E   |   සි   |  

2006-03-06

சர்வதேசச் சபையின் திபிதக ஆங்கிலப் பதிப்பு கையளிக்கப்பட்ட வைபவம்

2006 மார்ச் 6 ஆம் திகதி, இலங்கை ஸ்ரீ ஜயவர்த்தபுர கோட்டையில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் மிக முக்கியமான விழா ஒன்று நடைபெற்றது. இவ்விழாவில், கௌரவ பாராளுமன்ற சபாநாகயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களின் அழைப்பின் பேரில், தாய்லாந்தின் மாட்சிமை தங்கிய இளவரசி கல்யாணி வதனா க்றொம் லுஆன் நரதிவஸ் ராஜநாகரிந்திர அவர்களின் பிரதிநிதியாக வருகை தந்திருந்த ரியர் அட்மிறல் மாண்புமிகு இளவரசர் புசாண் சாவஸ்திவத் அவர்கள், மேன்மை மிகு இலங்கை ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்களிடம், 40 பாகங்கள் கொண்ட புதிய சர்வதேசச் சபையின் திபிதக ஆங்கிலப் பதிப்பை விசேடமாகக் கையளிக்க, ஜனாதிபதி அவர்கள் அவற்றை, பாராளுமன்றத்தில் போற்றிப் பாதுகாப்பதற்காக, சபாநாயகரிடம் கையளித்தார்.

பாங்கொக்கில் இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற, 2வது உலக திபிதக சபைக் கூட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ சபாநாயகர் அவர்கள், மாண்பு இளவரசியிடம், சர்வதேச திபிதகவை இலங்கைப் பாராளுமன்றத்திற்கு புதிதாகக் கையளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன் விளைவாகவே இந்நிகழ்விற்கான எண்ணக்கரு ஏற்பட்டது.

புத்தர் பெருமானின் உன்னதமான போதனைகள் அடங்கிய புனித திபிதக பாராளுமன்றத்திற்குக் கையளிப்புச் செய்யப்பட்டமையும் அது பாராளுமன்றத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுவதும், உலக வரலாற்றில் மனித குலத்தின் அறிவுசார் பாரம்பரியமாகிய திபிதகவை உலகின் நவீன அரசியல் நிறுவனமொன்றுடன் ஒன்றிணைத்த முதலாவது நாடாக இலங்கையைக் குறித்துக்காட்டுகின்றன. இந்த ராஜ கையளிப்பானது, ஆசியாவில் இருந்து மேற்குலக நாடுகள் வரைக்கும் சர்வதேச திபிதக கையளிப்புக்களுக்கான ஆரம்பத்தையும் குறிக்கிறது.

இலங்கைக்கு, பாளி மொழியிலமைந்த திபிதகவை தாய்லாந்து அன்பளிப்பு செய்வது இது முதற்தடவை அல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர், உலகிலேயே முதன்முறையாக திபிதகவை, 1893 இல் பதிப்பில் உருவாக்கிய சியாம் நாட்டு அரசர் ச்சுளலொங்கோன் ச்சுளச்சொம் க்ளாஓ அவர்கள், சியாம் பதிப்பில் அமைந்த அப்பிரதிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்தார். இவ்வரச அன்பளிப்பை இன்றும் கண்டியில் இருக்கும் புத்தரின் புனித தந்தக் கோவிலில் காணலாம். தற்கால பதிப்பானது, இலங்கை, தாய்லாந்து, பர்மா, லாவோஸ், மற்றும் கம்போடியா நாட்டு எழுத்துப் பாரம்பரியங்கள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியால் உருவானதாகும். இது, 2500 புத்த யுகத்தில் மியன்மாரில் நடத்தப்பட்ட தேரவாத நாடுகளின் மதி மிகு சங்கம் பங்கேற்ற சர்வதேசச் சபையின் உண்மையான வெளிப்பாடாகும். இந்தப் புதிய பதிப்பானது சர்வதேச மொழியான ஆங்கிலத்தில் அமைந்திருப்பதுடன் உலகெங்கும் காணப்படும் வேறு 14 பதிப்புக்களுக்கான குறிப்புக்களையும் கொண்டுள்ளது.

“தற்காலத்தில் இருக்கின்ற பாளி திபிதக பதிப்புக்களிலேயே மிகச் சிறந்ததையே நாம் இன்று இந்த இலங்கைப் பாராளுமன்றத்திலே பெற்றுக்கொண்டோம் என்பதை அறிவிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை” என்று கௌரவ சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் “ திபிதக தரும் போதனைகளிலிருந்தும் இதை தயார்ப்படுத்தி உலகுக்குத் தருவதற்காகத் தாய்லாந்தின் தம்ம சபை பயன்படுத்திய வழிமுறைகளிலிருந்தும் இலங்கைப் பாராளுமன்றம் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை. விரைவில் வெவ்வேறு கட்சிகளை, சமயங்களை, இனங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவமான சமாதானத் தீர்வுக்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்காய் கூடுவார்கள். ஆதலால் இந்த வைபவ ரீதியான பாராளுமன்றத்திற்கான சர்வதேச திபிதக கையளிப்பானது, இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப் பொருத்தமான தருணத்தில் நடந்தேறியிருக்கின்றது.” எனவும் குறிப்பிட்டார்.

விழாவின் போது, அரச அன்பளிப்புகளான சர்வதேசச் சபை திபிதக பதிப்பின் 40 பாகங்களும் பிரதான மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மாட்சிமை பொருந்திய இளவரசி கல்யாணி வதனாவின் அன்பளிப்பு உரை தாயிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது. அன்பளிப்ப்பின் பின் இலங்கையின் மேன்மைமிகு ஜனாதிபதி அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதற்கான உரையை நிகழ்த்தினார். அதன் பின் புதிய திபிதகவிலிருந்து “ரதனசுத்த” பாடல்கள் ஆறு அவற்றின் சிங்கள, தாய், மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களுடன் பாடப்பட்டன. இலங்கை மற்றும் தாய்லாந்து நாட்டுத் தேசிய கீதங்களுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விழா ஏற்பாட்டாளர்கள், ஜனாதிபதியையும் இந்நாட்டு அரசையும் மார்ச் 6ம் திகதியை உலக திபிதக தினமாகப் பிரகடனப்படுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அத்துடன் மார்ச் 6ம் திகதி, கடந்த ஆண்டு, ஆரம்ப சர்வதேச சபை திபிதக ஆங்கிலப் பிரதியை, மாட்சிமை பொருந்திய இளவரசி கல்யாணி வதனா அவர்கள், இலங்கை, ஜனாதிபதி மாளிகைக்கு அன்பளிப்புச் செய்ததன் ஓராண்டுப் பூர்த்தியையும் குறிக்கும்.

அதி வணக்கத்துக்குரிய மகா நாயக்க தேரர்கள், மதிப்புக்குரிய மகாசங்க உறுப்பினர்கள், பிரதம அமைச்சர்,எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர்கள், சட்டமியற்றுவோர் அனைவரும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, இலங்கை வாழ் வெளிநாட்டுத் தூதுவர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், இலங்கை மற்றும் வேறு பௌத்த நாட்டு மதிப்புக்குரிய பெருமக்கள், ஆகியோர் இந்த பெருமையான பிரபஞ்ச சமாதானம் மற்றும் ஞானத்தின் தம்ம அணிகலனை தாய்லாந்து மக்கள் இலங்கை மக்களுக்கு அன்பளிப்புச் செய்த உன்னதமான நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். மாண்புமிகு இளவரசர் புசாண் சவஸ்திவத் அவர்களின் தலைமையில் வந்திருந்த 50 பேர் கொண்ட குழு, தாய்லாந்து தம்ம சபையின் வேந்தர் மேஜர். சுறதஜ் புண்ணா, இலங்கை, சீனா, சிங்கப்பூர், மலேசிய தம்ம சபை உறுப்பினர்கள் என்போரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks