E   |   සි   |  

2008-05-19

தியவன்னாவின் வெசாக் உதயம் - 2008

காலை இளம் கதிரவனின் கதிர்களால் சபாநாயகரது உத்தியோகபூர்வ இல்லத்தின் முற்றம் ஒளிபெற்று விளங்குகிறது. தியவன்னாவின் நீரை வருடி வரும் குளிர் காற்றில் சுற்றிலுமுள்ள மலர்களின் சுகந்தம் கலந்துள்ளது. பறவைகளின் கீத நாதம் சுற்றிலும் நிறைந்துள்ளது. ஐம்புலன்களையும் தொடுகின்ற உணர்வுகள் பரந்துள்ளன. வெள்ளை ஆடைகளைத் தரித்திருப்பவர்கள் நாள் முழுதும் புலன்களை அடக்கியிருக்கும் நோக்கத்துடனேயே இங்கு கூடியுள்ளனர்.

2008 மே மாதம் 19 ஆந் திகதி வெசாக் போயா தினம் காலை கெளரவ சபாநாயகரது உத்தியோகபூர்வ இல்லத்தின் அயற்புரத்தில் காணக்கூடியதாயிருந்த காட்சியே இது. முன்னைய இரு ஆண்டுகளைப் போன்றே இவ்வாண்டும் 2552வது வெசாக் உற்சவத்தை முன்னிட்டு சபாநாயகரது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாராளுமன்ற அயற்புரத்தைத் தழுவியதாக சமய நிகழ்ச்சித் திட்டங்கள் பல ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

வண. கலாநிதி வலேபொட குணசிறி தேரர் வருகை தந்திருந்தோரை போயா தின அட்ட சீலத்தை அனுஷ்டிக்கச் செய்து, காலை புத்தர் வழிபாட்டை நெறிப்படுத்தினார். அதன் பின்னர் சீலம் அனுஷ்டித்தோருக்கு கோட்டே மற்றும் மஹரகம நகர சபைகளின் தலைவர்களால் காலை ஆகாரம் வழங்கப்பட்டது. அதனையடுத்து சீலம் அனுஷ்டித்திருந்த உபாசகர்கள் மன ஒருமைப்பாட்டின் பொருட்டு முற்பகல் வேளையில் தியானம் அனுஷ்டித்தனர். அனைத்து உபாசகர்களாலும் தம்ம சக்கப்பவத்தன சூத்திர போதனை வாசிக்கப்பட்டதன் பின்னர் வண. கரவிலகொட்டுவே தம்மதிலக்க தேரரது தலைமையில் பகல் புத்தர் பூசைக்கு முன்னர் அரை மணித்தியாலம் தம்மபதம் வாசிக்கப்பட்டது. இங்கு தம்மபத நூல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் தம்மபத சமூகமொன்றை உருவாக்குதல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மதிய அன்னதானத்தின் பின்னர் சீலம் அனுட்டித்த முதிய அடியார்களை முதன்மையாகக் கொண்ட பாடசாலைப் பிள்ளைகள் கூட்டாக “ லோவெட சங்கராவை ” யின் கவிதைகளைப் பாடினர் . அதன் பின்னர் இடம்பெற்ற தியான நிகழ்ச்சி கரவில கொட்டுவ தம்மதிலக்க தேரரால் நெறிப்படுத்தப்பட்டதோடு தியானத்தின் பின்னா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியூடாக ஒலிபரப்பப்படுகின்ற “ தினுவாநம் தெலொவம தினுவாமய் ” பௌர்ணமி தின தர்ம நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. “ புஹுதுன்பவ இக்மவா யேம ” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற மேற்படி நிகழ்ச்சியில் சங்கைக்குரிய கொஸ்வத்தே அ ரி யவிமல தேரரருடன் கலாநிதி தர்மசேன ஹெட்டிஆரச்சி அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ சபாநாயகர் அவர்களே அதனை நெறிப்படுத்தினார் . இத்தடவை வெசாக்கினைக் கொண்டாடுமுகமாக தயாரிக்கப்பட்ட “ சித்தசமாதி ” வெசாக் மஞ்சரி சபாநாயகர் அவர்களால் சங்கைக்குரிய தேவாலேகம மேதானந்த தேரரை உள்ளிட்ட குழுவினருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட பின்னர் “ தொரமடலாவ ” நேரடி சிறப்பு தர்ம சம்பாசனை நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. இதன் புலமைசாலிகள் குழு சங்கைக்குரிய தேவாலேகம மேதானந்த தேரர் . சங்கைக்கு ரி ய கரவிலகொட்டுவே தம்மதிலக்க தேரர் மற்றும் கௌரவ சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார ஆகியோரைக் கொண்டதாக அமைந்ததோடு இறுதியில் குழுமியிருந்த பக்தர்களுக்கு கேள்வி கேட்பதற்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு அன்றையதினமே இரவு பத்து மணிக்கு சுயாதீன தொலைக்காட்சி சேவையூடாக ஒளிபரப்பப்பட்டது.

சுபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள போதிவிருட்சத்தினருகில் மாலைநேர பானவகை போதி பூஜை நடத்தப்பட்டு சீலம் அனுட்டித்த அனைவரும் “ பட்டான தேசானாவ ” உச்சரித்துக் கொண்டு நடைபவணியாக பாராளுமன்ற வளவில் நாட்டப்பட்டுள்ள போதிவிருட்சத்தை நோக்கி வந்தனர் . இங்கு தம்ம சக்கப்பவத்தன சூத்திரத்தைப் பாராயணம் செய்த பின்னர் சீலம் நிறைவு செய்யப்பட்டு போதி பூஜை நடத்தப்பட்டு துன்சூத்திரம் பாராயணம் செய்தலும் இடம்பெற்றது.

மாலைப் பொழுதில் பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தைச் சார்ந்ததாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் முதலாவதாக பாடசாலை பிள்ளைகளின் வெசாக் தீபக்கூட்டு கண்காட்சியும் போட்டியும் இடம்பெற்றது. இக் கண்காட்சி வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாளன்றும் நடைபெற்றது. ஆதன் பின்னரே வெசாக் மகா அன்னதானசாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதில் கௌரவ சபாநாயகர் உள்ளிட்ட பல அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் . கடந்த வருடத்தைப் போலவே இத்தடவையும் தானசாலைக்காக சுனில் டிரேடர்ஸ் உரிமையாளர் திரு.சுனில் முத்துமால அவர்களே அனுசரணை வழங்கினார் . ஒரே தடவையில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவருந்தக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘ தன்சல ’ தானத்துக்கு மாலை நேரம் தொடக்கம் அதிகாலை வரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அன்றைய தினத்தின் இறுதி அங்கமாகிய பக்தி கீதங்கள் அதனை அடுத்து ஆரம்பமாயின. இதற்கென தென் மாகாண சபையின் சமூக சேவைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பழைய பிரபல்யமான பௌத்த கீத போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட முதியோர்களின் பாடல், வாத்திய விருந்தும் தேவி பாலிகா வித்தியாலய வாத்தியக் குழு அடங்கலான பாடசாலை மாணவ, மாணவிகளின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்கது. “ தியவன்னா வெசக் பெதி கீ சரணிய ” எனப் பெயரிடப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளின் பக்தி கீதங்கள் நிகழ்ச்சியை உதவிக் கல்விப் பணிப்பாளர் விஷாரத திரு.எட்வட் ஜயக்கொடி நெறிப்படுத்தினார்.

இதற்கிடையில் அன்று காலை தொடக்கம் மாலை வரையில் பாராளுமன்ற நினைவுகூடத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கான மாணவர் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சுமார் நூறு பல்கலைக்கழக மாணவ மாணவியர் கலந்து கொண்ட இந்த செயலமர்வு பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம், பல்கலைக்கழக மாணவ மதியுரைச் செயலகம், கலாமன்றம் மற்றும் பௌத்த மாணவர் சகோதர சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்தச் செயலமர்வில் விரிவுரைகள், மத போதனைகள், மத கலந்துரையாடல் மற்றும் தியான நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

“ தியவன்னாவின் வெசக் உதயம் - 2008 ” நிகழ்ச்சித் தொடரை மிகவும் உன்னதமான முறையில் ஏற்பாடு செய்தமை தொடர்பாக பாராளுமன்ற பௌத்த சங்கம், ஊடக மற்றும் தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்களையூம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை, மஹரகம நகர சபை, கடுவெல பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி நிறுவனங்களையும் அவற்றின் மூலம் கிடைத்த ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டலையும் இங்கு விசேடமாகக் குறிப்பிடவேண்டும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks