பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஜூலை 10 ஆம் திகதிய 2496/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான அசோஸியேடட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்டின் வருடாந்த அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2025 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் வாழ்க்கைச் செலவு உயர்வு, பணவீக்கம் மற்றும் வறுமை
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்
கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2026.07.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல்
நாடு தற்போது பால் இறக்குமதியில் தங்கியிருப்பது கணிசமான அந்நியச் செலாவணி இழப்புக்கு இட்டுச்செல்வதாலும், சிறந்த இன மாடுகளுக்கான, கால்நடைச் சேவைகளுக்கான, தீவனத்துக்கான மற்றும் உட்கட்டமைப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் போன்ற பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகங்கொடுப்பதாலும், மேலும், இச்சவால்களைத் தீர்ப்பது உணவுப் பாதுகாப்பினை அதிகரித்து, கிராமியத் தொழில்களை உருவாக்கி, இறக்குமதிகளில் தங்கியிருத்தலைக் குறைப்பதாலும், சிறந்த இன மாடுகளுக்கான அணுகல் மற்றும் கால்நடைச் சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் தீவனப் பயிர்ச்செய்கையை விரிவாக்குவதன் மூலமும் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவதன் மூலமும் பாற் பண்ணை விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவதன் மூலமும் அரச – தனியார் பங்காண்மைகளை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தி தொடர்பான ஆய்வினை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தியில் தன்னிறைவினை அடைவதற்காக அரசாங்கத்தினால் தேசிய பால் அபிவிருத்திக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பாலுற்பத்தியாளர் குழுக்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட குழு இதன் அமுல்படுத்தலைக் கண்காணித்து, மேலதிக நடவடிக்கைகளை விதந்துரைக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
சுற்றுச்சூழல் சமநிலைக்கும் கடற்றொழிலுக்கும் மிக முக்கியமானதாக அமையும் கண்டல் தாவர சூழல்தொகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
இலங்கையின் பழச் சந்தையில் இயற்கையாகப் பழுத்த பழங்களுக்குப் பதிலாக, இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி அவற்றை செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இறக்குமதி செய்யப்படும் பழங்களையும் இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இப்பழங்களை பிள்ளைகள் அதிகம் உட்கொள்வதாலும், நேர்மையற்ற வணிகர்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தை அழிவுக்குட்படுத்தி மேற்கொண்டுவரும் இச்செயற்பாட்டை நிறுத்துவதற்கு உரிய வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல்
இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பல்வகைமை நிறைந்த ஒரு நாடாக கருதப்படுவதாலும், காடழிப்பு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சட்ட விரோத வன விலங்கு வர்த்தகம், மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமிடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணத்தினால் வருடாந்தம் வன விலங்குகளினதும் மனித உயிர்களினதும் இழப்பு பெருமளவில் இடம்பெறுவதாலும், புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் தேசிய வன விலங்குகள் முகாமைத்துவக் கொள்கையொன்றை வகுத்தல் நிலைபேறான அபிவிருத்தி நோக்கமாக இருப்பதாலும், அதன் மூலம் விலங்குகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படல், மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைவடைதல் உள்ளடங்கலாக விவசாயிகளின் பொருளாதார நிலையும் சமூக வாழ்க்கைத் தரமும் மேம்படுவதாலும், அதன் பொருட்டு செயற்படுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான நவீன கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்து செயற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரதப் பாதை மற்றும் மாத்தறையிலிருந்து கல்முனை வரையான புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதன் மூலம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பெருமளவிலான மக்களுக்கு பயன் கிடைப்பதனால், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல்
கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களின் எண்ணிக்கை, அவ்வாறு தகனம் செய்யப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் போன்ற தகவல்களை விசாரிப்பதற்கும், இறந்தவர்களின் ஜனாஸாக்களை இவ்வாறு வலுக்கட்டாயமாகத் தகனம் செய்தமைக்கு ஏதுவான பின்னணி மற்றும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படவர்களின் உறவினர்களின் மனநிலை தொடர்பாக விசாரணை செய்வதற்கும், இதற்கு உடந்தையாக இருந்து வழிகாட்டுதல் களுக்கு முரணாகச் செயற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட அரசாங்க அலுவலர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல்
வட மாகாணம், கிழக்கு மாகாணம், மொனராகல மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீடித்து நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களாலும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புக்களாலும் தொடர்ந்தும் பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுத்து வருவதாலும்; தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பின்தங்கிய பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாரபட்சமான சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாலும்; பொருளாதார ரீதியில் பின்னடைந்த இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சியையும், நிலைபெறுதகு அபிவிருத்தியையும் பால்நிலை வலுவூட்டலையும் மேம்படுத்தும் குறிக்கோளுடன் இக்கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதற்கென தனியானதொரு தேசிய முன்னெடுப்பினைத் தாபிப்பது அவசியமாக இருப்பதாலும்; 250 மில்லியன் டொலர் தொகையினை இலக்காகக் கொண்டு, 10+2 ஆண்டு காலப்பகுதியிலான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்தும் இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்தும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் மனிதாபிமானக் கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கின்ற பங்களிப்புகளைத் திரட்டுவதற்கு ஒரு தேசிய அபிவிருத்தி நிதியத்தைத் தாபிப்பதற்கும்; அந்த நிதியினை விவசாயம், மீன்பிடி, மற்றும் குடிசைக் கைத்தொழில் என்பவற்றின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தைப் புத்துயிர்ப்பிப்பதற்கும், தொழில் வாய்ப்பையும் மற்றும் பெண்களின் சமூகப்-பொருளாதார ஊக்குவிப்பையும் மேம்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதியை அபிவிருத்தி செய்வதற்கும், முடங்கிக் கிடக்கும் சொத்துக்களை செயலூக்கப்படுத்தி அவற்றை மீளப்பயன்படுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் (SME) மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள் ஆகியவற்றுக்கு உதவுவதற்கும், மீள்புதுப்பிக்கத்தகு சக்தியிலும் மற்றும் ஏனைய வணிக ரீதியில் சாத்தியமான கூட்டுத் தொழில்முயற்சிகளிலும் முதலிடுவதற்கும், திறன் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயன்படுத்தவும்; உள்ளூர் திறனாற்றலை கட்டியெழுப்புவதற்காக முதலீடுகளிலுள்ள சாத்தியமான இடைவெளிகளை ஒழித்தல், நிதிகளின் பயனுள்ள மற்றும் வெளிப்படைத் தன்மைமிக்க பயன்பாடு ஆகியவற்றினை உறுதிப்படுத்தி, தொழில்நுட்ப உதவி வசதியைத் (TAF) தாபிக்க உதவுவதற்கும்; பொருளாதாரச் செயற்பாடுகளிலும் தீர்மானமெடுத்தல் விடயங்களிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு அளவிடக்கூடிய இலக்குகளைக் கொண்டு சகல முதலீட்டுத் துறைகளிலும் பால்நிலையின் உள்ளடக்கும்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும்; இலங்கையின் பிரத்தியேகமான அபிவிருத்தி, நல்லிணக்கம், நிலைபெறுதகு அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒரு அவசர தேசிய நடவடிக்கையாக அந்த நிதியம் தாபிக்கப்படுவதைக் கருத்திற்கொள்வதன் மூலம் கருத்திட்டச் செயற்படுத்துகையில் ஒப்புரவுமிக்க பிராந்திய உள்ளடக்கம், வகைப்பொறுப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நிதியத்தை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த அமைச்சுக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் அதிகாரமளிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க
அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks