E   |   සි   |  

2006-05-12

தியவண்ண வெசாக் அசிறிய

புத்த பெருமான், தனக்கு, ஒருவர் தானம் செய்யக்கூடிய இரண்டு முறைகள் பற்றிப் போதனை செய்தார். அவையாவன, “ஆமிச” மற்றும் “ப்ரதிபத்தி” என்பனவாகும். இந்த வெசாக் காலத்தின்போது, இப்போதனை, பாராளுமன்றத்திலும் கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் பின்பற்றப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிறந்த குருவின் போதனையைப் பின்பற்ற, அவர் பிறந்த, ஞானம் பெற்ற, உயிர் நீத்த (பரி நிர்வாணம் பெற்ற) நினைவு நாளை விட வேறு எந்தச் சிறப்பான நாள் இருக்கமுடியும்?

“தியவண்ண வெசாக் அசிறிய” என்ற பெயரில், பல்வேறுபட்ட நிகழ்வுகள், சமய முக்கியத்துவம் வாய்ந்ததான, மூன்று நாள்கள் (மே மாதம் 10 இலிருந்து 12 வரை) நடைபெற்றன. வெசாக் கொண்டாட்டங்கள் 10ம் திகதியன்று பிரித் ஓதுதலுடன் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த நாள் மகா சங்கத்தினருக்கு சபாநாயகரின் இல்லத்தில் தானம் அளிக்கப்பட்டது.

வெசாக் போயா தினத்திற்கான நிகழ்ச்சி நிரலானது, சில் அநுஷ்டானம், புத்த பூசை, அடியார்களுக்கான தானம், தம்ம கலந்துரையாடல், தியான நிகழ்ச்சி, பக்தி கீதம், தன்சல் தான நிலையங்கள், மற்றும் பல்வேறு நிகழ்வுகளுடன், பூரணமானதாகக் காணப்பட்டது.

அன்றைய காலை, பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு, வணக்கத்துக்குரிய உதுவே தம்மாலோக தேரர் வழங்கிய மத போதனையுடன் ஆரம்பமானது. இது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வெளிவளாகத்தில் அமைந்திருக்கும் புத்தரின் சிலை மற்றும் ஜயசிறி மகா போதி மரம் என்பனவற்றின் முன்னால் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த அடியார்களுக்கு, அவர்களின் ஆன்ம தேவையைப் பூர்த்தி செய்த ஒர் அமைதியான காலைப் பொழுதாக இது அமைந்தது. அன்றைய காலையின் இறுதி நிகழ்வுகளாக புத்த பூசையும் மதிய நேர உணவுத் தானமும் விளங்கின. மாலை நிகழ்வை, அறிவுக்கு விருந்தூட்டும், வணக்கத்துக்குரிய பிட்டிதூவே ஸ்ரீ தம்ம தேரர், பேராசிரியர் சுமணதாஸ கல்மண்கொட, கலாநிதி. D.V.J. ஹரிஸ்சந்திர மற்றும் கௌரவ சபாநாயகர் கலந்து சிறப்பித்த, தம்ம கலந்துரையாடல் ஆரம்பித்து வைத்தது. சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஹஸந்த ஹெட்டியாரச்சி நடத்தி வைத்த இந்நிகழ்வில், அங்கு கூடியிருந்த அடியார்கள் மிகுந்த ஆர்வமாகப் பங்கேற்றமை இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும். மகரகம புத்த பிக்குகள் பயிற்சி நிலையத்தின் பீடாதிபதியான வணக்கத்துக்குரிய திருகுணாமலயே ஆனந்த தேரர் அவர்கள் தொடர்ந்து நிகழ்ந்த தியான நிகழ்வை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து, மாலை நேர போதி பூசை இடம்பெறவிருந்த, பாராளுமன்ற வளாகத்திற்கு கண்கவர் ஊர்வலமொன்று புறப்பட்டது. இப்பூசை வணக்கத்துக்குரிய திருகுணாமலயே ஆனந்த தேரர் அவர்களினால், பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் ஜயசிறி மகா போதி மரத்தின் முன் நடைபெற்றது.

மாலை நேரம் பாராளுமன்ற மைதானம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல், இரண்டு “தன்சல” தான நிலையங்கள், பக்தி கீதம் என்பன அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கவர்வனவாக இருந்தன. அங்கு நிறுவப்பட்டிருந்த அப்ப தன்சல நிலையமே முதலில் திறக்கப்பட்டது. இங்கே அப்பங்கள் விடியும் வரை பரிமாறப்பட்டன. அங்கு இருந்த அன்ன தான தன்சல நிலையமும் சளைக்கவில்லை. சுமார் 5000 பேருக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் சைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பாராளுமன்ற ஊழியர் பௌத்த சங்கம், அதன் தலைவர் மற்றும் செயலாளரின் தலைமையில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளுடன் வேறு பல உற்சாகமான நிகழ்வுகளும் அங்கே நடந்தேறின. பிரதானமான கவனம் கவரும் அம்சமாக, புத்தரின் சிறந்த ஆட்சிக்கான (தச ராஜ தர்ம) 10 கொள்கைகளைச் சித்திரிக்கும் வெசக் பந்தல் காணப்பட்டது. பாராளுமன்றத்திலும் அதனை அண்டிய இடங்களிலும் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, இதுவே முதன் முறையாகும். அதி மேதகு ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ச அவர்களின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் முற்றுமுழுதான செலவை நவலோக்க கூட்டு நிறுவனங்களின் தவிசாளரான தேசமானி H.K. தர்மதாஸ அவர்கள் ஏற்றுக்கொள்ள, நவலோக விகாரையின் பீடாதிபதியான வணக்கத்துக்குரிய பண்ணல ஞானாலோக தேரர் இந்நிகழ்வின் முக்கிய ஆலோசகராக விளங்கினார். அங்கு வைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தலை கௌரவ சபாநாயகர் மற்றும் அங்கு வருகை தந்திருந்த விசேட அழைப்பினர்களும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இம்முறையும், கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதிச் சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம், மற்றும் பாராளுமன்ற பௌத்த சங்க உறுப்பினர்கள் என்போர் வெசாக் பந்தல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 6 நாள்களும் நல்கிய உதவி அளப்பரியது.

இவ்வைபவத்தின் இறுதி அம்சமாக “பக்தி கீத” நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை வங்கியின் பக்தி கீத இசைக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு தமது இனிமையான குரல்களில் பாடி, அன்று அந்த மைதானத்தில் குழுமியிருந்தவர்களின் பொருட்டு அங்கே ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்தினர்.

2550வது புத்த ஜயந்தி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வாண்டில், இவ்வைபவத்தை சிறப்பாக நிகழ்த்தியதன் மூலம் பாராளுமன்றம் தனது பங்களிப்பை நிலைநாட்டியுள்ளது. முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், நாட்டின் அதி உயர்ந்த சட்டவாக்க நிறுவனம் என்ற வகையில் இவ்வகையான நிகழ்வுகள், பாராளுமன்றம், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றும் சேவைகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks