2021-02-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் கொவிட்-19 சமூகத்துக்குள் கொண்டுவரப்படுவதையும், சமூகத்தின் மத்தியில் உள்ள வைரஸ் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய எப்பொழுதும் சுகாதார விதிமுறைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு முகங்கொடுப்பது மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்கு அதிக காலத்தை செலவுசெய்வது தொடர்பில் தனது கருத்தைத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதற்கமைய மார்ச் மாதமாகும்போது நாட்டின் சனத்தொகையில் 57 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
உடவளவை தேசிய சரணாலயம் மற்றும் போகஹாபிட்டிய உத்தேச அபயபூமிக்கு இடையில் அமைந்துள்ள தஹய்யகல யானைகள் சரணாலயம் யானைகளுக்கான வழிப்பதாதையாக இருப்பதால் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்தப் பகுதி சட்டவிரோதமாக அகற்றப்படுவதால் இங்குள்ள யானைகளுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக பாராளுமன்ற உறுப்பினர் வருன லியனகே சுட்டிக்காட்டினார்.
யானைகள் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சிறந்த வளமாகும் என்றும், சுற்றுலாத்துறையை வெற்றிகொள்வதற்கு வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட, இலங்கை தொடர்பான தகவல்களை சுற்றுலாப் பயணிகள் இணையத்தளங்களின் ஊடாகவே அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து இணையத்தளங்களில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது. கவர்ச்சியரமான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இணையத்தளங்களில் காணப்பட்டாலும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை இருப்பதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை முன்வைத்தார்.
இந்த ஆலோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் தமது இணக்கத்தைத் தெரிவித்திருந்ததுடன், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களை விசாரித்த பின்னர் இது தொடர்பில் நம்பகத்தன்மை அல்லது உறுதிப்படுத்தலை வழங்குவதன் ஊடாக சுற்றுலாத்துறையை பலப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
காலி மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, கீதா குமாரசிங்க, மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். காலி மாவட்டம் உள்ளிட்ட தென்மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து சுற்றுலா அமைச்சர் வினவியிருந்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இங்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இவற்றை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வி.சானக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, மனுஷ நாணயகார, உதயன கிரிந்திகொட, ஜயந்த கெடகொட, டொக்டர் உபுல் கலப்பதி, எம்.உதயகுமார, டயானா கமகே, குணதிலக ராஜபக்ஷ, வீரசுமன வீரசிங்க, சம்பத் அதுகோரல, சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-08-18
கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த செயலமர்வுக்கு CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணை வழங்கியது.
2026-08-11
இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-08-11
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-08-10
இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, முஜிபுர் ரஹ்மான், எம்.கே.எம்.அஸ்லம், தர்மசிறி விஜேசிங்ஹ, மேஜர் ஜெனரல் (ஒய்வு) ஜி.டி.சூரியபண்டார ஆகியோரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.