logo

E   |   සි   |  

2020-08-03

செய்தி வகைகள் : செய்திகள் 

அரசியலமைப்புப் பேரவையின் தலைவராக முன்னாள் சபாநாயகர் வழங்கிய சேவைக்குப் பிரதமர் பாராட்டு

அரசியலமைப்புப் பேரவையின் 82வது கூட்டம் இன்று (ஆகஸ்ட் 03) மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்னாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர். நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில், அரசியலமைப்பின் உறுப்பினர்களை வரவேற்ற அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர், மிகவும் வேலைப்பழு நிறைந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ளமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதன் பின்னர், பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து அரசியலமைப்பு பேரவை கவனம் செலுத்தியிருந்ததுடன், இவற்றை நிரப்புவது குறித்த இறுதித்தீர்மானத்தை அடுத்த கூட்டத்தில் எடுப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.
அத்துடன், நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலாண்டு அறிக்கைகள் பற்றியும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கலாநிதி தீபிகா உடுகம வழங்கியுள்ள இராஜினாமாக் கடிதம் குறித்து அவதானம் செலுத்தியிருந்த அரசியலமைப்புப் பேரவை, மனித உரிமைகள் ஆணைக்குழுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும் பாராட்டியிருந்தது. மனித உரிமை ஆணைக்குழு உலகில் மிகவும் சிறந்த ஆணைக்குழுக்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் உடுகம, அரசியலமைப்புப் பேரவைக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் குறிப்பிடுகையில், அரசியலமைப்புப் பேரவையின் தலைவராகப் பங்கேற்கும் இறுதிக் கூட்டம் இதுவென்றும், இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். சகல தரப்பினரினதும் கருத்துக்களைப் பெற்று அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே சகல தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கௌரவ கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார். தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் எந்தவிதமான கருத்துவேறுபாடுகளும் இன்றி ஏகமனதாக முடிவுகளை எடுக்கக் கிடைத்தமை குறித்தும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை வினைத்திறனாகவும், உரிய காலத்திலும் நடத்துவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புத் தொடர்பிலும் தலைவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கிய ஒத்துழைப்புக் குறித்து சகல சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் அவர் நன்றிகளை வெளியிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகையில், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை நட்புறவான சூழ்நிலையில் நடத்தியிருப்பதுடன், அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அவற்றுக்கும் இடமளிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் எனது பாராட்டுக்களை கரு ஜயசூரிய அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சபாநாயகர் தொடர்பில் பிரதமர் முன்வைத்த கருத்துக்களுடன் தானும் இணங்குவதாக கௌரவ மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.  
அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் தனது பதவியிலிருந்து முன்னெடுத்த செயற்பாட்டைப் பாராட்டியிருந்த கௌரவ பிமல் ரத்னாயக்க, கரு ஜயசூரிய அவர்கள் பாராளுமன்றத்துக்காக செயற்பட்ட விசேடமான சபாநாயகர் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன்; நவீன தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு சபாநாயகர் முக்கிய பங்காற்றியதாகவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
சிவில் சமூக உறுப்பினரான யாவிட் யூசுப் குறிப்பிடுகையில், அரசியலமைப்புப் பேரவையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தாலும் சகலரினதும் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு சமமாக கவனம் செலுத்தியிருந்ததாகக் கூறினார். மற்றுமொரு சிவில் சமூக உறுப்பினரான பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார் அவர்களும் அரசியலமைப்புப் பேரவையின் தலைவரின் செயற்பாடுகளைப் பாராட்டியிருந்தார்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks