E   |   සි   |  

2007-05-01

தியவண்ணா வெசாக் உதானய

உட்டானேனப்பமாதேன – ஸஞ்ஞ்மேன தமேன ச
தீபங் கயிராத மேதாவீ – யங் ஓகோ நாபிகீரதி

அறிவுள்ளவர்கள், தங்கள் முயற்சியினாலும், விழிப்பினாலும், புலனடக்கத்தினாலும், ஒழுக்கத்தினாலும், வெள்ளத்தினால் அழிக்கப்படாத அரண் அமைத்த தீவைப்போல தங்களைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

(தம்மபதம் - அப்பமாத வக்கோ)


வெசாக் 2007 ஐ கொண்டாடும் முகமாக, கௌரவ சபாநாயகரின் இல்லத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும், மற்றும் தியவண்ணா ஓயாவை அண்டிய பிரதேசங்களிலும், தொடர் சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தன. கொள்கைகளுக்கு (ப்ரதிபத்தி) முக்கியத்துவமளித்து நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு “தியவண்ணா வெசாக் உதானய” என்று பெயர் சூட்டப்பட்டது. சில் அனுஷ்டானம், புத்த பூசை, தியான நிகழ்ச்சிகள், தம்ம உரையாடல்கள், தம்ம உரை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சிகளில் பல பாராளுமன்ற ஊழியர்களும், பாராளுமன்றத்தின் ஏனைய ஊழியர்களும், மற்றும் பல பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கான சில் அனுஷ்டானமும், காலை புத்த பூசையும் வண. கலாநிதி. சதர்மசூரி வலேபொட குணசிறி தேரர் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது. இது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜய ஸ்ரீ மகா போதி அரச மரத்தின் முன் இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற, “இலங்கையர்களுக்கு வெசாக் போயா தினத்தின் முக்கியத்துவம்” என்பது பற்றிய, முதலாவது தம்ம உரையானது அ(g)க்கமகா பண்டித வண. கொட்டுகொட தம்மவாச அணுநாயக்க தேரர் அவர்களால் வழங்கப்பட்டது. காலை தானத்தைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ இல்லத் தோட்டத்தில் மூலிகை மர நடுதலும் அதனைத் தொடர்ந்து இல்லத்தினுள் புதிதாக காட்சிக்கு வைக்கப்பட்ட புத்த சிலைகளின் திரை நீக்கமும் இடம்பெற்றன. அலரி மாளிகையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தம்ம உரையை செவிமடுத்த பின்னர், பக்தர்கள் வண. கறவிலக்கொட்டுவே தம்மதிலக தேரர் நடத்திய தியான நிகழ்வில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற புத்த பூசையையும் இத்தேரரே நடத்தினார். புத்த பூசை முடிவுற்ற பின்னர் சுமார் ஐம்பது பௌத்த பிக்குகளுக்கு “பிண்டபாத” வில் தானம் வழங்கப்பட்டது. சபாநாயகர் உட்பட பக்தர்கள் ஒன்றுசேர்ந்து இத்தானத்தை வழங்கினர்.

மதிய நேர தானத்தைத் தொடர்ந்த நேரப்பொழுது சற்று ஓய்வானதாகக் காணப்பட்டது. இவ்வேளையில், சில் அனுஷ்டானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கௌரவ சபாநாயகர் அவர்கள், தம்மபதம் மற்றும் ஷ்ரதாஞ்சலி நூல்களை வழங்கினார். பின்னர், தம்மதிலக தேரர் அவர்கள் நடத்திய தம்ம உரை மற்றும் தியான நிகழ்ச்சி என்பனவும் “தொறமண்டலாவ” தம்ம கலந்துரையாடலும் இடம்பெற்றன. புலமைமிக்க “தொறமண்டலாவ” சபையை, வண.பிட்டிதுவே சிறிதம்ம தேரர், வண.கறவிலகொட்டுவே தம்மதிலக்க தேரர், பேராசிரியர். சுமணதாச கல்மண்கொட, கௌரவ சபாநாயகர் ஆகியோர் அலங்கரித்தனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்குபற்றியிருந்த அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பும் செய்யப்பட்டது. வண. ராஜகீய பண்டித ரதாவதுன்னே ஞானவிமல தேரர் மாலை நேர தம்ம உரையாற்றியதைத் தொடர்ந்து, சபாநாயகரின் வதிவிடத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீ மகா போதி அரச மரத்தடியில் “கிலன்பஸ” புத்த பூசையும் இடம்பெற்றது.

சில் அனுஷ்டானத்தின் நிறைவம்சமும் மாலை போதி பூசையும் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதி அரச மரத்தடியில் நடைபெற்றன. இவற்றைக் காண்பதற்காக பக்தர்கள், சபாநாயகரின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் இருந்து ஊர்வலமாக பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். வண.எலிகேவெல ஷீலானந்த தேரர் நடத்திய இப்பூசையில் பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சபாநாயகரும் கலந்து கொண்டனர். அன்று மாலை பாராளுமன்ற மைதானம் மற்றும் தியவண்ணா ஓயாவை அண்டிய பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இவற்றுள், “பக்தி கீதா”, “தன்சல”, மற்றும் வெசாக் கூடுகளின் கண்காட்சி என்பன முக்கிய இடம் பெற்றன. வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களின் கண்காட்சியே முதலில் ஆரம்பித்தது. பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இக்கண்காட்சி, அந்த மைதானத்திற்கு பேரழகைக் கொடுத்தது. இதன் பிறகு, அப்பம் மற்றும் அன்னம் பரிமாறப்பட்ட “தன்சல” தான கூடாரத்தை கௌரவ சபாநாயகரும் மற்றும் அங்கு வந்திருந்த கௌரவ விருந்தினர்களும் ஆரம்பித்து வைத்தனர். இம்முயற்சிக்கு, கடுவலை பிரதேசச் சபைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் சுனில் டிரேடர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சுனில் முத்துமால அவர்கள் அநுசரணை வழங்கியிருந்தார். பலரின் கவனத்தைக் கவர்ந்த “பக்தி கீதா” நிகழ்ச்சி அடுத்து இடம்பெற்றது. இது தியவண்ணா ஓயவில், ஒரு படகில் அரங்கேற்றப்பட்டது. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தியவண்ணா ஓயாவின் மத்தியில் நிறுத்தப்பட்டிருந்த இப்படகு, கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு, இலங்கைக் கடற்படை என்பவற்றின் கீழ் உள்ள அரசத் திணைக்களங்களின் இசைக் குழுக்கள் இந்த “பக்தி கீதா” நிகழ்வை நடத்தின. இந்நிகழ்விற்கான பின்னணி இசை, கடற்படையினரின் பாண்ட் வாத்திய இசைக்குழுவினரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களில் கௌரவ சபாநாயகரும் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

வெசாக் போயா தினம் முழுவதும், பல்கலைக் கழக மாணவர்களுக்காக, பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட அற விழுமியங்கள் பற்றிய செயலமர்வு மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாராளுமன்றச் சபாநாயகர் அலுவலகம், சமய அலுவல்கள் மற்றும் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு, மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு, கொழும்புப் பல்கலைக் கழக மாணவ ஆலோசகர் அலுவலகம் மற்றும் கலைப் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து, கொழும்புப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.கமல் வலேபொட அவர்கள் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்விற்கு பௌத்த வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் சங்கம் அநுசரணை வழங்கியது. இப்பட்டறையானது உரைகள், பிரசங்கங்கள், தம்ம உரைகள், தியான நிகழ்வுகள் மற்றும் பௌத்த கலாசார அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த இச்செயலமர்வு மிகவும் விரிவானதொன்றாக விளங்கியது.

அடுத்த நாள் அன்று, வெசாக் போயா தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களின் கண்காட்சி, “தன்சல” என்பனவற்றுடன், கல்வி அமைச்சின் பணிப்பாளர்களுள் ஒருவரான விஷாரத திரு.எட்வேர்ட் ஜயக்கொடி அவர்கள் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் நடத்திய “பக்தி கீதா” நிகழ்வும் இடம்பெற்றன. புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெற்றமை மற்றும் சமாதி அடைந்தமை என்பவற்றின் 2551ம் வருட ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடர் நிகழ்வுகளுக்கு, பாராளுமன்ற பௌத்த சங்கம், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, சமய அலுவல்கள் மற்றும் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு, கலாசார அலுவல்கள் அமைச்சு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை, கடுவலை பிரதேச சபை மற்றும் மகரகம மாநகர சபை என்பன நல்கிய ஆதரவும், வழிகாட்டலும் அளப்பரியது. மேலும், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தினர் வழங்கிய ஊடக அநுசரணையும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks