E   |   සි   |  

2017-08-04

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற சேவையில் 40 வருட கால பூர்த்தியை முன்னிட்டு கௌரவ பிரதம அமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்தல்

இந்தச் சபையின் உறுப்பினராகச் செயற்பட்டு தொடர்ச்சியாக 40 ஆண்டு காலச் சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்தச் சபையானது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், பொதுவாக நாட்டுக்கும் குறிப்பாக பாராளுமன்றத்திற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுநல நோக்குடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட சேவையை மீளாய்வுக்கு உட்படுத்தி அன்னாரின் அனைத்து எதிர்கால முயற்சிகளும் வெற்றியடைய ஆசிகளை வழங்குவதற்குமாக பிரேரணையொன்றினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் இவ்வாறான சபை அமர்வொன்று நடாத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இன்றைய தினக் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தின் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாவார். 1977ஆம் ஆண்டு பியகம ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு (இரண்டாவது தேசிய அரசுப் பேரவை) தெரிவு செய்யப்பட்ட அவர் அதன் பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளார். இது அவர் பிரதம அமைச்சர் பதவியை வகிக்கும் நான்காவது தடவையாகும் (2015 ஆகஸ்ட் முதல் இற்றைவரை). 1993 மே முதல் 1994 ஆகஸ்ட் வரை, 2001 டிசம்பர் முதல் 2004 பெப்ரவரி வரை மற்றும் 2015 ஜனவரி முதல் 2015 ஜூன் வரை இந்நாட்டின் பிரதம அமைச்சர் பதவி அவரினால் வகிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பதவியை வகிக்கின்றார். இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு, கல்வி, நீதி, கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகாரம், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் போன்ற முக்கியமான அமைச்சுப் பதவிகள் பல அவரினால் வகிக்கப்பட்டுள்ளன. 1989 மார்ச் முதல் 1993 மே வரை பாராளுமன்ற சபை முதல்வர் பதவியையும், 1994 ஒக்டோபர் முதல் 2000 ஆகஸ்ட், 2000 செப்டெம்பர் முதல் 2000 ஒக்டோபர், 2000 ஒக்டோபர் முதல் 2001 ஒக்டோபர் மற்றும் 2004 ஏப்ரல் முதல் 2010 ஏப்ரல் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

 

இப்பாராளுமன்ற விஷேட அமர்வுக்கு முன்னதாக, பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆசி வேண்டி சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் அவரது பணியாட்டொகுதியினர் ஒழுங்கு செய்திருந்த “போதி பூஜா” ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

 

 1 2

 3 4

 5 6

 



தொடர்புடைய செய்திகள்

2026-11-28

பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் பெரும்பான்மை வாக்குகளாலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு வாக்கெடுப்பின்றியும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று (நவ. 28), பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் (103, 222 முதல் 224, 304, 325) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.குழுநிலை விவாதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 6.20  மணியளவில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் இலக்க செலவுத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பொன்றைக் கோரினார். அதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய,  81 மேலதிக வாக்குகளால் குறித்த (103) செலவுத் தலைப்பு நிறைவேற்றப்பட்டது.அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய செலவுத் தலைப்புகள் (189, 226, 320) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.


2026-11-27

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன

2027ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் 05வது நாளான இன்று (நவ. 27) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செலவுத் தலைப்புக்கள் (124, 216, 331) மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் (151, 290) திருத்தங்கள் இன்றி, வாக்கெடுப்பு இன்றியும், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 151ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டன.


2026-11-27

கொழும்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்காக இதுவரை 26,151 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை புத்தளம், அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்காக இதுவரை 26,151.89 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இத்திட்டத்தின் அனைத்து நிர்மாணப் பணிகள், செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை ஒப்பந்ததாரரிடமிருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இத்திட்டத்தின் காலப்பகுதியை நீடிப்பது மற்றும் திட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முறைமை தொடர்பில் China Harbour Engineering Company Limited நிறுவனத்துடன் கலந்துரையாடி தீர்மானிப்பதற்கும், அதற்காகக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்திலிருந்து நாளாந்தம் அகற்றப்படும் 480 மெற்றிக் தொன் குப்பைகள் கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள கழிவுகளிலிருநு்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-11-27

உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கால்நடைகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்திக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடியும் என விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.இதற்கமைய, தேசிய பால் உற்பத்தி வேலைத்திட்டத்தை (Dairy Hub) நடைமுறைப்படுத்துவதன் மூலம் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், உயர் இன கால்நடைகளை உருவாக்குவதற்காக செயற்கைக் கருவூட்டல் சேவைகள் மற்றும் இனப்பெருக்க முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், கால்நடைகளின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்காக புல் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல், கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்தி தடுப்பதுடன் கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், பண்ணை முகாமைத்துவம், கால்நடை நலன்புரி மற்றும் பால் உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குப் பயிற்சி, தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு கால்நடையிடமிருந்து பெறப்படும் பாலின் அளவையும் ஒட்டுமொத்த பண்ணை உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவது திரவப் பால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் மூலம் அந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டில் 1,227,379 ஆகக் காணப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1,525,717 ஆக அதிகரித்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டில் 381,431 ஆகக் காணப்பட்ட எருமைகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 448,606 ஆக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சி எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.2023 ஆம் ஆண்டில் 371.73 மில்லியன் லீற்றராகக் காணப்பட்ட ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தி, 2025 ஆம் ஆண்டில் 410.16 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks