E   |   සි   |  

2006-09-27

பாராளுமன்றத்தில் நவராத்திரி 2006

துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி தேவிகளின் அருள் வேண்டி அநுஷ்டிக்கப்படும் நவராத்திரி விழா பாராளுமன்றத்தில் மூன்றாவது தொடர் ஆண்டாக கொண்டாடப்பட்டது.

மிகப் பிரமாண்டமான சரஸ்வதி பூசை ஒன்று, கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களினால், பாராளுமன்றச்செயலாளர் நாயத்தின் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் ஒழுங்குசெய்யப்பட்டு, 2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இதற்கான அநுசரணையை வழங்கியிருந்தது.

கொழும்பு பொன்னம்பலவாணேச்சர கோவிலின் இராமச்சந்திர ஐயர் ஜெயசங்கர் அவர்களும், ஜெகநாத குருக்கள் ஜனார்த்தனன் அவர்களும் இப்பூசையை நடத்தி வைத்தனர். கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதிச் சபாநாயகர், படைக்கல சேவிதர் மற்றும் அவரது உதவியாளர்கள், பாராளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட பாராளுமன்ற உயர் அதிகாரிகள் பலரும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் ஆகியோர் இவ்வைபவத்தைக் கலந்து சிறப்பித்தனர். பூசையைத் தொடர்ந்து பரத நாட்டியக் கலை நிகழ்ச்சியும் அரங்கேறியது.

கலாசூரி (திருமதி) வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும், திருமதி. சுபித்தா ஞானராஜா அவர்களின் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் கண்கவர், மனங்கவர் அம்சங்களாகத் திகழ்ந்தன.

ஒன்பது இரவுகளைக் குறிக்கும் நவராத்திரியின் முக்கியத்துவமானது, வீரம், செல்வம், கல்வி வேண்டி முறையே துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை நினைந்து விரதம் இருந்து வழிபடுதலாகும். துர்க்கா தேவியுடன் ஆரம்பித்து ஒவ்வொரு தேவியும் மூன்று நாள்கள் வழிபடப்படுகிறாள். இவையே ஒன்பது நாள்கள். விசேடமாக இறுதி மூன்று நாள்களான கல்வி நல்கும் சரஸ்வதி தேவியை வழிபடும் நாள்கள் கலையம்சம் பொருந்திய பாரம்பரியம் பேணும் நிகழ்வுகள் நிறைந்தவை.

சமய வேறுபாடுகளை மறந்து, இந்நாட்டின் பல்வேறு இன, சமயத்தினரும், இவ்விழாவைக் கொண்டாடக் கூடியிருந்த காட்சி கண்களுக்கும் மனதிற்கும் இனிமையளிக்கத் தவறவில்லை.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks