமூலம் 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது) அதற்கமைய, மேற்குறிப்பிட்ட தினங்களில் சபை ஒத்திவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.அதேநேரம், பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அது தொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; சுயாதீன இளைஞர் ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; காவந்திஸ்ஸ யானையின் மரணம், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் ஆகிய எனும் மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2026-11-20
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு பி.ப 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-20
குளங்களின் நீர்த்தேக்கப் பாதுகாப்பு எல்லையின் அடிப்பகுதியிலோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில், 1,417 கட்டடங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும், ஏனைய 779 கட்டடங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும் அமைந்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 102 சட்டவிரோதக் கட்டடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 779 கட்டடங்கள் இன்னும் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 700 குளங்களும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் 483 குளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றி, குளங்களின் பாதுகாப்பு வலயங்களைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களமும் இலங்கை மகாவலி அதிகாரசபையும் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
2026-11-20
தொல்பொருள் திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக ஐந்து இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.அதன்படி, புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ மற்றும் கலபெத்த ஆகிய தொல்பொருள் இடங்களும், தெமடமல் விகாரையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்களினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மொனராகலை மாவட்டத்தில் இதுவரை 137 தொல்பொருள் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கலபெத்த, மாளிகாவில, புத்துருவகல மற்றும் பிபில ஆகிய நான்கு தொல்பொருள் வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் வலயங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகள் குறித்து விளக்கிய அமைச்சர், கலபெத்த வலயத்தில் 2,000.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், மாளிகாவில வலயத்தில் 1,199.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், புத்துருவகல வலயத்தில் 1,426.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், பிபில வலயத்தில் 713.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், புத்துருவகல தொல்பொருள் இடத்தில் மத்திய கலாசார நிதியத்தினாலும், யுதகனாவ தொல்பொருள் இடத்தில் விகாரை நிர்வாகத்தினாலும், தெமடமல் விகாரையில் விகாரை நிர்வாகத்தினாலும் போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், மாளிகாவில மற்றும் கலபெத்த தொல்பொருள் இடங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks