logo

E   |   සි   |  

2018-03-07

செய்தி வகைகள் : செய்திகள் 

திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை ஆகியவற்றை பாராளுமன்றம் அங்கீகரித்தது

maceதிருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “நடத்தைக் கோவை” ஆகியவற்றை இலங்கை பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. அதற்கிணங்க, 2017 நவம்பர் 07 மற்றும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் குழுவின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டன. திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவுகள் மற்றும் நடத்தைக் கோவை என்பன பாராளுமன்ற உறுப்பினர்களின் பரசீலனைக்காக கடந்த ஆண்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

 

ஏனைய திருத்தங்களுடன் உயர் பதவிகள் பற்றிய குழு முதலியவற்றுக்கான ஏற்பாடுகள் கூட்டிணைக்கப்பட்டு, 25 வருடங்களுக்கு முன்னர் 1993 பெப்ரவரி 26 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இறுதியாக திருத்தப்பட்டது. 2015 இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணளவாக இரு வருட கால நீண்ட கால செயன்முறையின் வெளிப்பாடே நிலையியற் கட்டளைகளை திருத்துதல் மற்றும் நடத்தைக் கோவையினை வரைதலாகும். கௌரவ சபாநாயகர் அவர்களின் தலைமையிலான நிலையியற் கட்டளைகள் குழுவானது, இக்கால இடைவெளியில் பன்னிரெண்டு முறை சந்தித்துள்ளதுடன், இது ஆறாம் மற்றும் ஏழாம் பாராளுமன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இத்துறையுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆரறிவாளர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோரின் பரிந்துரைகளை உள்வாங்கி நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, விசேட விடயங்களை கவனிப்பதற்காக மற்றும் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்காக நான்கு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

 

சமகால சட்டவாக்க தேவைகள் மற்றும் சபை மற்றும் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான தேவை சில காலங்களாக உணரப்பட்டது. நிலையியற் கட்டளைகளில் உள்வாங்கப்பட்டுள்ள சில புதிய திருத்தங்கள் பின்வருமாறு;

  • இலத்திரனியல் வழிமுறைகளினூடான சபை மற்றும் குழுக்களின் நேரடி ஒலிபரப்புக்கான ஏற்பாடுகள்
  • இலத்திரனியல் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள்
  • பாராளுமன்ற அமர்வு நேரங்கள்
  • ஒத்திவைப்பு வினாக்கள்
  • பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
  • துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அமைச்சு ஆலோசனைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, பின்வரிரசை குழு, போன்றவற்றை கூட்டிணைத்தல்

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் நோக்கமானது பாராளுமன்றத்துக்கு, அவர்களின் தேர்தல் தொகுதி மற்றும் பொதுமக்களுக்கான தமது பொறுப்புடைமைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அவர்கள் தமது தத்துவங்களையும் பணிகளையும் மற்றும் கடமைகளையும் தங்களால் பிரயோகித்தல் புரிதல் மற்றும் நிறைவேற்றுவதல் என்பவற்றுக்கு உதவுவதற்காகும். ஒவ்வொரு உறுப்பினரும் நடத்தை கோட்பாட்டை நிலைநிறுத்துவதாகவும், உறுப்பினர் அல்லது எந்தவொரு கோரிக்கையின் மீறலுக்கும் எந்தவொரு குற்றமற்ற நடத்தை பற்றியும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை பற்றிய குழுவிற்கு பரிந்துரைக்கப்படலாம், இதையொட்டி அந்த விவகாரத்தை விசாரித்து, ஒப்புதலையும் அளிக்கலாம்.

 

சபாநாயகரின் அறிவித்தலின் பின்னரே திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் நடத்தைக் கோவை என்பன செயற்பாட்டிற்கு வரவுள்ளன.

 

நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை (2017-11-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை (2018-03-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவு (2017-06-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு (2017-08-09 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks