E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

1. ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியம்

இச்சட்டத்தின் நியதிகளின்படி தகவுடையோராகவரும் குறித்த சில ஊழியர்களுக்கு ஓய்வூதிய நன்மைகளை வழங்குவதற்கு ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியமொன்றை தாபிப்பதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

2. கடல்கடந்த ஊழியார்கள் ஓய்வூதிய நன்மைகள் நிதியம்

இச்சட்டத்தின் நியதிகளின்படி ஓய்வூதியத்திற்கு தகவுடையோராகவரும் குறித்த சில ஊழியர்களுக்கு ஓய்வூதிய நன்மைகளை வழங்குவதற்கு கடல்கடந்த ஊழியர்கள் ஓய்வூதிய நன்மைகள் நிதியமொன்றைத் தாபிப்பதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

3. ஓய்வூதியங்கள் (விளைவாந்தன்மையினவான ஏற்பாடுகள்)

2011 வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளில் வரவு செலவுத் திட்டப் பிரேரணையொன்றை பின்பற்றி ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டத்தினதும் கடல்கடந்த ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டத்தினதும் சட்டவாக்கத்தினின்றெழும் குறித்தசில விளைவாந்தன்மையினவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

4. நிதித்தொழில்

நிதித்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

5. பிரதேசிய சங்வர்தன வங்கி (திருத்தம்)

2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, பிரதேசிய சங்வர்தன வங்கிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பிரேரணைகள் 1 மற்றும் 2 எதிர்க்கப்பட்டதோடு 3,4, மற்றும் 5 நிறைவேற்றப்பட்டன:-

1. சனாதிபதி மற்றும் பிரதம அமைச்சர் ஆகியோர் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்தல் பொருத்தமானதல்ல

வினைத்திறமை மிக்கதோர் நிர்வாகத்தை மேற்கொள்ளுமுகமாகவும் அமைச்சர்களது செயற்பாடுகளை விமர்சனரீதியாக ஆய்வு செய்வதற்கும் ஏதுவான வகையில் சனாதிபதி மற்றும் பிரதம அமைச்சர் ஆகியோர் எந்தவொரு அமைச்சரவை அமைச்சுப் பதவியையும் வகித்தல் பொருத்தமானதல்லதென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2. ஊடகவியலாளர்களுக்கு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) அரசாங்கக் கணக்குக்குழு (PAC) மற்றும் ஆலோசனைக் குழுக்கூட்டங்கள் அனைத்திலும் பிரசன்னமாயிருக்க அனுமதியளித்தல்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) அரசாங்கக் கணக்குக்குழு (PAC) மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டங்களில் இதுபோன்ற கலந்துரையாடல்கள் மிக விளைபயனுடையதாகவும் அர்த்தபுஷ்டியுள்ளதாகவும் வெளிப்படையானதுமாக அமைய ஏதுவாக இருக்கும் என்பதால், ஊடகவியலாளர்களுக்கு அதில் பிரசன்னமாயிருக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

3. புத்தளம் மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை தாபித்தல்

புத்தளம் மாவட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கிலும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்காகவும் இம்மாவட்டத்தில் பொருத்தமான அமைவிடங்களில் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

4. கேகாலை மாவட்டத்தில் நூதனசாலையொன்றினை தாபித்தல்

கேகாலை மாவட்டத்தில் உள்ள புராதன, கலாசார, தேசிய விழுமியங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் தொல்பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலுமாக நூதனசாலையொன்று தாபித்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

5. இலங்கையில் குறைந்த வசதிகளுடன் கூடிய வீடுகளில் வாழ்கின்ற வீட்டுரிமையாளர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்

இலங்கையில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளாகிய குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதிகள் மற்றும் சமையலறை என்பவற்றை உள்ளடங்கிய வீடொன்றில் வதிவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் பொருட்டு “மஹிந்த சிந்தனை” எதிர்கால நோக்கின் கீழ் மாடிவீடுகளையும் கொத்தணி மாடி வீடமைப்புத் திட்டங்களையும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் அமைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தியமான நிகழ்ச்சித் திட்டமொன்றை உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கை அச்சகச் சபையை இரத்து செய்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ தயாசிறி ஜயசேக்கர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1814 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஏப்ரல் 27 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks