E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

வர்த்தக நோக்கங்களுக்காக சமயத் தலைவர்களின் உருவங்களை பயன்படுத்துவதை தடைசெய்தல்

சகல சமயங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டுமென்பதுடன் புத்தபெருமான், யேசுநாதர், சிவபெருமான், முஹம்மட் நபி (ஸல்) அவர்கள் ஆகியோரின் உருவங்களை வர்த்தக விளம்பரங்களிலோ வேறுவிதமான சமயசார்பற்ற படிவங்களிலோ பயன்படுத்தலை தடைசெய்தலும் வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்

சுனாமி அனர்த்தம் காரணமாக ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து இது வரை அப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பின், பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்ட செயலாளர் பிரிவு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்கள் முகம்கொடுத்துள்ள அல்லது தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

மும்மொழி பேசப்படும் இலங்கைக்காக “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றைத் தாபித்தல்

மும்மொழி பேசப்படும் இலங்கைக்கான பத்தாண்டு தேசிய மூலோபாயச் சட்டகம் ஒன்றை வகுத்தலானது, தேசிய ஒருங்கிணைப்புக்கும் சமூக ஒற்றுமைக்குமான ஒரு திருப்புமுனை நடவடிக்கையாக அமையுமெனவும் எனவே சிங்கள மொழிபேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறுகிய கால வளமளித்தல் நிழ்ச்சித்திட்டங்களின் வாயிலாக தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுடன் “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பறிமாறிக்கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

முன் பிள்ளைப் பருவக் கல்வி தொடர்பில் தேசிய திட்டமொன்றை உருவாக்குதல்

எமது நாட்டில், பிள்ளைகளின் கல்வியில் முக்கிய இடம் வகிக்கும் முன் பிள்ளைப் பருவக் கல்வியை (முன்பள்ளிக் கல்வி) வழங்குவது தொடர்பில் தேசிய திட்டமொன்றை தயாரிக்கவேண்டியுள்ளதுடன், முன் பள்ளி நிர்வாகிகளுக்கு முறையான பயிற்சியும், ஆட்சேர்ப்பு முறைமையுடன் சம்பள முறையொன்றும் தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 119 முதல் 122 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) காசிமி மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
(ii) ரொசான் ரணசிங்க ஜனசஹன மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
(iii) இலங்கை புனித சூசையப்பர் சகோதரர் சபை (திருத்தம்) - "பி" நிலையியற்குழு
(iv) (iv) ரன்ஜித் அலுவிஹாரே மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு


அதனையடுத்து, 1705 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks