E   |   සි   |  

2005-03-06

நத்தார் கீதங்கள் 2005

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், மிகப் பிரமாண்டமானதும், அதிகாரம் மிக்கதுமாக இருந்த உரோம இராச்சியத்தில் சீஸர் ஆகஸ்டஸ் குடித்தொகைப் புள்ளிவிபரம் ஒன்றைத் திரட்டுமாறு ஆணையிட்டார். பலஸ்தீனத்தின் எல்லைப் பிரதேசத்தின் ஒரு மூலையில், பணிவுமிக்க ஓர் இளம் தம்பதியினரான மேரியும் ஜோசப்பும், அத்துணை பிரபலமற்ற நகரான நாசரேத்தை விட்டு விட்டு, யூதேயாவின் பெத்தலகேம் நகரை நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். அவர்களுக்கு விடுதி எதிலும் இடம் கிடைக்காததால், அன்னை மேரி தனது புதல்வனை மாட்டுத் தொழுவத்திலேயே பெற்றெடுத்தார். அதேவேளை, வானதூதர் சில இடையர்களுக்கு , “ அந்தத் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருக்கும் குழந்தைதான் உங்களையும், இவ்வுலகையும் காக்க வந்த இரட்சகர். அவர்தான் கிறிஸ்து நாதர் “ என்றார். நத்தார் பண்டிகை என்பது நிறம், மொழி, இனம் என்பவற்றைக் கடந்தது. அதனால் அது பலராலும் கொண்டாடப்படுகிறது. பல கலாச்சாரங்களையும், பல்வேறுபட்ட மக்களையும் அரவணைக்கும் ஒரு பண்டிகை இதுவாகும்.

இதே செய்தி, நத்தார் தினத்திற்கு ஒரு நாள் முன்தினமன்று, கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் தெரிவிக்கப்பட்டது. கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு, மிகவும் உற்சாகத்துடனும், பொருத்தமானதாகவும் கொண்டாடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னெடுப்பாகும். இது பல கலந்துரையாடல்களின் பின், பலரது அங்கீகாரத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையும், கிறிஸ்தவச் சபைகளின் தேசியப் பேரவையும் இணைந்து இது தொடர்பாகச் செயலாற்றின. கௌரவ சபாநாயகரை இது தொடர்பாக ஊக்கப்படுத்திய முக்கிய மூலகாரணியானது, நத்தார் தொடர்பான நல்லெண்ணத்தை, எங்களின் இந்த எழில்மிகு நாட்டில் வாழும் மக்களின் மத்தியில் பிரபலப்படுத்துவதேயாகும். முதன் முறையாக இவ்வாறான நத்தார் கீதங்கள் நிகழ்ச்சி 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதியன்று நடந்தேறியது.

மெல்லிய இனிமையான இசை வளாகம் எங்கும் பரவ அன்றைய மாலைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அங்கே ஒர் இரம்மியமான சூழலை ஏற்படுத்தியிருந்தன. நத்தார் கீதங்கள் இசைக்கபடுவதற்காக அங்கே தோட்டத்தில் ஒரு மேடை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இயேசு பாலன் பிறந்த காட்சியை சித்திரிக்கும் நோக்கோடு இயேசு பாலன், அன்னை மேரி மற்றும் புனித ஜோசப் போன்று வேடமிட்டவர்களின் அணிவகுப்பு, காண்போரைக் கவரும் வண்ணம் இருந்தது. அத்துடன் இந்த அணிவகுப்பு, பொலிஸ் படையினரின் கலாச்சார பாண்ட் வாத்திய இசைக் குழுவினரால் இசைக்கப்பட்ட பாரம்பரிய இசைப் பின்னணியில், மேளச் சத்தங்கள் முழங்க கண்டிய நடனக் கலைஞர்களின் நடனத்துடன் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. நத்தார் சமய ஆராதனையை வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி. ஒஸ்வால்ட் கோமிஸ் அவர்கள் நடத்தி வைக்க, அருட்தந்தை. பெனடிக்ட் ஜோசப் அவர்கள் விழா நடத்துநராகச் செயற்பட்டார்கள். பின்னர், இக்கண்கவர் அணிவகுப்பு, அன்னை மேரி, புனித ஜோசப், இயேசு பாலன் மற்றும் வான தூதர்களுடன் கூடிய, இயேசு பாலன் பிறப்பைக் கண்முன் கொண்டுவரும் காட்சிக்காக வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர்.

பாரம்பரியமான மற்றும் நவீன பாணியிலான என பல்வேறுபட்ட தரமான நத்தார் பாடல்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆரம்ப நத்தார் கீதங்கள் பிரத்தியேகமாக அருட்தந்தை. ஜேகொம் கொன்சால்வெஸ் மற்றும் அருட்தந்தை. மார்செலின் ஜயகொடி அவர்களிடம் இருந்து பெறப்பட்டவையாக இருந்தன. இவற்றுடன் பல பிரபலமான ஆங்கில, சிங்கள, மற்றும் தமிழ் மொழிகளிலமைந்த நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன. பல்வேறு பட்ட இசைக் குழுக்கள் மற்றும் பாடகர் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட நத்தார் கீதங்களைக் கண்டும் கேட்டும் இரசிக்க அங்கே 2000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர். அன்று பிந்திய மாலை நேரம் பங்குபற்றுநர் ஒவ்வொருவருக்குமான பல பரிசுகளைச் சுமந்தபடி நத்தார்க் களையையும் கொண்டு வந்து சேர்த்த நத்தார் தாத்தாவை எல்லோரும் மிகவும் குதூகலமாக வரவேற்றனர்.

மேன்மைதகு ஜனாதிபதி அவர்கள், கௌரவ. பிரதம அமைச்சர் அவர்கள், கௌரவ. சபாநாயகர் அவர்கள் ஆகியோருடன், பிரதி சமய விவகாரங்கள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வேறு சமயத் தலைவர்கள் என்போரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர். இவ்வாண்டு இந்நிகழ்வு சமய அலுவல்கள் அமைச்சின் கிறிஸ்தவப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதேவேளை பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அவரது பணியாளர்களும் பாரிய முயற்சி எடுத்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திவைத்தனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks