பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2006-12-22
கடந்த ஈராண்டுகளாக, கௌரவ சபாநாயகரினால் வித்திடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் நத்தார் கீதங்கள் வைபவம், 2006 ஆம் ஆண்டில் வித்தியாசமான ஒரு திருப்பத்தைக் கண்டது. இம்முறை இவ்வைபவத்திற்கு “ தியவண்ண நத்தள் கீ மிகிர 2006” ( அதாவது தியவண்ண நத்தார் கீதச் சுவை 2006) என விசேடமாகப் பெயரிடப்பட்டது. அத்துடன், இம்முறை பாராளுமன்றத்துடன் இணைந்து மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்கள் அமைச்சு இவ்வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தது. இது எமது காலத்தின் ஒரு தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்தது.
வழமை போலவே, வெளி வளாகத்தில் நடைபெறும் பிரதானமான நத்தார் கீத ஆராதனைக்கு முன்னர் நத்தார் சமய ஆராதனை நடைபெற்றது. வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி. ஒஸ்வால்ட் கோமிஸ், கத்தோலிக்க மதத் தலைவர்கள், மதப் பெரியவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தின் பிரதம அதிதியாக முதற்பெண்மணி. திருமதி. சிராந்தி ராஜபக்ச கலந்து கொண்டார். அத்துடன், கௌரவ சபாநாயகர், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்கள் அமைச்சரான, கௌரவ. அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களும், வேறு பல அதிதிகளும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பாராளுமன்றச் செயலகப் பணியாளர்களும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சமுகந் தந்திருந்தனர்.
இவ்வைபவத்தின் முதற்பாதியில், கருத்தாழமிக்க, பிரபலமான பல சிங்கள மற்றும் தமிழ் நத்தார் கீதங்களுடன் சமய ஆராதனை இடம்பெற்றது. அத்துடன் விசேட ஜெப ஆராதனையும் நடைபெற்றது. இயேசு பாலன் பிறந்த காட்சியைச் சித்திரிக்கும் விதத்தில் இயேசு பாலன், அன்னை மேரி மற்றும் பரிசுத்த ஜோசப் போன்று வேடமிட்டவர்களின் பாத்திரக்காட்சி, அங்கு வருகை தந்த அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்று.
இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, அருட்தந்தை. பெனடிக்ட் ஜோசப் எழுதிய “ நத்தள் சிரித்த சமகின் கத்தோலிக்க சபாவ ஹெட்ட தவச” என்ற நூலும் வெளியிடப்பட்டது. இவருக்கு இலக்கியத்துக்கான விசேட தேசிய விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆராதனையின் போது, அங்கு வருகை தந்திருந்த விசேட அதிதிகளுக்கு இந்நூலின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. சமய ஆராதனையின் பின் கண்களுக்குக் குளிர்ச்சியான நத்தார் கீத ஆராதனை ஆரம்பமானது. இது உண்மையிலேயே சூட்டப்பட்ட பெயருக்கேற்ப சுவைமிக்கதாகவே இருந்தது.
வரவு செலவுத் திட்ட காலத்தில், கடின சேவையாற்றிக் களைத்திருந்த பாராளுமன்றப் பணியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், தொடர்ந்து இடம்பெற்ற நத்தார் இரவு நேர விருந்து உபசாரம் அமைந்திருந்தது. அப்பங்கள், பல சிற்றுண்டி வகைகள், இனிப்புக்கள் என்பன பரிமாறப்பட்டன. நத்தார் தாத்தாவின் பிரசன்னம் அங்கு கூடியிருந்த அனைவரையும் குறிப்பாகச் சிறார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. அது மட்டுமன்றி, பாராளுமன்றப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு திருமதி. லொக்குபண்டார பெறுமதிமிக்க, பல பரிசில்களையும் வழங்கினார். அங்கு வந்திருந்த அனைவரும், நம்பிக்கை தரும், தெய்வீகமான,மகிழ்ச்சிகரமான நத்தார் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டதுடன், சமாதானக் காற்றையும் அங்கே சுவாசித்தனர்.
இவ்வைபவத்தின் நிகழ்வுகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு நத்தார் இரவும் அடுத்த நாளும் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பனவற்றில் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks