பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2005-10-05
2005, ஒக்டோபர் மாதம் 5ம் திகதி புதன்கிழமை பிற்பகல், பாராளுமன்ற வளாகம் ஒரு புதிய தோற்றத்தைப் பெற்றிருந்தது. பாராளுமன்ற உள்ளகமும், வெளி வளாகமும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சியளித்தன. பாராளுமன்றப் பிரதான வாயிலை ஒட்டிய பாதைகள், இந்துப் பாரம்பரிய முறைகளின்படி வாழை மரங்களாலும் இடையிடையே தென்னோலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற வளாகத்தில் காணப்படுகின்ற சிறிய குளத்தின் மத்தியில் சரஸ்வதி தேவியின் உருவப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இவ்வனைத்து அலங்காரங்களும், ஒழுங்குகளும் கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த 2005ம் ஆண்டு நவராத்திரி பூசைக்கான ஏற்பாடுகளாகும்.
இந்நிகழ்விற்கு வித்திட்டவர்கள் கௌரவ சபாநாயர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ M.சச்சிதானந்தன் ஆகியோராவர். பணிப்பாளர் (சட்டவாக்க சேவைகள்) திரு. M.K. ராகுலன் இந்நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் அனைவரும், இன மத வேறுபாடுகளை மறந்து, இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடத்த ஒன்றிணைந்து உழைத்தனர்.
இப்பூசையை நடத்துவதற்காக இந்து சமய குருக்கள் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். நாதஸ்வர மேள இசை பின்னணியில் ஒலிக்க, நடைபெற்ற இப்பூசை கவர்ச்சியானதாகவும் மனதைக் கவர்வதாகவும் இருந்தது. பாராளுமன்றச் செயலாளர் நாயகம், பிரதி மற்றும் உதவிச்செயலாளர் நாயகர்கள் உட்பட பல உயர் அதிகாரிகள், சபாநாயகர், அமைச்சர்கள் பலர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். இவ்விழா அங்கு கூடியிருந்த அனைவரினது கண்களிற்கும் மனதிற்கும் விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
இந்துப் பண்டிகைகளுள் முக்கியமானது நவராத்திரி. நவராத்திரி என்ற பதம் சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகளைக் குறிக்கும்; அதாவது நவ என்பது ஒன்பதையும் ராத்திரி என்பது இரவையும் குறிக்கும். இப்பண்டிகை வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும்.
நவராத்திரிகளும் மூன்று நாள்கள் கொண்ட மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆதி பராசக்தி அன்னையின் ஒவ்வொரு வெவ்வேறு வடிவங்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகின்றன. முதல் மூன்று நாள்கள்,எங்கள் தூய்மையற்ற எண்ணங்கள், குற்றங்கள், குறைபாடுகள் என்பவற்றை அழிக்கவல்ல துர்க்கை அம்மன் வழிபடப்படுகிறாள். அடுத்த மூன்று நாள்கள் தனது பக்தர்களுக்கு நிலையான செல்வம் அருளும் இலட்சுமி தேவி வழிபடப்படுகிறாள். இறுதி மூன்று நாள்கள், அறிவு நல்கும் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவதில் கழிகின்றன. மாநுட வாழ்வினில் வெற்றியடைய, இத்தேவியர் மூவரது அருளும் இன்றியமையாதவை.எனவே தான் இவ்வொன்பது நாள்களும் இத்தேவியர் மூவரும் வழிபடப்படுகின்றனர். வழமையாக ஒன்பதாவதும் இறுதியானதுமான நாள் அன்றே சரஸ்வதி பூசை இடம்பெறும்.
இந்நாட்டின் சட்டமியற்றும் நிறுவகமான பாராளுமன்றம் சிறப்புறவும் இம்மூன்று அம்சங்களும் அவசியமாகும். மேலும் கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு கொடுக்கப்பட்ட விசேட காணிக்கையான இந்நிகழ்வு, பாராளுமன்றத்தில் நிலவும் உண்மையான ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும்,எல்லோரும் சமம் என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks