E   |   සි   |  

2007-10-19

கலைமகள் விழா – 2007

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கலைமகள் விழா, இவ்வாண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்வி, செல்வம், வீரம் வேண்டி முப்பெருந்தேவியரையும் தொழும் இவ்விழாவை, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் பொருட்டு, சட்டமியற்றும் சபையான பாராளுமன்றத்திலும் கொண்டாட வேண்டும் என்பது கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களின் விருப்பமாகும். சபாநாயகரின் முயற்சியின் பயனாக மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அநுசரணையுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவையொட்டி, ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நந்திக் கொடிகளும், குருத்தோலைத் தோரணங்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பாராளுமன்றக் கட்டடத்தின் பிரதான வாயிலின் முன், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பீடமொன்றில் முப்பெரும் தேவியரின் திருவுருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. பீடத்தின் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கென மேடையொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

விழா அன்று காலை, கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களுடன், கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரும், பாராளுமன்ற ஊழியர்களும், மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கள ஊழியர்களும் அங்கு கூடியிருந்தனர்.

காலை 9:30 மணிக்கு, “நாதஸ்வர இசையருவி” , திரு. வி.கே. பஞ்சமூர்த்தி மற்றும் குமரன் இசைக்குழுவின் மங்கள இசையுடன் விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பூசை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு, கொச்சிக்கடை, ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர ஆலயக் குருக்கள்களான இராமச்சந்திர ஐயர் ஜயசங்கர், சிவ ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் பிரதீபன், சிவஸ்ரீ பாலசுந்தரம் நிவேதனன், சிவஸ்ரீ பாலசுந்தரம் சிந்துஜன் ஆகியோர் இப்பூசையை சிறப்புடன் நடத்தினர். தெஹிவளை விஷ்ணு ஆலயத்தைச் சேர்ந்த பிரம்ம ஸ்ரீ வேங்கட சுப்பிரமணியக் குருக்களும் இப்பூசையில் முக்கிய பங்காற்றினார்.

பூசையைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முதலாவது அம்சமாகக் கொழும்பு, அபிநய ஷேத்திராவைச் சேர்ந்த திவ்யா சிவநேசன், மற்றும் கீத் டி சில்வா அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை, கவின்கலாலயத்தைச் சேர்ந்த, பேபிஷைலா பேபிசிங்ஙோ அவர்களது மாணவிகளின் மோகினி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. வெள்ளை நிற உடையுடன், இந்தியாவின் கேரள மாநிலக் கலைவடிவங்களில் ஒன்றானதும், இலங்கையில் அதிகம் பிரபல்யமில்லாததுமான இந் நடன வடிவத்தை அங்கு கூடியிருந்த அனைவரும் வெகுவாக இரசித்தனர்.

அடுத்து, கண்டி, கலாசமர்ப்பண நிருத்தியஷேத்திரா மாணவர்களின் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இராமாயணத்தின் யுத்த காண்டத்தை, நடனக்கலைஞர்கள் திறமையாகச் சிருஷ்டித்து இந்நாட்டிய நாடகத்தைப் படைத்தனர். செல்வி. பிரஷாதினி குமாரசுவாமி மற்றும் செல்வி. சமந்தி கங்கா திலகரத்ன ஆகியோர் இந்நாட்டிய நாடகத்தை நெறியாள்கை செய்திருந்தனர்.

“நாதஸ்வர இசையருவி” , திரு. வி.கே. பஞ்சமூர்த்தி , திரு. P. குமரேஷ், திரு. இரட்ணம் இரட்ணதுரை, திரு. A. சந்திரமோகன், திரு. A. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து வழங்கிய “பல்லியம்” எனும் இசை விருந்து, இந்நிகழ்வில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

இறுதி நிகழ்வுகளாக திருகோணமலை, கவின்கலாலய மாணவர்களின் கிராமிய நடன வடிவங்களான காவடி மற்றும் கரகாட்ட நடனங்கள் இடம்பெற்றன. கரகங்களைத் தலையில் வைத்து அவை வீழ்ந்து விடாமல் கவனமாகவும், சிறப்பாகவும் நடனமாடிய அம்மாணவியரின் திறமை அனைவரது பாராட்டுதல்களையும் பெறத் தவறவில்லை.

விழா முடிவில், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கௌரவ. சபாநாயகர் அவர்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்ட பகவத் கீதை நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

இன, மத பேதங்கள் மறந்து அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பங்கேற்ற மற்றுமோர் ஆன்மீக, கலை நிகழ்வாக இது அமைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks