logo

E   |   සි   |  

2020-02-28

செய்தி வகைகள் : செய்திகள் 

வினைத்திறனான அரசாங்க சேவையை வழங்க அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை

வினைத்திறனான அரசாங்க சேவையை வழங்க சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை கணனி வலையமைப்பின் ஊடாக மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் உண்மையுடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சில அரசாங்க நிறுவனங்களில் நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக ஊடங்களில் அறிக்கையிடப்படுகின்றன. அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கணக்காய்வு அறிக்கைகள் நான்கு வருடங்களின் பின்னர் காலதாமதப்படுத்தி குழுக்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது பிரச்சினைக்குரியது என்றும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

2018 ஆம் ஆண்டில் 844 நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் தெரிவுசெய்யப்பட்ட 109 நிறுவனங்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 55 நிறுவனங்கள் தங்க விருதுகளையும், 23 நிறுவனங்கள் வெள்ளி விருதுகளையும், 31 நிறுவனங்கள் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் விருதுகளை வழங்க முன்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்க சேவை சரியான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தப்படுவதுடன், அரசாங்க சேவையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். தனியார் துறையில் உள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்றி அரசாங்க சேவையும் முன்னோக்கிச் செல்வது அவசியம். அரசாங்க சேவையில் உள்ளவர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச நிறுவனங்களில் இடம்பெறும் வீண்விரயம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குழுக்களின் செயற்பாடுகள் நாட்டுக்கு நன்மையளிப்பதாயின் அதில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனச் சுட்டிக்காட்டிய அவர், சுயாதீன ஆணைக்குழுக்கள் பக்கச்சார்பின்றி செயற்படுவது அவசியமானது என்றும் கூறினார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகள் அரசாங்க நிறுவனங்களை வினைத்திறனாக மாற்றுவதாக அமையவேண்டுமே தவிர, அரசாங்க அதிகாரிகளை அதைரியப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களின் ஊடாக பரந்துபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை இடைநிறுத்திவிடால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். உயர் பதவிகள் பற்றிய குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கக் கிடைத்தமை தனக்கு கௌரவமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்தில் பல நாடுகளின் பாராளுமன்றங்களுடன் ‘பாராளுமன்ற இராஜதந்திரத்தை’ வலுப்படுத்த முடிந்தது. பாராளுமன்றக் குழுக்களினால் சுட்டிக்காட்டப்படும் விடயங்கள் தொடர்பில் மாதமொன்றில் ஆகக் குறைந்தது இரண்டு நாட்களாவது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை கணனி மயப்படுத்தப்பட்ட முறையின் ஊடாக மதிப்பீடு செய்வதன் மூலம் சிறந்த பலனை அடைய முடிந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதன் ஊடாக அரசாங்க நிறுவனங்களில் சிறந்த நிதி நிர்வாகத்தை ஏற்படுத்த முடிந்திருப்பதாகவும், 2015ஆம் ஆண்டில் மதிப்பீட்டின் பிரதிபலன் 64 வீதமாக இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் பிரதிபலன் 78 வீதமாக உயர்ந்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று அரசாங்க நிறுவனங்களை நெறிமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இவ்விருதுவழங்கும் நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

 

1  5

6

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks