logo

E   |   සි   |  

2020-01-01

செய்தி வகைகள் : செய்திகள் 

உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் - சபாநாயகர் கரு ஜயசூரிய

உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் இருப்பதுடன், இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான பாராளுமன்றமாக மாறியிருப்பதாகவும் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தெரிவித்தார்.

 

“நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் செயற்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்ய முடியும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் புதிய சபாநாயகர் இந்த முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வாரென நம்புகின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்றத்துக்குள் சகோதாரத்துவத்தை ஏற்படுத்தி, அனைவரும் ஒரே குடும்பத்தவர் போன்று செயற்படும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சபாநாயகர் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டபோது இருந்த பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது இது குறித்து திருப்தியடைவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். பிறந்திருக்கும் புத்தாண்டில் பாராளுமன்ற பணியாளர் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

 

இன்று (01) நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடியை சபாநாயகர் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பாராளுமன்ற பணியாளர்கள் அனைவரும் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம்/உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.

 

தொடர்ந்தும் உரையாற்றிய சபாநாயகர், “நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகின்றன. இளைஞர்கள் கிளர்ச்சி, அரசியல் முரண்பாடுகள் மற்றும் இன, மத ரீதியான வேறுபாடுகள் காரணமாக நாடு பின்நோக்கிப் பயணித்துள்ளது. நாட்டில் இன, மத வேறுபாடுகளை களைவதன் ஊடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை நாம் ஏற்படுத்த வேண்டும். இது நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்க இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தேசிய இலக்கை அடைவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காக பாராளுமன்றம் சிறப்பான சேவையாற்றி வருகிறது என்றார். பாராளுமன்றத்தில் புதிதாக தொடர்பாடல் திணைக்களத்தை உருவாக்க முடிந்துள்ளதுடன், நூல்நிலையத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பிறந்திருக்கும் புதிய வருடம் சவால்மிக்க வருடமாக அமையும் என்றும் சகலரும் ஒன்றிணைந்து இதற்கு முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

 

இன்றைய நிகழ்வுகளில் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் (நிர்வாகச் சேவைகள்ம்) திருமதி. குஷானி ரோஹனதீர, உதவி செயலாளர் நாயகம் (சட்டவாக்கச் சேவைகள்ம்) திரு. டிக்கிரி ஜயதிலக, பாராளுமன்ற திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks