2021-02-23
இலங்கையில் பாரிய பிரச்சினையாகவுள்ள யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
யானை மனித மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி பிரித்விராஜ் பர்னாந்து தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், இதனைவிட நிபுணத்துவ குழுவினால் 2006ஆம் ஆண்டு யானை மனிதன் மோதலைத் தீர்ப்பதற்கு தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கைத் திட்டத்தை ஆராய்ந்து இந்த செயற்றிட்டத்தைத் தயாரிக்குமாறு கோப் குழு தெரிவித்தது.
யானை மனித மோதலால் உலகில் அதிகமான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை காணப்படுவதுடன், அதிகமான மனித உயிர்கள் இழக்கப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது. எனவே, இந்தப் பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான வைத்தியகலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, வீரசுமன வீரசிங்ஹ, நிரோஷன் பெரேரா, பீ.வை.ஜீ.ரட்ணசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதிமேதகு ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ள குழு அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய வனஜீராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு இது தொடர்பான முழுப் பொறுப்பை வழங்க முடியாது என்றும், இதற்காகப் பொது மக்களின் ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள், கமநல சேவைகள் திணைக்களம், மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மின்சார வேலிகள் அமைக்கப்படுவதுடன் அவை பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மக்கள் தாமாகவே முன்வந்து மின்சார வேலிகளை அமைத்தல் மற்றும் விவசாயம் செய்யும் காலங்களில் மாத்திரம் தற்காலிக மின்சார வேலிகளை அமைப்பது போன்ற மாற்று யோசனைகளும் இந்தப் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ளன.
யானைகளை விரட்டுவதற்கு தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய நடைமுறை 50 வருடத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் தோல்வியடைந்திருப்பதாக யானை மனிதன் மோதல் தொடர்பில் ஆராய்ச்சி அனுபவம் மிக்க நிபுணரமான கலாநிதி பிரித்விராஜ் பர்னாந்து இங்கு தெரிவித்தார். சமூக பங்களிப்புடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பங்குதாரர்களின் பங்களிப்பைப் பெற்று வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகள் காணப்படுவதாகவும், இதனை முன்னுதாரணமாகக் கொண்டு அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொருந்தும் வகையில் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
யானைகளுக்கான வேலிகள் அமைத்தல், தொங்கும் வேலிகளை அமைத்தல், யானைகளுக்கு அகழிகள் அமைத்தல், யானைகளை விரட்டுவதற்கான தேனீ வளர்ப்பு போன்ற செயற்றிட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். வஜனீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 1500 என்பதுடன், இதில் யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் குறித்து செயற்படும் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியதாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதும் இங்கு புலப்பட்டது.
இதேவேளை, குறிப்பிட்ட சில பிரதேசங்களில் யானைகளுக்கான தடுப்பு வேலிகள் தமது காணிகளின் எல்லைகளாக அமைக்கப்படுவதாகக் கருதி அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பிலும், சில பகுதிகளில் மின்சார வேலிக்கான பற்றரிகள் திருடப்பட்டிருப்பது குறித்து முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இருந்தபோதும், கிராம மக்களைத் தெளிவுபடுத்தி அவர்களின் நேரடி ஒத்துழைப்புடன் யானைக்கான பாதுகாப்பு வேலிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. தற்பொழுது செயலிழந்திருக்கும் ‘கஜமிதுரோ’ போன்ற சமூக அமைப்புக்களை மீண்டும் உடனடியாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரைத்தது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பங்காளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று கிராமிய சங்கங்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான கொள்கை ஆவணங்களில் திட்டங்கள் இருந்தாலும், அவை அடிமட்ட அளவில் நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்று குழு சுட்டிக்காட்டியது.
இதற்கு முன்னர் யானை மனித மோதல்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட யானை சரணாலயங்கள் மற்றும் யானைகள் கடக்கும் இடைவழிப்பாதைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை, கல்வி அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்சினைகள் குறித்த விடயங்கள் பாடநெறிகளில் உள்ளடக்கப்படாமை, மின்சார வேலிகள் உரிய தரம் இன்றி அமைக்கப்படுகின்றமை போன்றவை தொடர்பில் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் குழு கவனம் செலுத்தியது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர், வஜனீவராசிகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கோபா குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
2026-10-27
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.குறித்த விசேட குழு அதன் தலைவர், கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் அவர்களும், புதிய சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நுவன் பெல்லந்துடாவ அவர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் தத்தமது கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறை தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர் அவர்களும், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-10-27
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுத் தொடரில் இளைஞர் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் அதற்காக இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர் சமூகத்தின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுகள் அண்மைக் காலத்தில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.இந்தச் செயலமர்வுகளில் இளைஞர் யுவதிகளால் முன்வைக்கப்பட்ட பொதுவான பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.இளைஞர் சமூகத்தினால் அடையாளம் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுப் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக முன்வைப்பதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தொடர்புடைய விடயங்கள் குறித்து இளைஞர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றச் செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம் மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.இக்கூட்டத்தில், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும், “Voice to Policy” செயலமர்வுத் தொடருக்கு ஒத்துழைப்பு வழங்கும் CII (Coalition for Inclusive Impact) மற்றும் NDI (National Democratic Institute) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
2026-10-22
விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்களைத் திருத்துவதற்கு உட்பட்டு, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (ஒக். 20) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழு கூடியபோதே, குறித்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் ஊடாக இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும். தேசிய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு மதியுரைக் குழுவையும் பிராந்திய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு மதியுரைக் குழுக்களையும் தாபிப்பதற்காகவும், (476 ஆம் அத்தியாயயமான) விசர்நாய்க்கடிநோய்க் கட்டளைச் சட்டத்தையும் (477 ஆம் அத்தியாயமான) நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டத்தை நீக்குவதற்கும், அத்துடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காவும் ஏற்பாடு செய்வது இச்சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குவதற்கான வயது எல்லை தொடர்பில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நாய்களுக்கு முதலாவது விசர்நாய்க்கடி தடுப்பூசியை வழங்க வேண்டிய வயது தொடர்பான ஏற்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.தெருநாய்களுக்கு தன்னார்வ அடிப்படையில் உணவு வழங்குதல், அவற்றுக்குப் பாதுகாப்பளித்தல் அல்லது சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்க உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் சட்டபூர்வமான நிலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான நபர்கள் தன்னார்வ அடிப்படையில் நாய்களுக்கு உதவுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை அந்நாய்களின் சட்டபூர்வ உரிமையாளர்களாகக் கருதுவதையோ அல்லது நாய் உரிமையாளர்களுக்குரிய அனைத்து பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்துவதையோ தவிர்ப்பதற்காக, உரிய சட்ட ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.நாய்களுக்கான கருத்தடை நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை கால்நடை மருத்துவ மேற்பார்வையின் கீழ் சத்திரசிகிச்சை மூலம் மேற்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. ஹோர்மோன் ஊசிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மாற்று முறைகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, விலங்கு நலனை உறுதிப்படுத்தும் வகையில் உரிய சட்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறையை முறைப்படுத்துதல் மற்றும் அவ்வாறு பதிவு செய்வதற்கான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் நிலையங்களின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துதல், அந்நிலையங்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் விலங்குகள் மீதான துன்புறுத்தல்களைத் தடுப்பதற்காக உரிய அபராதங்கள் மற்றும் தண்டனைகளைத் திருத்துதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.விசர்நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் கண்காணிக்கும் போது, முறையான நடைமுறையைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் கால்நடை மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான தேசிய மற்றும் பிராந்திய மதியுரைக் குழுக்களை உருவாக்கும்போது, அவற்றின் அமைப்பு, பொறுப்புகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவத்தையும், சம்பந்தப்பட்ட நிபுணத்துவ நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, சந்தன சூரியஆரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-10-22
அரச கொள்முதல் செயன்முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், முறைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய கொள்முதல் சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உ றுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று அண்மையில் (ஒக். 20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, திலின சமரகோன், அஜித் அகலகட, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அரச கொள்முதல் செயன்முறை, அதில் பின்பற்றப்படும் தரநிலைகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள், பதிவு நடைமுறையில் நிலவும் சிக்கல்கள், சட்டக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் டிஜிட்டல் முறைமைகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது ஏற்படும் தாமதங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.கொள்முதல் செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்காக கொள்முதல் குழுக்களின் நிதி அதிகார வரம்புகளை அதிகரித்தல், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் கொள்முதல்களுக்காக நீண்டகாலக் கட்டமைப்பு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் கொள்முதல் வழிகாட்டல்களைத் தயாரித்தல் ஆகியவை தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், மருந்துப் பதிவு நடைமுறையை நீண்டகால அடிப்படையில் முறைப்படுத்துவதன் மூலம் தாமதங்களைக் குறைத்து சந்தைப் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.அரச கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் PROMIS (Procurement Management Information System) முறைமை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது 19 அமைச்சுக்கள் உள்ளிட்ட 394 செயற்பாட்டிலுள்ள கொள்முதல் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் கொள்முதல் செயன்முறைகளைக் கண்காணிப்பதற்கு இம்முறைமை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 2027ஆம் ஆண்டளவில் மாகாண சபைகள் மற்றும் அனைத்து அரச திணைக்களங்களையும் உள்ளடக்கும் வகையில் இம்முறைமையை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.இந்த டிஜிட்டல் முறைமையை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் முன்னைய ஒப்பந்ததாரருடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. புதிய அபிவிருத்தியாளரைத் தெரிவுசெய்வதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவுசெய்யப்பட்டு, உலக வங்கியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறைமையை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், தற்போது நடைமுறையிலுள்ள கொள்முதல் வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகளைச் செயற்படுத்துதல், அத்துடன் ஒட்டுமொத்த கொள்முதல் செயன்முறையையும் முறைப்படுத்துவதற்காகப் புதிய கொள்முதல்ச் சட்டத்தைத் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு அமைவாகத் தயாரித்தல், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சட்டமூலத்தைத் திருத்தும்போது எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்கள் ஆகியன இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் பயனாளி உரிமை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துதல், குறிப்பாக குறித்த நிறுவனங்கள் முன்னர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவையா என்பதைக் கண்டறிதல், அத்துடன் மேன்முறையீடுகள் தொடர்பான நடைமுறைகளை முறைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.அரச கொள்முதல் செயன்முறையில் காணப்படும் நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் தடைகளைக் குறைத்து, அரச நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, 2026ஆம் ஆண்டுக்கான 06ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடும் (நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்) குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இதன்போது, காத்திருப்புப் பட்டியலில் உள்ள கடன் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி இக்கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.