E   |   සි   |  

2020-12-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

I.C.T.A நிறுவனத்தின் தோல்வியடைந்த இலத்திரனியல்-ஓய்வூதியத் திட்டத்துக்கான செலவு 278 மில்லியன் ரூபா – கோப் குழு

வரையறுக்கப்பட்ட இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினால் ( I.C.T.A.) ஆரம்பிக்கப்பட்ட இலத்திரனியல் ஓய்வூதியத் திட்டத்துக்கு 278.54 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பதுடன், இது முழுமையாகத் தோல்வியடைந்த திட்டமாகும் என என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் வழங்கிய நிதியைப் பயன்படுத்தி I.C.T.A நிறுவனம் இந்தத் திட்டத்துக்கான வன்பொருள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சேவையை இணையத்தளத்தின் ஊடாக வினைத்திறனாக வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக மேல்மாகாண சபையின் கீழ் உள்ள மாவட்ட செயலகங்கள், முப்படையினர், திறைசேரி திணைக்களம், ரயில்வே திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றில் மேல் மாகாணசபையை மேவுகை செய்யும் வகையில் இது திட்டமிடப்பட்டது. எனினும், வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகள் காரணமாக நாடு முழுவதும் நிறைவேற்றுவதற்குப் பதிலாக 2013 நவம்பர் 01ஆம் திகதியிலிருந்து இச்செயற்றிட்டம் கைவிடப்பட்டது.

இதன் விளைவாக 278.54  மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டிருப்பதுடன், இதுபோன்ற பல தோல்வியுற்ற திட்டங்களுக்கு ஐ.சி.டி.ஏ பணத்தை வீண்விரயம் செய்திருப்பதும் கோப் குழுவில் வெளிப்பட்டது.

நாடு முழுவதும் இணையத்தள வசதிகைளை வழங்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட கூகுள் லூன் செயற்றிட்டத்துக்கான உபகரணங்களை சுங்கத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதற்கு 1,851,322 ரூபாவும், இத்திட்டத்தின் மேம்படுத்தலுக்காக 6,427,941 ரூபாவும் (6.4 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளபோதும் இது தோல்வியடைந்த திட்டம் என்றும் கோப் குழுவில் கண்டறியப்பட்டது.

பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்றையதினம் (08) கோப் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, இந்திக அநுருத்த பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத் சி. தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார், பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசாங்க நிறுவனங்களை இணைப்பதன் மூலம் சேவைகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு I.C.T.A நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஆரம்பித்த ‘லங்கா அரச வலையமைப்பு’ செயற்றிட்டத்துக்கு 2016ஆம் ஆண்டு 850.47 மில்லியன் ரூபா அங்கீகரிக்கப்பட்டிருந்ததாகவும், இதில் 148.33 மில்லியன் ரூபா மாத்திரம் செலவிடப்பட்டுள்ளன. இருந்தபோதும் இச்செயற்றிட்டத்தின் முன்னேற்றம் 17 வீதமாகும்.

இத்திட்டம் தோல்வியடைந்தமை தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன், அவ்வாறு தோல்விகளைக் காண்பித்தபோதும் நிறுவனம் 500ற்கும் அதிகமான செயற்றிட்டங்களை ஆரம்பிக்க ஆயத்தங்களைச் செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரவணக்க கேள்வியெழுப்பினார்.

தேசிய புலமைச்சொத்து அலுவலகத்தால் நிறைவேற்றப்பட்ட ஈ-என்ஐபிஓ செய்றிட்டம் தொடர்பான கொள்முதல் செயற்பாடுகளுக்காக 2016ஆம் ஆண்டு 32.5 மில்லியன் ரூபா பெறப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் இங்கு வெளியானதுடன், இந்த நிதி I.C.T.A நிறுவனத்தின் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இதுபோன்ற நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான திட்டமொன்றின் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலத்திரனியல் உள்ளூராட்சி என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவிருந்த திட்டம் தோல்வியடைந்திருந்ததுடன், 2016ஆம் ஆண்டு இது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2017       டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது இதற்காக 39 மில்லியயன் ரூபா செலவுசெய்யப்பட்டிருந்தபோதும் பின்னர் இத்தொகை செயற்றிறன் அறிக்கைகளில் உள்ளடக்கப்படாமை குறித்தும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

2003ஆம் ஆண்டு முதல் விரிவான திட்டமொன்றைத் தயாரிக்கவில்லையென்றும், 2017ஆம் ஆண்டு 2,737,000 ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் கோப் குழுவில் தகவல்கள் வெளிப்பட்டன.

2003 முதல் 2019 வரையான காலப்பகுதி தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தி மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அதேநேரம், I.C.T.A நிறுவனத்தின் உயர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பிலும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால் நிரந்தர அடிப்படையில் முக்கிய பதவிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கோப் குழு சுட்டிக்காட்டியதுடன், I.C.T.A நிறுவனத்துக்குள் ஒரு துல்லியமான பதவிநிலைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதுவரையிலிருந்த அதிகாரிகளால் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோப் குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியது.

 

1

2

3



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks